திருப்பூர் : புத்தக வாசிப்பு திறனை வளர்க்கும் வகையில், கிராமப்புற அரசு பள்ளிகளில், தலா ஒருநாள் புத்தக கண்காட்சி நடத்த வேண்டும் என்று, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.தமிழக முதல்வராக இருந்த ஜெ., நடமாடும் நூலக திட்டத்தை அறிவித்தார். அதன்படி, திருப்பூர் மாவட்டத்துக்கு, சரக்கு வேனில், நடமாடும் நூலகம் வடிவமைத்து வழங்கப்பட்டது. தேவையான புத்தகங்களும் அதில் இடம் பெற்றுள்ளன. கிராமப்புறங்களுக்கு சென்று, மக்கள் கூடும் இடங்களில் நூலகத்தை திறந்து, அவர்களின் வாசிப்பு திறனை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில், இத்திட்டம் துவக்கப்பட்டது.புத்தகங்களும், நூலக வாகனமும் வழங்கப்பட்டாலும், நடமாடும் நூலகத்துக்கான டிரைவர் பணியிடம் தோற்றுவிக்கப்படவில்லை. பொது நூலகத்துறையினர், தினக்கூலி அடிப்படையில் டிரைவர்களை நியமித்து, அவ்வப்போது இயக்கி வந்தனர். இந்த நூலக இயக்கத்தை வேகப்படுத்த வேண்டும் என்று, பொது மக்கள் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில், நடமாடும் நூலக பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில், கிராமப்புற பள்ளிகளில் முகாமிட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நடமாடும் நூலகம் பள்ளிகள் வாரியாக முகாமிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் துவக்க நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்தது. கலெக்டர் பழனிசாமி துவக்கி வைத்தார்.மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் வாரியாக சென்று, அப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில், தலா ஒருநாள் வீதம் முகாமிட வேண்டும் என்று, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.