ஈரோட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 10-ம் ஆண்டு புத்தகத் திருவிழாவின் ஒரு பகுதியாக 10,000 பேர் ஒரே நேரத்தில் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

 புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை எல்லோரும் தொடர்ந்து கடைப்பிடிக்கவும், விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும், ‘மக்கள் சிந்தனைப் பேரவையின்’ சார்பில் இந்தப் புத்தகம் வாசிக்கும் விழா நடைபெற்றது. ஈரோடு வ.உ.சி. பூங்காவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சண்முகம், காவல் துறை கண்காணிப்பாளர் சிபிச்சக்ரவர்த்தி ஆகியோரும், பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்களும், புத்தகப் பிரியர்களும், பல்வேறு பள்ளி, கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களும், ஆசிரியர்களும், முதல்வர்களும் என 5,000 பேர் ஒரே இடத்தில் அமர்ந்து புத்தகம் படித்தனர்.

”தலைகுனிந்து புத்தகம் வாசிப்போம்… வாழ்வில் தலைநிமிர்ந்து நிற்போம்’ என்ற முழக்கத்தோடு சரியாக 9 மணிக்கு தொடங்கிய புத்தகம் வாசிக்கும் நிகழ்வு, 10 மணி வரை நடைபெற்றது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அனைவரும் ஒரு மணி நேரம் ஆர்வமாக புத்தகம் படித்தனர். வரும்போதே அனைவரும் புத்தகத்தைக் கொண்டுவந்திருந்தனர். ஒரு மணி நேரம் அனைவரும் அமைதியாகப் புத்தகம் படித்தது மிகவும் ரம்மியமாக இருந்தது.

ஈரோட்டின் சுற்று வட்டாரங்களிலும், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலும், 5,000-க்கும் மேற்பட்டவர்கள் ஒரு மணி நேரம் புத்தகம் படிக்கும் நிகழ்வு நடந்தது. ஆர்.என்.புதூரில் அதே நேரத்தில் ஒரு மணி நேரம் 200 ஆதரவற்ற குழந்தைகளும் புத்தகம் படித்தனர்.

புத்தகம் வாசிக்கும் நிகழ்வு முடிந்ததும் நம்மிடம் பேசிய மக்கள் சித்தனைப் பேரவையின் தலைவர் ஸ்டாலின் குணசேகரன், ”நாங்கள் தொடர்ந்து 10 ஆண்டுகளாக இந்தப் புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறோம். இந்த நிகழ்வில் ஒரு பகுதியாக, புத்தகம் வாசிப்பதன் அவசியத்தை உண்ர்த்தும் வகையில் 2012-ம் ஆண்டு ‘விழிப்பு உணர்வு மாரத்தான்’ போட்டியை நடத்தினோம். அதில் 12,500 பேர் கலந்துகொண்டனர். அந்த மாரத்தான் போட்டி மூலமாக எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த வருட புத்தகத் திருவிழாவில் புதுமையாக எதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன்.

கடந்த மாதம் கொடைக்கானல் வானொலியில் பேசினேன். அப்போதுதான் எனக்கு இந்தப் புத்தகம் வாசிக்கும் நிகழ்வை நடத்தும் யோசனை வந்தது. அந்த நிகழ்ச்சியில் அறிவித்துவிட்டு, இங்கே வந்து அதற்கான பணிகளை ஆரம்பித்தோம். புத்தகத் திருவிழாவில் தினந்தோறும் மாலையில் பிரபலங்கள் பேசும் நிகழ்வில், இந்தப் புத்தக வாசிப்பு நிகழ்வு பற்றி அறிவிப்பு செய்தோம். அதன்படி வெற்றிகரமாக மாணவர்களுக்கும் மக்களுக்கும் புத்தகம் வாசிப்பதன் அவசியத்தை உணர்த்திவிட்டோம்” என்றார் மகிழ்ச்சியாக.

புத்தகம் வாசிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ஈரோடு செங்குந்தர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி நந்தினி, ”வெறும் கல்லூரி புத்தகத்தை மட்டுமே படித்துக்கொண்டிருந்த எனக்கு, உலகில் இன்னும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளது என்பதை இந்தப் புத்தக வாசிப்பு நிகழ்வு உணர்த்தி உள்ளது” என்றார். மாணவி தேன்மொழி, ”புத்தகம் படிப்பதன் மூலம் மனதுக்கு அமைதி கிடைக்கிறது என்பதையும், தொடர்ந்து புத்தகம் படிப்பதால் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்பதையும் தெரிந்துகொண்டேன். இனி நான் தினமும் நல்ல புத்தகங்களைப் படிப்பேன்” என்றார்.

இந்தப் புத்தகத் திருவிழா மற்றும் புத்தக வாசிப்பு நிகழ்ச்சிக்காகவே சிங்கப்பூரில் இருந்து வந்திருந்த சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் நா.ஆண்டியப்பன், ”நான் ஆண்டுதோறும் இந்தப் புத்தகத் திருவிழாவுக்குத் தவறாமல் வருவேன். புத்தக வாசிப்பு நிகழ்வில் கலந்துகொண்டது புது உணர்வையும், சந்தோஷத்தையும் கொடுத்தது” என்றார்.

நாமும் நல்ல புத்தகங்களைப் படிப்போம்; நல்ல மனிதர்களாக வாழ்வோம்.

– கு.ஆனந்தராஜ்

படங்கள்: ரமேஷ் கந்தசாமி, அ.நவின்ராஜ்

Thanks : ஜூ.வி.