1495782041கவிஞர். ரவிசுப்பிரமணியனின் புதிய கவிதைத் தொகுப்பான ‘விதானத்துச் சித்திரம்’ புத்தகத்தின் வெளியிட்டு விழா சனிக்கிழமை (27-5-2017) மாலை 6:00 மணியளவில் சென்னை- கே.கே.நகர் டிஸ்கவரி புக் பேலஸில் வெளியிடப்படவிருக்கிறது. இது அவருடைய ஐந்தாவது கவிதைத் தொகுப்பாகும். பத்தாண்டுகளுக்குப் பிறகு அவர் இத்தொகுப்பைக் கொண்டு வந்துள்ளார். ரவிசுப்பிரமணியன் ஏற்கனவே ஒப்பனை முகங்கள், காத்திருப்பு, காலாதீத இடைவெளியில், சீம்பாலில் அருந்திய நஞ்சு ஆகிய கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். மேலும் சிறுகதைகள், கட்டுரைகள், ஆவணப்படங்கள் எனப் படைப்புகள் தந்து பன்முகப்பட்ட ஆளுமையாய்த் திகழ்கிறார்.

40 நவீனக் கவிதைகளுக்கு இசை வடிவம் தந்துள்ளார். மேலும் சாகித்திய அகாடமி ஆலோசனைக்குழுவில் உறுப்பினராகவும், இயக்குநரும் படத்தொகுப்பாளருமான பி. லெனினிடம் ஐந்து ஆண்டுகள் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார். சிறந்த கவிதை நூலுக்கான விருது, இலக்கிய விருது, ஆவணப்படத்திற்கான விருது ,சிற்பி இலக்கிய விருது, தி.க.சி.இயற்றமிழ் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். வெளியிடப்படும் இப்புத்தகம் குறித்துப் பாரதி புத்திரன், மண்குதிரை, கவிதைக்காரன் இளங்கோ, அனுராதா ஆனந்த், வேல் கண்ணன் ஆகியோர் பேச உள்ளனர்.