ஒரு தமிழனாக, ஒரு முஸ்லீமாக, ஒரு தலைவனாக, மாந்தநேயம் உள்ள மனிதனாக எப்படி வாழ வேண்டும் என்ற இலக்கணங்களைத் தனக்குத் தானே வகுத்துக் கொண்டு,வாழந்துகாட்டிய பெருமகன் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள்.

 

1395816_10153390300330198_2122624723_n

14.9.49 அன்று அரசியல் நிர்ணய சபை கூடி இந்தியாவின் தேசிய மொழி பற்றி விவாதித்தபோது இந்தியாவின் தேசிய மொழியாக இருக்கும் தகுதி தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு என ஆணித்தரமாக எடுத்துரைத்தார். வரலாற்றின் பொன்னேட்டில் அன்று அவர் பொறித்துச் சென்ற வைர வரிகள் இவை:

“ஒரு மொழி இந்திய மொழியாக மட்டும் இருந்தால் போதாது. அம்மொழி இந்நாட்டின் பழமையான மொழியாகவும் இருக்க வேண்டும். அத்தகைய மொழியையே இந்நாட்டின் தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்து இங்கே முன்வைக்கப்பட்டது.

அக்கருத்தை ஏற்று அரசியல் நிர்ணய சபை தேசிய மொழி பற்றிய முடிவை எடுக்குமானால், ஒரு உண்மையை இச்சபை முன்பு துணிவோடு கூற விரும்புகிறேன். இந்த நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானதும், ஆரம்ப காலத்தில் இருந்து பேசப்பட்டு வரும் மொழியாக இருப்பதும் தமிழ்தான். எனது கூற்றை எந்த வரலாற்று ஆசிரியராலும் மறுக்க முடியாது. எந்தப் புதை பொருள் ஆராய்ச்சியாளராலும் எதிர்க்க முடியாது. உயர்தரமான இலக்கிய வளங்களும், நயங்களும் நிறைந்த மொழி தமிழ். இது எனது தாய் மொழி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அம்மொழியை நான் நேசிக்கிறேன்.

அம்மொழியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். பழமையான மொழியைத்தான் இந்நாட்டின் தேசிய மொழியாக்க வேண்டுமென்றால் இந்தியாவின் தேசிய மொழியாகத் தமிழைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்”

ஆனால், விவாத முடிவில் இந்தியை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்பது வாக்கெடுப்புக்கு விடப்பட்டு, வாக்குககுள் இருதரப்புக்கும் சரிசமமாகப் பிரிந்த நிலையில், அவைத் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் தனது ஒரு வாக்கை இந்திக்கு சாதகமாக அளித்ததால் இந்தி அலுவலக மொழியாய் அரியணை ஏறியது.

26.4.63 அன்று மக்களவையில் அவர் உரைத்தார்:ஆட்சி மொழி பற்றிய விவாதம் மக்களவையில் வரும்போதெல்லாம், காயிதே மில்லத் இந்திக்கு எதிரான தனது கருத்தை ஆணித்தரமாக வெளியிடத் தயங்கியதே இல்லை.

தமிழ் மொழிக்காக மட்டுமல்ல. மாநிலப் பிரிவினையின்போது தமிழன் இழந்த மண்ணுக்காகவும் காயிதே மில்லத் நாடாளுமன்றத்தில் வாதிட்டார். தேவிகுளம், பீர்மேடு தமிழனிடமிருந்து பறிபோனபோது, குளமாவது மேடாவது என்று காமராசர் குதர்க்கம் பேசினார். ஆனால் 24.12. 1955 அன்று நாடாளுமன்ற மேலவையில் மாநில எல்லைகள் சீரமைப்புக் கமிஷன் அறிக்கை மீது நடந்த விவாதத்தின் போது தேவிகுளம், பீர்மேடு தமிழ்நாட்டின் பகுதிகள் என காயிதே மில்லத் வாதிட்டார். திராவிடச் சிக்கல், இந்தியச் சிக்கல் எதுவும் இன்றி தமிழர் பக்கம் நின்று கச்சிதமாக வாதிட்டார் இந்த தென்பாண்டித் தமிழ் மறவர்.

நான் ஒரு தமிழன். எனது தாய்மொழி தமிழ். தமிழ்நாட்டிற்கும், ஆந்திராவுக்கும் இடையில் எல்லைப் பிரச்சினை. அதேபோல கேரளாவிலும் எல்லைப் பிரச்சினை. தேவிகுளம், பீர்மேடு பிரச்சினை. அப்பகுதியில் தமிழ் மொழி பேசுபவர்களே பெரும்பான்மை.

தேவிகுளம், பீர்மேடு தமிழ்நாட்டின் பகுதி. தமிழ்நாட்டை ஒட்டியே அது இருக்கிறது. தமிழர்களே அங்கு பெரும்பான்மையாக வாழவும் செய்கிறார்கள். எனவே இப்பகுதி தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும். அதுவே நியாயம்”

இங்கே நாம் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். காயிதே மில்லத் அவர்கள் அகில இந்திய அளவில் செயல்பட்டு வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய தலைவர். எல்லா மாநிலங்களிலும் அவர் அரசியல் செய்தாக வேண்டும். குறிப்பாக தமிழக முஸ்லிம்களை விடவும், கேரளா முஸ்லிம்கள் அவரது வாக்கைக் கட்டளையாக ஏற்றுச் செயல்படுபவர்கள். அப்படியிருந்தும் தேவிகுளம், பீர்மேடு பகுதியை கேரளாவுடன் இணைக்கக் கூடாது என்று ஒரு தமிழனாய் நாடாளுமன்றத்தில் வாதிட்டார்.

பலே தமிழன் ஐயா காயிதே மில்லத் அவர்கள் …உம் புகழ் தமிழர்களிடம் என்றும் வாழ்க ….