32145பறையர் சமூகத்தின் நூறாண்டு போராட்ட வரலாறு இந்நூலில் அலசப்படுகிறது ; அந்த நிகழ்வுப் போக்கினூடே ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையின் பல முகங்களும் பல தளைகளும் தடைகளும் நமக்கு இனம் காட்டப்படுகிறது.அதே நேரம் மேலும் பல கேள்விகள் வெடித்துக் கிளம்புகிறது .

இந்நூல் அடிப்படையில் ஒரு ஆய்வு நூல். 2004ல் கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் ராஜ் சேகர் பாசு சமர்ப்பித்த “ இரண்டு ஒடுக்கப்பட்ட சாதிகளின் சமூக கலாச்சார மாற்றம் : தென் இந்தியாவின் பறையர் புலையர் வரலாறு 1850 -1956” என்ற ஆய்வின் திருத்தப்பட்ட வடிவமே இந்நூல். ஆய்வுப் புலம் சார்ந்த இறுக்கமான மொழி நடையிலான ஆய்வினை நுட்பமாய் அலுப்பு தட்டாத ஆற்றொழுக்கு நடையில் மொழியாக்கிய அ.குமரேசனுக்குப் பாராட்டுகள்.


ஆறு அத்தியாயங்களில் ஆறு பொருளில் இவ்வாய்வு செலுத்தப்பட்டுள்ளது . கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த போது ஆட்சியாளர்கள் பார்வையில் பட்ட – விவசாயத்தில் நிலவிய அடிமைத்தனம் எப்படி இருந்தது ? சாதியமும் தீண்டாமையும் எப்படி அடிமைத்தனத்தை தொடர்ந்து நிலை நிறுத்த உதவின என்கிற கோணத்தில் முதல் அத்தியாயம் அமைக்கப்பட்டுள்ளது .

“மொத்தத்தில் பறையர்களுக்கு ஆதரவாக கிருதவ மிஷினரிகள் மேற்கொண்ட பிரச்சாரம் மதராஸ் மாகாணத்தில் படித்த உயர்சாதி இந்துக்களிடையே ஒரு பரவலான அக்கறையைக் கிளறிவிட்டது. சொல்லப்போனால் உயர் சாதி இந்துக்களில் ஒரு பகுதியினர் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை ஒழித்துக் கட்டுவதற்கான சமூகசீர்திருத்தங்கள் தேவை என வலியுறுத்தத் தொடங்கினர்” என்பதை நிறுவ இரண்டாம் அத்தியாயம் முயலுகிறது .

பறையர் மற்றும் இதர ஒடுக்கப்பட்ட மக்கள் வெளிநாடுகளுக்கும் உள்நாட்டில் சுரங்கம் மற்றும் தொழில் மையங்களுக்கும் இடம் பெயர்ந்ததன் தாக்கம் மூன்றாவது அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது “புல்வெளிகளைத் தேடி..” என தலைப்பிலேயே உருவகமாய் கடும்பணியில் உழன்றது சுட்டப்பட்டது ; அதே சமயம் ஒரு சிறுபகுதியினர் தரம் உயர்ந்ததும்; சுதந்திரக்காற்றை உணர்ந்ததும் சரியாகச் சுட்டப்பட்டுள்ளது .

நான்கு , ஐந்து , ஆறு அத்தியாயங்களில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், நீதிக்கட்சி , சுயமரியாதை இயக்கம் , திராவிட இயக்கம் இவற்றினூடேயும் – தனியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பயணமும் பங்களிப்பும் அதன் பன் முகங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது .
அம்பேத்கர் , அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், முனுசாமிப் பிள்ளை, எம்.சி.ராஜா,சிவராஜ் போன்றோர் ஒவ்வொரு கட்டத்திலும் மேற்கொண்ட நிலைபாடுகள் தேசிய அரசியல் மற்றும் பிராமணரல்லாதோர் அரசியல் சார்ந்தும் முரண்பட்டும் இருந்தது; சில வேளைகளில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் சார்ந்தும் தங்கள் உரிமையை நிலைநாட்ட பாடுபட வேண்டியிருந்தது காலத்தின் கட்டாயமாகும்.பெரியார் , காந்தி இருவரின் அணுகுமுறை பற்றிய அலசல் உண்டு . நூலாசிரியரின் பார்வையோடு நாம் பல இடங்களில் உடன்படுவதும் பல இடங்களில் முரண்படுவதும் தவிர்க்க இயலாது .
ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை நேசிப்போர் – அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய வரலாற்று செய்திகளும் ; கேள்விக்கு உட்படுத்த வேண்டிய செய்திகளும் இந்நூலில் உண்டு .

ஒரு சில கேள்விகள்:
ஒடுக்கப்பட்ட மக்களின் வலியும் ; சமூக ஒடுக்குமுறையும் இந்நூலில் போதுமான அழுத்தம் பெறாதது ஏன் ?
தீண்டாமையில் பல்வேறு கொடூர வடிவங்கள் இப்போதிருப்பதைவிட அப்போது மேலும் அதிகமாகவே இருந்த காலகட்டத்தை ஆராயும் போது அது வலுவாக சொல்லப்படவில்லையே ?ஏன் ?
சாதியத்துக்கும் தீண்டாமைக்கும் குறைந்த பட்சம் இரண்டாயிரம் ஆண்டு இருண்ட வரலாறு இருக்கும் போது அதனை ஆய்வின் முன்னுரையாகக் கூட சொல்லிச் செல்லாதது ஏன் ?
சமூகநீதிப் போராட்டத்தின் கூறாக இருக்க வேண்டிய தீண்டாமை ஒழிப்பு அப்படி ஆகாமல் இடைச் சாதிகள் தலித்துகள் முரண்பாட்டை ஊதிவிட்டது எப்படி ? அதில் இந்து மதத்தில் சாதியத்தின் படிநிலை உளவியல் எப்படி வினையாற்றியது? இது குறித்த ஒரு சொல்கூட சொல்லா மல் விடுபட்டது தற்செயலானதா ?
சாதியத்தின் தத்துவ வேரான மநுதர்மம் போகிறபோக்கில் சொல்வதாக மட்டுமே உள்ளதல்லாமல்; அதன் விஷவேர் துல்லியமாக காட்டப்படவில்லையே ஏன் ?
அதிகம் பொருளாதாரம் சார்ந்தே ஆசிரியர் பார்த்தது ஒருவகையில் முழுபரிணாமத்தை தரிசிக்க இடையூறாகிவிட்டதா ? அல்லது அவ்வாறு செய்ய ஏதேனும் அரசியல் சமூக நிர்ப்பந்தம் இருந்ததா ?
இது போல் இன்னும் பல ஐயங்கள் உண்டு. எனவே இது வெறுமே படிக்க மட்டுமே அல்ல கடுமையாக விவாதத்துக்கும் உள்ளாக்க வேண்டிய நூல்.

நந்தனின் பிள்ளைகள் : பறையர் வரலாறு 1850 -1956
ஆசிரியர் : ராஜ் சேகர் பாசு ,
தமிழில் : அ.குமரேசன் ,
வெளியீடு : கிழக்கு பதிப்பகம் ,
177/103 , முதல் தளம் ,
அம்பாள் பில்டிங்க் , லாயிட்ஸ் சாலை ,
ராயப்பேட்டை சென்னை – 600 014.
பக்கங்கள் ; 560 , விலை: ரூ .500/