அகிம்சை பாதையில் செல்லும் அன்னா ஹசாரேவின் அறப் போராட்ட எழுச்சி முதல்…தமிழர்கள் மூவருக்கு வழங்கப்பட்டிருக்கும் தூக்குத்தண்டனை வரை, பேசத் தொடங்கினால் தமிழருவி மணியன் அனல்அருவி மணியனாகிறார்.

‘‘அன்னா ஹசாரே போராட்டத்தின்மூலம் இரண்டு நல்ல விஷயங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ளன. காந்தியம் என்பது செல்லாத காசு என்று எல்லாரும் முடிவெடுத்த நிலையில், அந்த காந்தியம் ஒன்றுதான் ஒரு அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மாற்றத்தை உருவாக்கும் வலிமை மிக்க ஆயுதம் என்பதை இந்தப் போராட்டம் மீண்டும் நிரூபித்துள்ளது.

ஊழல், இந்தியாவில் சகல தளங்களிலும் மிக ஆழமாக வேரூன்றியுள்ளது. இதுவரையில் உறங்கிக்கொண்டிருந்த இந்தியாவின் ஆன்மாவை ஊழலுக்கு எதிராக விழித்தெழச் செய்து  போர்க் குணத்துடன் இளைஞர்களை வீதியில் கொண்டு வந்து நிறுத்தியது அன்னாவின் இரண்டாவது சாதனை!’’

அன்னா பிரச்னையில் மத்திய அரசின் செயல்பாடு எப்படி?

‘‘காங்கிரஸ் அரசு, இந்திராகாந்தி காலந்தொட்டு இன்றுவரை அதனுடைய அடிப்படை புத்தியை அணுவளவும் மாற்றிக்கொள்ளவில்லை.

நாட்டு விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட மகத்தான மனிதர் ஜெயப் பிரகாஷ் நாராயணன். தன் மனைவியோடு கூட தேக சுகத்தை மறுத்தவர். அவர் 1970-களில் காங்கிரஸ் ஆட்சியின் ஊழல்களுக்கு எதிராக கலகக்கொடி பிடித்தபோது, அவருடைய தூய வாழ்க்கையின் மீதே சேறு பூசத் தயங்காதவர்கள் காங்கிரஸ்காரர்கள். இன்றும் ஊழலுக்கு எதிரான யுத்தத்தை நடத்தும் அன்னாஹசாரேயை தங்கள் வசதிக்கு ஏற்ப வளைக்க முடியாததால் அவருடைய தனிமனித தோற்றத்தையும் சிதைப்பதற்கு முற்படுகிறார்கள்.

நாடு முழுவதும் நாளுக்கு நாள் அவருக்கு ஆதரவாக இளைஞர்களின் எழுச்சி அலை பெருகத் தொடங்கியதும் லோக்பால் மசோதாவில் மாற்றம்கொண்டு வருவதற்கு கீழிறங்கி வந்திருக்கிறார்கள். நிர்ப்பந்தங்களுக்காக நேர்மையானவர்களைப் போல் காட்டிக்கொள்ளும் மன் மோகன் சிங் தலைமையில் உள்ள மந்திரிகளும் காங்கிரஸ் தலைவர்களும் உண்மையில் ஊழல்வாதிகளுக்கும் கள்ளச் சந்தையில் ஈடுபட்டவர்களுக்கும், கறுப்பு பணம் வைத்திருப்பவர்களுக்கும் பாதுகாப்பு கவசமாக இருப்பதற்கு முற்பணிந்தார்கள் என்பதையே அவர்கள் நாடாளுமன்றத்தில் முன் வைத்த லோக்பால் மசோதா தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது.

மன்மோகன்சிங் தன்னுடைய நேர்மையை நிரூபிக்க இரண்டே வழிகள்தான் உண்டு. ஊழலின் ஆணிவேரை அறுக்கும் முதல் முயற்சியாக அன்னா ஹசாரே உருவாக்கித் தந்த ஜன்லோக்பால் மசோதாவிற்கு சட்ட வடிவம் தர அவர் முயல வேண்டும். அதற்கு காங்கிரஸ்காரர்கள் துணையாக இல்லையெனில் அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகவேண்டும். தவறான மனிதர்களுக்குத் திரையாக பயன்படும் ஒருவர் நேர்மையானவர் என்று எவ்வளவு காலம் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்?’’

தமிழக காங்கிரஸின் நிலைப்பாடு?

‘‘தமிழகத்தில் காங்கிரஸ் என்ற ஒன்று இருந்தால்தான் அதன் நிலைப்பாடு பற்றி நீங்கள் கேட்கவேண்டும். தங்கபாலுவுக்குச் சமமாக ஒரு தலைவரை தேடுவதிலேயே நூறு நாட்கள் ஓடிவிட்டன. தன்னலமற்ற, சமூக நலன் சார்ந்த, எளிமை மிக்க காமராஜரின் பாதிப்புக்குள்ளான மனிதர்களை இனி தமிழ்நாடு காங்கிரஸில் காணவே முடியாது! அது சோனியாகாந்தியின் பிரைவேட் லிமிடெட் கம்பெனியே தவிர, அதற்கும் காந்தியம் வளர்த்தெடுத்த பொது வாழ்க்கைப் பண்புகளுக்கும், காமராஜர் நடத்திக் காட்டிய வாழ்வியல் விழுமங்களுக்கும், எள்ளளவும் தொடர்பு இல்லை.
சட்டமன்றத் தேர்தலில் வாங்கிய  மரணஅடிக்குப் பின்பு தமிழ்நாடு காங்கிரஸின் உயிர் மெள்ள ஊசலாடுகிறது. உள்ளாட்சித் தேர்தல் முடியும்போது தமிழகத்தில் காங்கிரஸ் கல்லறைக்குள் சென்று கண் மூடிவிடும்.

தமிழ் இன உணர்வும் மொழிப்பற்றும் இல்லாத சில சுயநலவாதிகளுக்கும் பதவியையும் அதிகாரத்தையும் தேடித் தரும் காங்கிரஸ், தமிழகத்திற்குத் தேவை இல்லை என்ற முடிவிற்கு மக்கள் வந்துவிட்டார்கள்.’’

தமிழர் மூவருக்கு வழங்கப்பட் டிருக்கும் தூக்கு பற்றி…?

‘‘ஒரு ஆயுள் தண்டனையை விடவும் கூடுதலாக சிறைவாசம் இருந்த அந்த மூவரையும் தூக்கில் தொங்க விடுவதன்மூலம் தன் மரணப் பசியைத் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்று மத்தியஅரசு முடிவெடுத்திருப்பது வருத்தத்தைத் தருகிறது.

தமிழராய் பிறந்த சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தும் அவருக்குள் இரக்க உணர்வு சுரக்கவில்லை. தாய்மை நிறைந்த ஒரு பெண்மணியாக குடியரசுத் தலைவர் இருந்தும் மூன்று உயிர்கள் அவசியமற்று பறிக்கப்படுவதற்குக் காரணமாக இருப்பது கவலையைத் தருகிறது.’’.