இந்திய வர்த்தக ஊக்குவிப்பு நிறுவனமும் (ஐடிபிஓ),  இந்திய பதிப்பக சம்மேளனமும் இணைந்து  நடத்தும் 23-ஆவது தில்லி புத்தகக் கண்காட்சி, பிரகதி மைதானத்தில் வரும் 26-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஐடிபிஓ உயரதிகாரி கூறியதாவது:  எழுத்து, புத்தகங்களின் வலிமையைப் பறைசாற்றும் பணியில் தில்லி புத்தகக் கண்காட்சி முக்கியப் பங்கு வகிக்கிறது.  இந்தப் புத்தகக் கண்காட்சி மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், அறிவுலக மேதைகள், நூலகர்கள், புத்தகப் பிரியர்கள் ஆகியோர் மத்தியில் பெரும் வரவேற்பை  பெற்றுள்ளது.

குழந்தைகள், இளைஞர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதுடன்,  பல்வேறு துறைகள் தொடர்புடைய இந்திய புத்தகங்கள் இந்த புத்தகக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுகின்றன.

“இந்தியா வாசிக்கிறது; இந்தியா வளர்கிறது’ என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு நிகழாண்டு புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.

இதில், புத்தக விற்பனையாளர்-வாங்குவோர் சந்திப்பு,  புத்தக வெளியீடு,  புத்தக விவாதம்,  குழந்தைகளுக்கான இலக்கியச் செயல்பாடுகள்,  நூலாசிரியர்களுடனான சந்திப்பு ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்தப் புத்தகக் கண்காட்சி செப்டம்பர் 3-ஆம் தேதி நிறைவு பெறுகிறது என்றார் அவர்.