12345நூற்றி எழுபத்தெட்டுப் பக்கம் , பதினெட்டுக் கதைகள் இந்தப் புழுதிச்சூடு சிறுகதைத் தொகுப்பில் இருக்கின்றன. தேனி மாவட்டம் சார்ந்த பல கதைகள் வாசித்த எனக்கு, இந்த தொகுப்பின் மொழி மிகவும் இயல்பாக அசலான மொழியை வாசித்த பரவசம் தந்தது. கதைகள் ஒவ்வொன்றும் தேனி மாவட்ட அனுபவங்களின் பல்வேறு அடுக்குகளிலிருந்து சொல்லப்பட்டதாக உணர முடிகின்றது. காடு கழனிகளை ஆண்டு அனுபவித்த சிறீகாமூலம்மாளின் மரணசம்பவம் கதை, இதுவரை சொல்லப்பட்ட சொல்முறையிலிருந்து நம்மை ,வேறொரு நவீன வாசிப்புத்தளத்திற்கு கொண்டு சென்று , அந்த ஊர்மக்கள் போலவே புலம்பச் செய்கிறது. பெரியம்மா வீட்டிற்கு வந்த சிறுமி சாந்தி , அடிக்கொருதரம் தண்ணீர் குடிப்பதைப் பார்த்துவிட்ட பெரியம்மா, சாந்தி சொன்ன பதிலில் அதிர்ந்து போவதை நமக்கு கடத்துகிறது விருந்தாடி கதைஇன்னொரு சாந்தி நிரூபணம் கதையில் வருகிறாள். ஓட்டல் தொழில் செய்யும் பெரியகுளம் செல்லப்பா அந்தக் கட்சி என்று பளிச்சென்று கதை சொல்லி விடுகிறது. அவரது தம்பி ராமநாதன் அந்தக் கட்சியின் ரிக்கார்ட் டான்சராக இருந்த சாந்தியை திருமணம் செய்து கொள்கிறான். செல்லப்பாவும் கட்சியின் வட்டச் செயலாளரான ராமநாதனும் கட்சியில் தங்கள் செல்வாக்கை நிலைநிறுத்த, நகரச்செயலாளரின் ஆசைக்கு சாந்தியை இணங்க வைக்க முடியாத கோபத்தை சாந்தியிடம் காட்ட, சாந்தி எடுத்த முடிவு , சுயமரியாதையாக வாழ முயன்ற பெண்ணின் இயலாமையை கோபத்தை வெளிப்படுத்தி நிற்கிறது.யோசிக்கிற பெண் பரிமளா. அதோடு தனக்கான வாழ்வை தன் விருப்போடும் வாழ நினைப்பவள் . வந்த வாழ்க்கை நினைத்தபடி அமையாது போக , பஞ்சாபீசிற்கு அம்மாவோடு வேலைக்குப் போய் வாழ்வை நகர்த்துபவள் மேல் வந்து விழும் அவமானங்கள் ,சுடுசொற்கள் தெருவெங்கும் முளைத்துக் கிளைத்திருப்பதை , பூட்டிய வீடு கதை வழி வாசிக்கிற பொழுது, உழைக்கும் பெண்கள் சந்திக்கும் பாடுகள் ஒவ்வொரு வாசகரையும் சஞ்சலப்படுத்தி விடுகின்றது .புழுதிச்சூடு கதையின் காமுத்தாய் , சொல்லில் விளங்காத மாதிரிகள் கதையின் செல்வி என்று கதைகள் தேனிப்பட்டிகளின் வெவ்வேறு பெண்களை அவர்கள் வாழும் வாழ்க்கையை , வாழ்வினூடாக அவர்கள் சந்திக்கும் மனிதர்கள் மேல் காட்டும் பரிவை, அவர்கள் தங்களின் சுயமரியாதையை துலக்கப்படுத்திக் கொள்ளும் இடங்களை ம.காமுத்துரையின் புழுதிச்சூடு கதைகள் அடையாளப்படுத்தி நிற்கின்றன .

புழுதிச்சூடு தொகுப்பின் கதைகள் யாவும் வாசிக்க வாசிக்க , கதை நிகழும் களத்தின், நிகழ்த்தும் கதை மாந்தர்களின் மொழி, நிலத்தின் மொழி அசலாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பாத்திரங்களின் உரையாடல்கள், பாத்திரச்சித்திரிப்புகள் யாவும் , அந்தந்த பாத்திரங்களின் அச்சான அவதானிப்பாக கதையின் படைப்புமொழியில் வந்து வசீகரிக்கின்றன. இதற்கு மேல் இந்தப் பாத்திரங்கள் தன் கதையை நிகழ்த்தி இருக்க இயலாது என்ற நுணுக்க அனுபவமாக கதைகள் இருக்கின்றன. அனைத்துக் கதைகளும் மானுட நேசத்தின் படிமமாக நின்று ஆவிசேர்த்துக் கொள்கின்றன. பாத்திரங்கள் தன்னுணர்வு கொண்ட வார்ப்பாக அமைந்து , காலத்தின் புதியபார்வையை அழகியல்ரீதியில் பார்வைப்படுத்துகின்றன. வாழ்வின் பல இடங்களில் வாதைப்படும் உதிரித்தொழிலாளர்கள், விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வின் வழியாக, நிகழ்சமூகம் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றது.கதைகள் யாவும் வேறு வேறு படைப்புமொழியில் , சொல்லப்படாதவை வழியாக வாசகர்களுக்கு யோசிக்க இடம் தந்து, படைப்பின் வரலாற்றுத் தேவையை , தேர்ந்த கதாமொழியில் நிகழ்த்துகிறது ம.காமுத்துரையின் “புழுதிச்சூடு”.

   Send article as PDF