001-2சென்னை: ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

பேராசிரியர் நா. மணி தொகுத்து, பாரதிபுத்தகாலயம் பதிப்பித்துள்ள “நீட்: கூட்டாட்சிக்கும் சமூக நீதிக்கும் எதிரானது – ஏன்?” என்ற நூல் வெளியீட்டு விழா வெள்ளியன்று (மார்ச் 17) சென்னையிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நூலை வெளியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், “நீட் தேர்வுகளால் வரும் பாதிப்புகள் குறித்து விளக்கமாக விளக்கும் கட்டுரைகளைக் கொண்ட புத்தகமாக கொண்டு வரப்பட்டுள்ளது. நீட் தேர்வை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்க்கிறது. இதற்கெதிரான போராட்டத்தையும் நடத்தி வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் மார்க்சிஸ்ட் கட்சி ஈடுபடும்” என்றார்.

மாநில பாடதிட்டம் தரம் குறைந்ததல்ல

நூலின் முதல் படியைப் பெற்றுக் கொண்டு பேசிய கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன், “நீதிபதி ஒருவர் நீட் தேர்விலிருந்து தமிழகம் விலக்கு கேட்பதற்காக வெட்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார். விடுதலை பெற்று 70 ஆண்டுகளாகியும் அனைவருக்கும் தரமான சமமான கல்வி வழங்காததற்காகத்தானே ஆட்சியாளர்கள் வெட்கப் பட வேண்டும்? தனியார் கல்வி நிறுவனங்களை தொடங்கி கொள்ளையடிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கிய 11 நீதிபதிகள் கொண்ட குழுதான் வெட்கப்பட வேண்டும். டிஎம்ஏ பாய் என்ற வழக்கில் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பை மாற்ற மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரவேண்டும்” என்றார்.

“சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் தரத்தை விட மாநில அரசின் பாடத்திட்டம் சிலவற்றில் தரம் அதிகமாக உள்ளது. மாநில பாடத்திட்டத்தை சரியாக ஆராய்ந்து பார்க்காமல், சிபிஎஸ்இ பாடத்திட்டம் உயர்வானது என்று தவறான தகவலை பரப்புகின்றனர்” என்று கூறிய ராஜகோபாலன், “சிபிஎஸ்சி திட்டத்தில் படித்த மாணவர்களில் 95 விழுக்காடு பேர் தனியார் மையங்களில் பயிற்சி பெற்று தேர்வு எழுதுகின்றனர். இதனால் தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் அதிகளவு வெற்றி பெறுகின்றனர். ஏழைகளால் தனியார் மையத்தில் பயிற்சி பெற முடியுமா? இதனை எதிர்கொள்வது எப்படி என்று சிந்திக்க வேண்டும்” என்றார்.

மாணவர்களின் திறனை மேம்படுத்த…

“நீட் தேர்வு மாநில உரிமையை பறிக்கிறது. கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வந்தால்தான் நீட் போன்ற பிரச்சனைகள் எழாமல் இருக்கும். நீட் தேர்வை எதிர்க்கும் அதேநேரத்தில் மாணவர்களின் திறனையும் மேம்படுத்த வேண்டும். நீட் தேர்வு வினாத்தாள்களை போன்று, தற்போது உயர்கல்வி தேர்வுக்கான வினாத்தாள்களை மாற்றி அமைக்க வேண்டும். இதுபோன்ற சில மாற்றங்கள் கொண்டு வந்தால் நமது மாணவர்கள் எந்த தேர்வையும் எதிர்கொள்ள தயாராக இருப்பார்கள். ஆனால், மருத்துவம், பொறியியல் படிப்புக்கான தேர்வுகளை மாநில அரசுதான் தீர்மானிக்க வேண்டுமே தவிர மத்திய அரசு அல்ல.” என்றும் ராஜகோபாலன் கூறினார்.

மாதம் முழுவதும் போராட்டம்

இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கிய பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, “நீட் தேர்வின் பாதிப்புகளை விளக்கி கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் மார்ச் மாதம் முழுவதும் புத்தக விற்பனை இயக்கம் நடைபெறும். ஏப்.1 முதல் 30 வரை தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும்” என்றார்.