imageஅடையாறு ஒடிஸ்ஸி புத்தக நிலையத்தில், திரு. லலித் ஜக்தியானி, தொழில்மாற்ற பயிற்சியாளர் (சிங்கப்பூர்) எழுதியுள்ள ‘வென் சேன்ஜ் ஹாப்பன்ஸ்’ – புத்தகம் வெளியிடப்பட்டது. இதில், திரு. அருண் சி. பரத், ஐ.ஆர்.எஸ்., வருமான வரி ஆணையர், திரு. எம்.எம். முருகப்பன், முருகப்பா குழுமத்தின் துணை தலைவர், திரு. ஜெ. எஸ். சுந்தர்ராஜன், இயக்குனர் குழு, பே டிஎம் பேமன்ட்ஸ் வங்கி மற்றும் திரு. சந்து நாயர், துணை நிறுவனர், ஸ்கோப் இ-நாலட்ஜ் சென்டர், ஆகியோர் கலந்துகொண்டனர்.

திரு அருண் பரத் பேசுகையில், “தனி மனிதனானாலும் சரி, நிறுவனங்கள் ஆனாலும் சரி, மாற்றம் என்பது இன்றியமையாதது. இது அரசாங்கத்திற்கும் பொருந்தும். யாராக இருந்தாலும், அவரவர் செய்யும் வேலைகளில் சிறு சிறு மாற்றங்களைச் செய்வது வெற்றிக்கு வாய்ப்பாக அமையும்.

இந்தியாவில் இரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டபோது, பல்லக்கு தூக்குபவர்கள் அதை எதிர்த்தனர். ஏன், பல நிறுவனங்களில் கணிப்பொறிகளை அறிமுகம் செய்தபோது இதனால், பின்னாட்களில் மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு குறையும் என பலரும் எதிர்த்தனர். ஆனால் இன்று கணினி இல்லாமல் உலகம் இல்லை என்ற நிலைமை. இதனால், நாம் என்றுமே நல்ல மாறுதல்களை வரவேற்க வேண்டும்.

மாறுதல்களை எப்படி கையாள்வது என்று கூறும் ‘வென் சேன்ஜ் ஹாப்பன்ஸ்’ புத்தகத்தை எழுதிய லலித் ஜக்தியானி அவர்களுக்கு எனது வாழ்த்துகள்”, இவ்வாறு கூறினார்.