வாசிப்பதற்கு எத்தனை நவீன வசதிகள் வந்தாலும் அச்சிட்ட தாளினாலான புத்தகங்கள் தனித்துவமானவை என்று திருப்பூர் சார் ஆட்சியர் ஜெ.ஷ்ரவண்குமார் பேசினார்.

பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் மற்றும் பின்னல் புத்தக அறக்கட்டளை சார்பில் புத்தகங்களுடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவோம் எனும் தலைப்பில் புத்தகக் கண்காட்சி, திருப்பூர் பிரதான தொலைபேசி நிலையம் முன்பு வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

திருப்பூர் சார் ஆட்சியர் ஜெ.ஷ்ரவண்குமார் கண்காட்சியை திறந்து வைத்துப் பேசியதாவது: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இதுபோன்று புத்தகக் கண்காட்சி நடத்துவது பாராட்டுக்குரியது. புத்தக வாசிப்பு என்பது வாழ்க்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இளைய தலைமுறைக்கு புத்தக வாசிப்பைப் பழக்க வேண்டும்.

இன்று நவீன தொழில்நுட்ப வசதியில் புத்தக வாசிப்புக்கு இணையதளம், இ-புத்தகம், கிண்டில், செல்லிடப்பேசி என பல வசதிகள் வந்துள்ளன. ஆனாலும், தாளில் அச்சிட்ட புத்தகங்கள்தான் உண்மையில் வாசிப்பதற்கு வசதியானவை. அந்த புத்தகங்களை மற்ற நவீன வசதிகள் ஈடு செய்ய முடியாது. புத்தக வாசிப்பை சமூகம் முழுவதும் கொண்டு செல்லவேண்டும் என்றார்.

முன்னதாக தொடக்க நிகழ்ச்சிக்கு திருப்பூர் கபடி கல்வி அறக்கட்டளை நிறுவனர் எம்.கே.எம்.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கிளைத் தலைவர் கே.வாலீசன் வரவேற்றார். சைமா பொதுச் செயலாளர் வி.பொன்னுசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.