978-93-5135-181-8_b-01நவீன இந்தியாவின் சிற்பிகள், ராமச்சந்திர குஹா, கிழக்கு பதிப்பகம், ரூ 400

அருமையான புத்தகம் ஆனால் இன்னும் சிறப்பான புத்தகமாக வந்திருக்க வேண்டியது. புத்தகம் இப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. வரலாற்று காலகட்டத்தில் நடந்த விசயங்களை ஆவணங்களாக நாம் படித்து தெரிந்துகொள்ள வாய்ப்பு இருந்தாலும் அவற்றைத் தனித்தனியான விசயங்களாகவே தெரிந்துகொள்ள முடியும் அம்பேத்கர் அவர்களுடைய காலகட்டத்தை நாம் தெரிந்துகொள்ள நாம் படிக்கும் புத்தகத்தில் பெரும்பாலும் அவரின் வாதமே அதிகமாக இருக்குமே தவிர அவரின் எதிர்த்தரப்பு வாதத்தை நாம் தெரிந்துகொள்ள மற்றொரு புத்தகத்தைப் படிக்க வேண்டியிருக்கும்.

எனக்கு தெரிந்தவரையில் முதல் முறையாக ஒரு வரலாற்றுக் காலகட்டத்தில் உள்ள முக்கியத் தலைவர்கள் அனைவரின் கருத்துக்களையும் ஒரே புத்தகத்தில் காணமுடிகிறது. மகாத்மா காந்தி என்ன சொல்கின்றார், அதற்கு திரு. அம்பேத்கர் மற்றும் மற்ற தலைவர்களின் மாற்றுக்கருத்து என்ன என்பதை ஒரே புத்தகத்தில் காணும்போது ஒரு முழுமையான வரலாற்றுத் தொகுப்பை கையில் பிடித்திருப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது. ஆனால் இதில் நான் குறையாகக் கருதுவது என்னவென்றால் இரண்டாம் அத்தியாயத்தில் உள்ள கேள்விக்கான பதில், பதிமூன்றாம் அத்தியாயத்தில் இருக்கிறது. அதாவது மகாத்மா காந்தி கேட்ட கேள்விக்கு திரு.அம்பேத்கர் பதில் சொல்லியிருக்கிறார் என்றால் அந்த பதிலை படிக்க நாம் திரு.அம்பேத்கர் பற்றிய அத்தியாயம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.

ஒரு கேள்வி அதற்கான பதில் இரண்டும் ஒரே புத்தகத்தில் இருந்தாலும் அவை வேறு வேறு அத்தியாயங்களில் இருப்பதால் ஒரு விவாதத்தை பார்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்த தவறிவிடுகிறது. அப்படி இல்லாமல் தொகுத்த விசயங்களை வைத்து கேள்வி பதில் என்ற கோணத்தில் இணைத்திருந்தால்…  நினைத்துப் பார்க்கவே பிரம்மிப்பாக இருக்கிறது. ஒரு வரலாற்றுக் காலகட்டத்தில் நாம் இருப்பதுபோன்ற உணர்வை புத்தகம் ஏற்படுத்தி இருக்கும். இருந்தாலும் இந்த முயற்சியே பெரும் முயற்சி என்பதில் சந்தேகம் இல்லை.

தலைவர்களின் ஆவணங்களை தொகுத்ததோடு ஒப்பிடும்போது ஆசிரியர் குறைவாகவே எழுதியிருக்கிறார் ஆனால் அதையும் சிறப்பாக எழுதியிருக்கிறார். உதாரணமாக மகாத்மா காந்தியின் அஹிம்சை முறை எப்படிப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ள ஆசிரியர் முன்னுரையிலேயே ஒரு குறிப்பைத் தருகின்றார். “மகாத்மா காந்தி தன்னுடைய வாழ்நாள் முழுவதும் விவாதித்துக்கொண்டே இருந்தார்.” அவரிடமுள்ள ஒரே ஆயுதம் அதுமட்டும்தானே. அந்த ஒரு வாக்கியமே நம்மை மேலும் மேலும் சிந்திப்பதற்கான வாய்ப்புகளைத் திறந்துவிடுகிறது.

மற்ற உலகத் தலைவர்களுக்கும் நம் நாட்டு தலைவர்களுக்கும் உள்ள ஒரு பெரும் வித்தியாசத்தை இந்த புத்தகம் மூலமாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. உலகத் தலைவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களாக புனிதர்களாக இருந்திருக்கிறார்கள். அல்லது விமர்சனம் செய்ய முடியாத அளவிற்கு சர்வாதிகாரம் மிக்கவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் அப்படி இல்லை என்று அறியும்போது வியப்பு ஏற்படுவதை தவிர்க்க இயலாது. இங்கே நாம் என்னவெல்லாம் செய்திருக்கின்றோம்! எப்படி எல்லாம் நம் தலைவர்களோடு மோதி இருக்கின்றோம் என்று நினைத்துப்பார்க்கையில் அவர்கள் நமக்கு எவ்வளவு கருத்து சுதந்திரத்தினை அளித்திருக்கின்றனர் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

நம் நாட்டு தலைவர்கள் நமக்கு கொடுத்த சுதந்திரமும் அந்த சுதந்திரத்தின் மூலம் அவர்கள் ஏற்படுத்திய விவாதக் களமுமே இன்றுவரை அவர்கள் உருவாக்கிய தத்துவங்கள் புதியதாகவும் நடைமுறைக்கு ஏற்றவாறும் இருக்கிறது  என்பதை மறுப்பதற்கில்லை. உலகின் பல தலைவர்களின் சிந்தனைகள் தற்போது நடைமுறையில் இல்லை என்பதையும் அதற்கான காரணத்தையும் இந்த புத்தகத்தின் மூலமாக அறிந்துகொள்ள முடிகிறது.

வரலாற்றுக் காலகட்டங்கள் என்று நாம் சொல்லிக்கொண்டாலும் வரலாற்றுக்கும் இப்போதைய சூழ்நிலைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை இந்தப் புத்தகத்தின் மூலமாக தெரிந்துகொள்ள முடிகிறது. மகலாதேவி சட்டோபாத்யாய்யின் அத்தியாயத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆச்சரியமான ஒரு வாக்கியத்தை அந்த அத்தியாயத்தில் காணமுடிந்தது. “ஒரு இஸ்லாமிய ஏழை விவசாயியை இஸ்லாமிய நில உடைமையாளர் கொடுமைப்படுத்துவதுபோல, ஒரு இந்து ஏழை விவசாயியை இந்து நில உடைமையாளர் கொடுமைப்படுத்துவதுபோல…. எந்த ஒரு முதலாளியும் அதிக சம்பளம் கொடுப்பதில்லை…” இந்த வாக்கியங்களில் உள்ள அரசியலையும் எதார்த்த நிலையையும் புரிந்துகொண்டால் அரசியல் என்பது நம் வாழ்விற்கு அப்பாற்பட்ட ஒரு விசயம் என்பதை மிக எளிதாக புரிந்துகொள்ள முடியும். எந்த ஒரு மத அரசியலும் அந்த மதத்தின் ஏழ்மையின், எதார்த்தத்தின் நிலையில் இருந்து முற்றிலும் விலகியே இன்றுவரை இருந்து வருகிறது. அப்போதும் அப்படித்தான் இருந்திருக்கிறது என்பது ஆச்சரியமான விஷயம்.

இந்த புத்தகத்தை  மற்ற புத்தகங்கள் போல சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் இது ஒரு முக்கிய ஆவணங்கள் அடங்கிய புத்தகம். இதையே ஒரு ஆவணமாக நாம் பாதுகாக்கலாம். இந்திய சுதந்திரத்தில் முக்கிய பங்காற்றிய பெரும் தலைவர்களின் கடிதங்கள் அடங்கிய முக்கிய புத்தகம் இது. பாட புத்தகம்போல் இருக்குமோ என்று பயப்படத் தேவையில்லை. சுருக்கமான முன்னுரைகளுடன் ஆசிரியர் விலகிக்கொள்கின்றார். தலைவர்களே புத்தகம் முழுவதும் ஆட்சிபுரிகின்றனர்.