சென்னை மக்கள் வாசிப்பு இயக்கம் சார்பில், நாமக்கல்லில் புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இந்தக் கண்காட்சி தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும்.

 நாமக்கல் மாவட்டத்தில் முதன் முறையாக சென்னையைச் சேர்ந்த மக்கள் வாசிப்பு இயக்கத்தினர் புத்தகத் திருவிழா நடத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு புத்தகத் திருவிழா தொடங்க உள்ளது.

 மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் புத்தகத் திருவிழா அரங்குகளைத் திறந்து வைக்க உள்ளார். டரினிடி கல்வி நிறுவனத் தலைவர் டாக்டர் கே. குழந்தைவேல் முதல் விற்பனையைத் தொடக்கி வைக்கிறார். நாமக்கல் கம்பன் கழகத் தலைவர் வி. சத்தியமூர்த்தி முதல் விற்பனையைப் பெற்று வாழ்த்துரை வழங்க உள்ளார்.

இதுகுறித்து சென்னை மக்கள் வாசிப்பு இயக்க நிறுவனர் வீரபாலன் கூறியது:

 வீடுகள்தோறும் நூலகம் அமைப்போம் என்ற லட்சியத்தை முன்வைத்து மக்கள் வாசிப்பு இயக்கமும், முன்னேற்றப் பதிப்பகமும் இணைந்து தமிழகத்தில் 310 புத்தகக் கண்காட்சிகள் நடத்தியுள்ளோம். அதன் தொடர்ச்சியாக நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் முதன் முறையாக 50 அரங்குகளுடன் புத்தகத் திருவிழா நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்.
தமிழகத்தின் முன்னணிப் பதிப்பக நூல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 50,000 தலைப்புகளில் 5 லட்சம் தமிழ், ஆங்கில நூல்கள், கல்வி சி.டி.க்கள் விற்பனைக்கு உள்ளன. சாகித்ய அகாதெமி நூல்கள், மொழி பெயர்ப்பு நூல்கள், சரித்திர நாவல்கள், போட்டித் தேர்வு, வரலாறு, ஆன்மிகம், சுய முன்னேற்ற நூல்கள், குழந்தைகளுக்கான அனைத்து நூல்களும் இடம் பெற்றுள்ளன.

 வாசகர்களின் வசதிக்கு ஏற்ப 6 இடங்களில் வங்கி அட்டையைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் மாலை 5 மணிக்கு இலக்கிய நிகழ்வு, எழுத்தாளர் சந்திப்பு, பட்டிமன்றம், வாசகர் உரையாடல் நடைபெற உள்ளது. தமிழகத்தின் மிக முக்கியமான ஆளுமைகள் தங்களது படைப்புகள் குறித்தும், படைப்புகள் உருவாக்குவது குறித்தும் எடுத்துரைக்கின்றனர். அதுபோல் புத்தக வாசிப்பின் மூலம் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்ட தொழில் அதிபர்கள், கல்வியாளர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

 ஒரு லட்சம் பக்கங்களில் உங்களுக்காகவும் ஒரு பக்கம் என்ற சாதனை புத்தகத்தில் நாமக்கல் வாசகர்கள் தங்களுக்குப் பிடித்த ஆசிரியர்கள், எதிர்கால இந்தியா எப்படி இருக்க வேண்டும்? தங்களுடைய கனவு லட்சியம் என்ன?, வாழ்க்கை மேம்படுத்துவதற்கு வழிகாட்டும் தத்துவங்கள் குறித்தும் ஒரு பக்கத்தில் எழுதி கொடுக்கலாம். இதன் மூலம் ஒவ்வொரு வாசகரையும் படைப்பாளராக உருவாக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. புத்தகம் வாங்கும் அனைவருக்கும் 10 சதவீத தள்ளுபடி விலையிலும் கல்வி நிறுவனங்களுக்கு, நூலகங்களுக்கு சிறப்பு சலுகை விலையில் புத்தகங்கள் வாங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத் திருவிழாவைத் தொடர்ந்து 10 நாள்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.