books-publishedசென்னையில் நடைபெற்ற கம்பன் விழாவில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் எழுதிய புத்தகத்தை, சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் வெளியிட்டார்.

புத்தகம் வெளியீடு

சென்னை கம்பன் கழகத்தின் சார்பில், 40-வது ஆண்டு கம்பன் விழா, ‘யாவரும் கேளிர்’ என்னும் தலைப்பில் நேற்று தொடங்கியது. மைலாப்பூர் ஏவி.எம். ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்ற தொடக்க விழாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் தலைமை தாங்கினார். கம்பன் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் வரவேற்புரையாற்றினார்.

விழாவில், நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் எழுதிய ‘கம்பனில் சட்டமும் நீதியும்’ புத்தகத்தை நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் வெளியிட, சென்னை கம்பன் கழகத்தின் துணைத் தலைவரும், தொழில் அதிபருமான நல்லி குப்புசாமி பெற்றுக்கொண்டார்.

முதல் கம்பன் கழகம்

கம்பன் விழாவையொட்டி, கம்பன் கழகம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளிடையே நடைபெற்ற போட்டிகளுக்கான பரிசுகளை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார். விருது மற்றும் நினைவுப்பரிசுகளை வழங்கி சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் தலைமை உரையாற்றியபோது பேசியதாவது:-

நாடெங்கும் கம்பன் கழகம் தோன்றியிருப்பது, தமிழுக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்பதை காட்டுகிறது. முதல் கம்பன் கழகம் 75 வருடங்களுக்கு முன் காரைக்குடியில் சா.கணேசனால் தோற்றுவிக்கப்பட்டது.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’

கம்பன் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற தத்துவத்தை அன்றே வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் தன் கவிதையில், ராமன் தன் உடன்பிறந்த சகோதரர்களுடன், காட்டுவாசி குகனை தன் 5-வது சகோதரராகவும், குரங்கினமான சுக்ரீவனை தன் 6-வது சகோதரராகவும், அரக்கர் இனத்தை சேர்ந்த விபீஷணனை தன் 7-வது சகோதரராகவும் ஏற்றுக் கொண்டதாகவும் கூறி இருக்கிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் சிவசங்கரி நிறுவி உள்ள எழுத்தாளருக்கான விருது, எழுத்தாளர் மாலனுக்கும், ஆழ்வார்கள் ஆய்வு மையம் நிறுவி உள்ள கம்பர் விருது இரா.செல்வகணபதிக்கும், நீதிபதி மு.மு.இஸ்மாயில் நிறுவி உள்ள பேராசிரியர் கே.சுவாமிநாதன் நினைவுப்பரிசு ரா.மோகனுக்கும், நீதிபதி மு.மு.இஸ்மாயில் குடும்பத்தினர் நிறுவி உள்ள மு.மு.இஸ்மாயில் நினைவுப்பரிசு கவிஞர் தணிகைச்செல்வனுக்கும், ராசிபுரம் எஸ்.கிருஷ்ணமூர்த்தி நிறுவி உள்ள கி.வா.ஜ. நினைவுப்பரிசு கலைமகள் ஆசிரியர் கீழாம்பூருக்கும் வழங்கப்பட்டது.

நினைவுப்பரிசுகள்

டி.சதாசிவம்-எம்.எஸ்.சுப்புலட்சுமி நிறுவி உள்ள கம்பன் அடிப்பொடி நினைவுப்பரிசு தமிழ்முடிக்கும், ராசிபுரம் எஸ்.கிருஷ்ணமூர்த்தி நிறுவி உள்ள ராதாகிருஷ்ணன் நினைவுப்பரிசு ரா.ராஜேந்திரனுக்கும், சாந்தி சாதனா நிறுவி உள்ள மர்ரே எஸ்.ராஜம் நினைவுப்பரிசு நர்மதா பதிப்பகம் டி.எஸ்.ராமலிங்கத்துக்கும், ராசிபுரம் எஸ்.கிருஷ்ணமூர்த்தி நிறுவி உள்ள க.கு.கோதண்டன் நினைவுப்பரிசு இசைக்கவி ரமணனுக்கும் வழங்கப்பட்டது.

எஸ்.இத்ரீஸ் மரைக்காயர் நிறுவி உள்ள சீராப்புராணம் பரிசு மு.அப்துல் ரசாக்குக்கும், திருக்குவளை வை.ராம சீனிவாசன்-மங்கையர்க்கரசி நினைவு அறக்கட்டளை நிறுவி உள்ள திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை நினைவுப்பரிசு அருணை.பாலறாவாயனுக்கும், பேராசிரியர் அ.ச.ஞா.குடும்பத்தினர் நிறுவி உள்ள சிறந்த நூலுக்கான அ.ச.ஞா. விருது இலங்கை ஜெயராஜுக்கும், எஸ்.பி.தியாகராஜன்-வள்ளியம்மை நிறுவி உள்ள கம்பன் அடிப்பொடி சா.கணேசனார் விருது மாணவன் த.திருமாறனுக்கும், பேராசிரியர் சாலமன் பாப்பையா பட்டிமன்றக்குழு பரிசு மாணவி அனுகிரகா ஆதிபகவனுக்கும் வழங்கப்பட்டது.

குறுந்தகடு வெளியீடு

மேலும், கம்பன் கழகமும், ஸ்ரீகிருஷ்ணா இனிப்பகமும் இணைந்து நடத்திய ‘மூன்றெழுத்தில் முழுக்காப்பியம்’, மகாகவி பாரதியின் ‘புதிய ஆத்திசூடி’ குறுந்தகடுகளை செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவன துணைத்தலைவர் அவ்வை நடராஜன் வெளியிட ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஏ.எம்.சுவாமிநாதன் பெற்றுக்கொண்டார்.

சாரதா நம்பிஆரூரன் விருதாளர் அறிமுக உரை வழங்கினார். ‘இப்பொழுது எதற்கு ராமாயணம்?’ என்ற தலைப்பில் சோ.சத்தியசீலன் சிறப்புரையாற்றினார். விழாவில், படஅதிபர் ஏவி.எம்.சரவணன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோஷம், முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன், கவிஞர் காசிமுத்து மாணிக்கம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.