Ulaga_cinema__03147_zoomதமிழ் படிக்கத் தெரிந்த ஒரு சாதாரண சாமானியன்கூட எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் எளிய தமிழில் எழுதப்பட்டுள்ள மிக மிகப் பிரயோஜனமான, அற்புதமான புத்தகம். பள்ளிக்கூடப் பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட வேண்டிய அரியப் பொக்கிஷம். சினிமாவையும், தமிழையும் நெஞ்சார நேசிப்பவன் என்ற வகையில் இப்படி ஒரு புத்தகத்தைத் தமிழுக்குத் தந்ததற்காக அஜயனுக்கு என் மனமார்ந்த நன்றி.

– பாலு மகேந்திரா

பதிப்புரை
சினிமா என்னும் அசகாய சக்தியின் மகிமைகளைக் குறித்து எல்லோரும் வியந்தோதக் கேட்கிறோம். அதில் துளியளவும் மிகையில்லை என்பதையும் நாம் அறிந்துணர்ந்திருக்கிறோம்.

சமகால மனிதர் வாழ்விற்குள் சினிமா ஊடுருவாத சந்தர்ப்பங்களே இல்லையெனக் கூறலாம். தொலைக்காட்சி அறிமுகமானபோது சினிமா அழிந்து விடுமென ஆரூடம் கூறியவர் பலர். ஆனால், தொலைக்காட்சியை சினிமா வென்றெடுத்திருக்கிறது என்பதே நிஜம். ஆண்டுதோறும் பெருகி வரும் திரைப்படத் தயாரிப்புகள் அதற்கு ஒரு நல்ல உதாரணம்.

இத்தகைய சினிமாக்கலை தோன்றி வளர்ந்த வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் ஒரு காலம் வரை ஆங்கில புத்தகங்களையே நாடிச் செல்ல வேண்டியிருந்தது. இன்றைய நிலை வேறு. திரைப்படம் தொடர்பான நூல்கள் தமிழில் வெளிவரத் தொடங்கி அவை வாசகர்கசளின் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

முன்னெப்போதும் சினிமா வரலாறு இத்தனை எளிமையாகவும் சுவாரசியமாகவும் எழுதப்பட்டதில்லை. வாசிப்பவரின் நாடி பிடித்துப் பார்த்ததுபோன்று அஜயன்பாலா அத்தனை துல்லியமாக இதை எழுதிச் செல்கிறார்.