123சென்னை,

நாணயவியல் ஆராய்ச்சி தமிழக இளைஞர்களிடம் பரவி வருவதாக சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் தெரிவிக்கப்பட்டது.

புத்தக வெளியீடு

சென்னை மைலாப்பூரில் உள்ள சிவகாமி பெத்தாச்சி நிகழ்வரங்கில், ‘தினமலர்’ ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘செழிய, செழியன்’ நாணயங்கள்’ என்ற புத்த வெளியீட்டு விழா august 27 அன்று  மாலை நடைபெற்றது. புத்தகத்தை தமிழ்நாடு தொல்லியல்துறை முன்னாள் இயக்குனர் இரா.நாகசாமி வெளியிட தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.திருமலை பெற்றுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அனுப்பிய வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டது.

பாண்டியர்கள் தான் மூத்தகுடி

அதில், ‘‘உங்கள் ஆராய்ச்சி முடிவுகளில் தமிழகத்தின் பாண்டிய, சேர, சோழ நாட்டின் எல்லைகளை, வரலாற்றை, வாழ்ந்த வாழ்க்கையை, இன்றைய இலங்கையை, ரோமானியர்களின் தொடர்புகளை, ஆட்சியின் எல்லைகளை நாணயங்களின் தன்மையை வைத்தே மதிப்பிட்டுள்ளீர்கள். பாண்டியர்கள் வெளியிட்டது போல், வெள்ளி முத்திரை நாணையங்களை சங்க கால சேரர்களோ, சோழர்களோ வெளியிட்டதாக தெரியவில்லை என்று கூறி மதுரையை ஆண்ட சங்க கால பாண்டியர்கள் தான் மூத்தகுடி என்பதை உறுதிபடுத்திருக்கிறீர்கள்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னர், மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ப.க.பொன்னுசாமி, சென்னை, செம்மொழி ஆராய்ச்சி மத்திய நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் க.ராமசாமி, ரீச் பவுண்டேசன் நிறுவனர் தி.சத்தியமூர்த்தி, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை, புலத்தலைவர் சுவடிப்புலம் கு.ராஜவேலு ஆகியோர் புத்தகம் குறித்து சிறப்புரையாற்றினர்.

தொடர்ந்து, ‘தினமலர்’ ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி ஏற்புரை ஏற்று பேசியதாவது:–

கொற்கை பாண்டியர்களின் சுயாட்சி

சங்க கால மதுரை பாண்டியர்கள் வெளியிட்ட நாணயங்களின் பின்புறத்தில், கோட்டு வடிவுடைய மீன் சின்னம் தான் இருக்கும். ஆனால், இந்த நாணயங்களின் பின்புறம் கிரீடம் அணிந்த மன்னர் தலை பொறிக்கப்பட்டுள்ளது. எனவே கொற்கையை ஆண்ட பாண்டியர்கள் சுய ஆட்சி புரிந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

அசோகர் வெட்டிய கல்வெட்டுகளில் தன் பேரரசின் தெற்கு எல்லையாக, சோடா, பாடா, சதியபுதோ, கேதல புதோ, தாம்ப பம்னி என்று கூறி உள்ளார். மேலும், தாம்ப பம்னி என்ற பெயர் பாலி மொழியில் உள்ளதாகவும், அதை ‘தாம்ர பர்னி’ என்று தான் படிக்க வேண்டும் என்று எழுதி உள்ளார்.

அசோகர் காலம் கி.மு. 3–ம் நூற்றாண்டு ஆகும். அக்காலகட்டத்தில், செழிய, செழியன் நாணயங்களை வைத்து கொற்கையை தலைநகராக கொண்டு பாண்டியர்கள் சுயாட்சி புரிந்து இருப்பார்கள் என்று கருதுகிறேன். தற்போது, நாணயவியல் ஆராய்ச்சி தமிழக இளைஞர்களிடம் பரவி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.