காரைக்காலில் காரைத் தமிழ்ப் பேரவை சார்பில் புத்தக வெளியீடு மற்றும் இலக்கியப் பேருரை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் காரைத் தமிழ்ப் பேரவையின் இலக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது. பேரவைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச். நாஜிம் தலைமை வகித்தார். புலவர் திருமேனி நாகராசன் தொடக்கவுரையாற்றினார். வாணியம்பாடி பேராசிரியர் தி.மு. அப்துல்காதர் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, “விழித்தால் விடியும்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

நிகழ்ச்சியில், செல்லூர் கண்ணன் எழுதிய அம்மையார் ஸ்தல வரலாறு புத்தகம் மற்றும் காரவேலன் காலத்துத் தமிழ் மன்னர்கள் என்ற தலைப்பிலான புத்தகம் வெளியிடப்பட்டன. இப்புத்தகங்களை அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி பேராசிரியர் கதிர்வேலு சம்பந்தன் அறிமுகம் செய்துவைத்துப் பேசினார். தொழிலதிபர் பி.எஸ்.ஆர். சின்னையன் புத்தகங்களை வெளியிட, தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற புதுச்சேரி சிவ.கணபதி பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில், தமிழ்ப் பேரவை பொதுச்செயலர் வழக்குரைஞர் ரா. தம்பிராஜ் வரவேற்றார். பேரவை மக்கள் தொடர்பு அலுவலர் ஆர். காளிதாசன் நன்றி கூறினார்.