பித்தன் !

நூல் ஆசிரியர் : கவிக்கோ அப்துல் ரகுமான் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை-17. பேச : 044-28343385 விலை : ரூ. 45.

*****

‘கவிக்கோ’ என்றால் உலகம் முழுவதும் அறியப்பட்ட கவிஞர். அப்துல் ரகுமான் என்று பெயர் சொல்ல வேண்டாம். கவிக்கோ என்றாலே அனைவருக்கும் விளங்கும். கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் ‘பித்தன்’ என்ற நூலில், சித்தர்கள் போல கவிதை எழுதி உள்ளார். முன், பின் அட்டை, உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக அச்சிட்டுள்ளனர் நேஷனல் பதிப்பகத்தார்.

27 தலைப்புகளில் கவிதைகள் உள்ளன.

அம்பலம்

அவர்கள் / வேடங்களில் / வசிக்கிறார்கள்

அது அவர்களுக்கு / வசதியாக இருக்கிறது

வேடம் களைந்தால் / மேடை போய்விடும்

நான் அவர்களுடைய / அம்பலம்

கவனி! / அம்பலம் / என் மேடையல்ல / நடனம்

அதனால் தான் என்னைப் / பித்தன் என்கிறார்கள் / என்றான்.

உண்மை பேசினால் பலருக்கு பிடிப்பதில்லை. உடனே அவனுக்கு பித்தன் என்று முத்திரை பதித்து விடுவார்கள்.

பித்தன் என்ற நூலின் தலைப்பு மிகப் பொருத்தம். பல உண்மைகளையும் கவிதை வரிகளால் நன்கு வடித்துள்ளார். சொற்கள் என்ற கற்கள் கொண்டு புதுக்கவிதை சிலைகள் வடித்துள்ளார்.

அனாதை!

அனாதையை ஆதரிப்பார் / யாருமில்லையா? என்று

யாருமில்லையா என்று? / பித்தன் / கடைத்தெருவில்

கூவிக்கொண்டிருந்தான். / யார் அந்த / அனாதை? என்று கேட்டேன்.

உண்மை என்றவன் / கடைத்தெருவில் / அது அனாதையாக

அழுது கொண்டிருந்தது / அதை யாருமே / அடையாளம் கண்டு கொள்ளவில்லை / என்று கூறினான் / ஏன்? என்றேன்.

நெற்றியில் / திருநீறோ, நாமமோ / இல்லை / மார்பில்

சிலுவை இல்லை / தலையில் தொப்பியில்லை / அதனால்

அதை யாருமே / அடையாளம் கண்டு கொள்ளவில்லை / என்றான்.

மத குறியீடுகள் அடிப்படையில் அடையாளம் காணும் மனித மனங்களைச் சாடும் விதமாக புதுக்கவிதை வடித்துள்ளார்கள்.

புதுக்கவிதை என்ற பெயரில் சிலர் புரியாத கவிதை எழுதி வருகின்றனர். ஆனால் கவிக்கோ அவர்கள் நூலிற்கு ‘பித்தன்’ என்று தலைப்பிட்ட போதும் அனைவருக்கும் புரியும் வண்ணம் எழுதி உள்ளார்கள். பாராட்டுக்கள்.

நீதிமன்றத்தில் பெரும்பாலான தீர்ப்புகள் நீதியாக இருந்தாலும், ஒரு சில தீர்ப்புகள் அநீதியாகவும் அமைந்து விடுகின்றன. மக்களுக்கு எதிரான தீர்ப்புகளும் வந்து விடுகின்றன. நல்ல தீர்ப்பு வந்தாலும் சிலர் அதனை செயல்படுத்த மறுத்தும் விடுகின்றனர். அவற்றை உணர்த்தும் புதுக்கவிதை.

பக்கவாதம்!

நீதிதேவதையின் / சிலையைப் பார்த்துப் / பித்தன் சிரித்தான்

ஏன் சிரிக்கிறாய்? என்று கேட்டேன்.

உங்கள் / நீதி தேவதை மட்டுமல்ல / அவளுடைய தீர்ப்புகளும்

குருடாகவே இருக்கின்றன / என்றான் பித்தன்.

சித்தர்களின் தத்துவம் போல, வாழ்வின் நிலையாமையை உணர்த்துவது போல கவிதைகள் உள்ளன.

அவதாரம்

பறப்பவன் / முடியைக் / காணாமல் போகலாம்

இறங்குபவன் / அடியைக் / கண்டு விடுவான்

பழுத்த கனியே / கீழே இறங்கும்

மேலே என்பது / மேலே இருக்கிறது / என்பது தான்

உங்கள் / பெரிய மூட நம்பிக்கை.

சமநிலை, நீதி நிலை, அற நிலை உணர்த்து விதமாக பல ஒப்பூடுகளுடன் ஒப்பில்லாக் கவிதை வடித்துள்ளார். பாருங்கள்.

மத்திய ரேகை

பூவின் சாரம் / நடுவில் ஒழிந்திருக்கும் / தேனில் இருக்கிறது

உதிரும் இதழ்களில் இல்லை / மையத்திலிருந்து / விலகும் எதுவும்

வீரியம் இழக்கிறது /

வாழ்க்கை என்பது / கழைக்கூத்து / சமநிலை தவறுகிறவன்

விழுந்து விடுகிறான்.

கவிதைகள் நீளமாக இருந்தாலும் மிகப்பிடித்த வரிகளை மட்டும் மேற்கோளாக எழுதி உள்ளேன்.

சிலர், தன் வீடு, தன் குடும்பம் என்று சுருங்கி விடுகின்றனர். அவர்களைப் பார்த்து கேட்பது போல எள்ளல் சுவையுடன் எழுதிய கவிதை நன்று.

வீடு!

வீடு கட்டிக் கொண்டிருப்பவர்களைப் / பார்த்துப் / பித்தன் சிரித்தான்

ஏன் சிரிக்கிறாய்? / என்று கேட்டேன்.

கூடு கட்டுவதாக / நினைத்து கொண்டு / இந்தப் பறவைகள்

கூண்டுகள் செய்கின்றன / என்றான்.

குயில் / கூடு கட்டுவதில்லை / அதனால் தான் அது / பாடுகிறது.

பெண்களைப் பற்றி எழுதியுள்ள கவிதை மிகவும் வித்தியாசமானது. சிந்திக்க வைப்பது.

பெண்!

சொர்க்கத்தையும் / நரகத்தையும் / பூமியிலேயே நாம்

சுவைத்துப் பார்க்கவே / இறைவன் / பெண்ணைப் படைத்தான்

நாம் / காணாமல் போவதும் / அவளிடமே.

நம்மைக் கண்டெடுப்பதும் / அவளிடமே.

உச்சத்தில் வந்து விட்டவர்களை, உலகமே மதிக்கும், பாராட்டும், போற்றும். ஆனால் அவர்கள் உச்சத்திற்கு வர ஏணியாக இருந்தவர்களை யாரும் கண்டு கொள்வதில்லை. அவர்களும் அதற்காக வருந்துவதும் இல்லை. அவற்றை குறியீடாக உணர்த்தும் புதுக்கவிதை மிக நன்று.

தீக்குச்சி!

தீக்குச்சி / விளக்கை ஏற்றுகிறது / எல்லோரும்

விளக்கை வணங்கினார்கள்.

பித்தன் / கீழே எறியப்பட்ட / தீக்குச்சியை வணங்கினான்.

ஏற்றப்பட்டதை விட / ஏற்றி வைத்தது / உயர்ந்ததல்லவா! என்றான்.

அவன் மேலும் சொன்னான் / தீக்குச்சி தான் பிரசவிக்கிறது

விளக்கோ வெறும் காகிதம் / தீக்குச்சி பிச்சை போடுகிறது.

விளக்கோ வெறும் பிச்சைப் பாத்திரம்.

தீக்குச்சி / ஒரே வார்த்தையில் பேசி விடுகிறது

விளக்கோ / வளவளக்கிறது.

இப்படியே நீள்கிறது கவிதை. சொல் விளையாட்டு விளையாடி, அரிய, பெரிய, கருத்துக்களை லாவகமாக கவிதைகளில் விதைத்துள்ளார். கவிக்கோ என்ற பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர். பாராட்டுக்கள்.

.

நன்றி

அன்புடன்

கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/

.

http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

இறந்த பின்னும்

இயற்கையை ரசிக்க

கண் தானம் !