தமிழில் சிற்பங்கள் குறித்த நூல்கள் சொற்ப அளவில்தான் வெளிவந்துள்ளன என்றார் வரலாற்று ஆய்வாளர் அ.கா.பெருமாள்.
நாகர்கோவிலில் சிற்பவியல் ஆய்வாளர் செந்தீ நடராசனின் “சிற்பம் தொன்மம்’ என்னும்  புத்தக வெளியீட்டு விழா திரிவேணி இலக்கியச் சங்கமம் சார்பில் நடைபெற்றது. கவிஞர் கடிகை ஆன்றனி தலைமை வகித்தார். விழாவில் அ.கா.பெருமாள் பங்கேற்று மேலும் பேசியதாவது:

தமிழில் சிற்பங்கள் குறித்த நூற்கள் மிகக் சொற்பம்தான். முன்னோடியான மயிலை சீனி வேங்கடசாமி, சாத்தான்குளம் ராகவன் ஆகியோரின் வழி வந்தவர் செந்தீ நடராசன்.  இவரது சிற்பம் தொன்மம் நூலில் 29 சிற்பங்களை பற்றிய விளக்கங்களும், அவை பற்றிய தொன்மங்களும் உள்ளன. இந்த நூல் பண்பாடு மீட்டுருவாக்கத்திற்கு சிற்பங்களைப் பற்றிய ஆய்வும் உதவும் என்ற அரிய கருத்தை முன் வைக்கிறது. சிற்பங்களின் அழகியல் கூறுகளை அடையாளம் காண்பது என்பது தமிழ் காவியங்கள், பழம் இலக்கியங்கள் போன்றவற்றில் அழகியல் கூறுகளைத் தேடும் முயற்சியைப் போன்றதல்ல. இதற்கு சிற்பசாஸ்திரமும், பழம் புராணங்களும், வரலாறும் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். இந்தத் தகுதி தமிழகத்தில்  செந்தீ நடராசனுக்கு உண்டு. அது போல இளைஞர்களுக்கும் வரவேண்டும் என்றார் அவர்.

எழுத்தாளர் ராம் வரவேற்றார். சமூக ஆர்வலர் ஜான்முறே புத்தகத்தை வெளியிட, தாகூர் பெற்றுக் கொண்டார். பேராசிரியர்கள் நா.ராமச்சந்திரன், வரலாற்று ஆய்வாளர்  அ.கா.பெருமாள் ஆகியோர் நூல் ஆய்வுரை நிகழ்த்தினர். நூலாசிரியர் செந்தீ நடராசன் ஏற்புரையாற்றினார்.

விழாவில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன், லால்மோகன், செந்தூரான், கொடிக்கால் ஷேக் அப்துல்லா, திருத்தமிழ் தேவனார், கோதை சிவக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். வில்லிசை கலைஞர் தங்கமணி நன்றி கூறினார்.