நவம்பர் 8 முதல் நாட்டையே உலுக்கியெடுத்துவரும் பணமதிப்பு நீக்கம் தொடர்பாக நிறையப் புத்தகங்கள் இந்தப் புத்தகக் காட்சிக்கு வந்திருக்கின்றன. முக்கியமானது, பொருளாதார நிபுணர் ஜெ.ஜெயரஞ்சன் எழுதியிருக்கும் ‘இந்தியப் பொருளாதார மாற்றங்கள்’. இதேபோல ஜெயரஞ்சன் தொகுத்திருக்கும் ‘கருப்புப் பணமும் செல்லாத நோட்டும்’ புத்தகமும் பணநீக்க விவகாரத்தை அக்குவேறு ஆணிவேறாக அலசுகிறது. நரேன் ராஜகோபாலன் எழுதியிருக்கும் ‘கறுப்புக் குதிரை’ புத்தகம், கறுப்புப் பண உலகத்தை முழுக்க வெளிக்கொண்டு வருகிறது.

பேராசிரியர் ஷ்யாம் சேகர், பத்திரிகையாளர் தேவராஜ் பெரியதம்பி இருவரும் எழுதியிருக்கும் ‘பணமதிப்பு நீக்கம்’ புத்தகம், இந்நடவடிக்கையால் விளைந்தது என்ன, இனி செய்ய வேண்டியது என்ன என்பதைச் சுருக்கமாகவும் ஆழமாகவும் சொல்கிறது. பணமதிப்பு நீக்கம் தொடர்பில் மட்டும் அல்லாமல், பெருநிறுவனங்கள் இன்றைக்கு இந்தியப் பொருளாதாரத்தை எப்படியெல்லாம் ஆட்டுவிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளவும் இந்தப் புத்தகங்கள் நல்ல அறிமுகங்கள்.