நெல்லை: நெல்லையில் 10 நாள் புத்தக திருவிழா தொடங்கியது. 150 அரங்குகளில் ஏராளமான புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 1 லட்சம் புத்தகங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடந்த புத்தக கண்காட்சி வாசகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பாளை வ.உ.சி மைதானத்தில் கடந்த ஆண்டு 102 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் ரூபாய் 1.5 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகின. நெல்லையில் புத்தக கண்காட்சிக்கு இருந்த வரவேற்பை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் கண்காட்சி நடந்த தீர்மானிக்கப்பட்டது.

இந்த ஆண்டுக்கான கண்காட்சி பாளை வஉசி மைதானத்தில் தொடங்கியது. மைதானத்தில் இந்தாண்டு 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 143 பதிப்பகத்தார் புத்தக கண்காட்சியில் பங்கேற்றுள்ளனர். அனைத்து அரங்குகளுக்கும் தேவையான புத்தகங்கள் லாரியில் வந்து இறங்கின. ஒவ்வொரு அரங்கிலும் புத்தகங்களை வரிசையாக அடுக்கி வைக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். புத்தக கண்காட்சிக்கான பணிகளை கலெக்டர் கருணாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏற்பாடுகள் குறித்து புத்தக கண்காட்சி ஒருங்கிணைப்பாளரும், வணிக வரித்துறை இணை ஆணையருமான தேவேந்திர பூபதி கூறுகையில், இந்தாண்டு கண்காட்சியில் மொத்தம் 143 அரங்குகள் புத்தக விற்பனைக்காகவும், 7 அரங்குகள் அரசு அரங்குகளாகவும் இடம் பெற்றுள்ளன.
தாமிரபரணி பாதுகாப்பு, தமிழ் பண்பாட்டு வளர்ச்சி மைய நிகழ்வுகள், வரவேற்பு அரங்கம், வங்கி சேவை என 7 அரங்குகளை அரசு பயன்படுத்தி கொள்ளும். இக்கண்காட்சிக்கு ஒரு லட்சம் தலைப்பிலான புத்தகங்கள் வந்துள்ளன. இந்த ஆண்டு புத்தக விற்பனைக்கு ரூபாய் 3 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.