“நான் நிறைவாக வாழவில்லை!”
நிஜம் பேசும் ஜெயகாந்தன்
தமிழ்மகன், டி.அருள் எழிலன்
படங்கள்: கே.ராஜசேகரன்

ஜெயகாந்தன் அகவை 80-ஐ எட்டும் வேளையில், ‘ஜெயகாந்தன் கதைகள்’ விகடன் பிரசுர வெளியீடாக வருகிறது. ஆனந்த விகடனில் வெளிவந்த அதே வடிவத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் தொகுப்பாக வரவிருக்கும் இந்த நூலைத் தொகுத்திருப்பவர்கள் இங்கிலாந்தில் வசிக்கும் டாக்டர் என்.ராம், வனிதா ராம் தம்பதி.

ஓய்வாக இருக்கிறார் ஜெயகாந்தன். முதுமை உருவாக்கிய கனிவுக் கண்களால்… ‘அப்படி என்ன கேட்டுவிடப்போகிறீர்கள்?’ என்கிறது வலது கண். ‘இன்னும் சொல்ல என்ன இருக்கிறது?’ என்கிறது இடது கண். அறைக்குள் நுழையும் பேத்தி ஷைலுவைக் கொஞ்சும்போது, குழந்தை ஆகிறார்.

”அய்யா… உடல் நிலை எப்படி இருக்கிறது?”

”ம்ம்ம்… வயதுக்கு ஏற்ப உடல் நிலை இருக்கிறது.”

”எல்லாவற்றுக்கும் ஆயுள் என்று ஒன்று உண்டு. ஒரு படைப்பாளியின் எழுத்தின் ஆயுளைத் தீர்மானிப்பது எது?”

”’எழுத்தாளன் ஒரு சட்டத்தின் துணைகொண்டு, ‘இது சரி… இது தப்பு…’ என்று தீர்ப்பும் தண்டனையும் அளிக்கும் சாதாரண ஒரு நீதிபதி அல்ல. வஞ்சிக்கப்பட்டவர்களிடமும், தண்டிக்கப்பட்டவர்களிடமும், சபிக்கப்பட்டவர்களிடமும் குடிகொண்டுள்ள மனித ஆத்மாவையே அவன் நாடிச் செல்கிறான்’- எழுத்தாளன் பற்றி நான் சொன்ன இந்தக் கருத்து எழுத்துக்கும் பொருந்தும். எழுத்தின் ஆயுளைத் தீர்மானிப்பவர்கள் அதை எழுதிய எழுத்தாளர்கள்தான். வேறு யாரும் வெளியில் இருந்து தீர்மானிக்க முடியாது. ஆனால், எழுத்தைக் கீழான நோக்கங்களுக்குப் பலர் பயன்படுத்தியதால், அது கூர்மை மழுங்கிப்போய் இருக்கிறது. எழுத ஆரம்பித்திருக்கும் இளைஞர்கள்தான், அதற்குக் கூர்மை கொடுக்க வேண்டும்!”

” ‘கதைகளில் வேகம் இருக்க வேண்டும், விறுவிறுப்பு இருக்க வேண்டும்’ என்று சொன்னபோது ‘குதிரைப் பந்தயத்துக்குப் பயன்படுத்தும் வார்த்தைகளை எல்லாம் இலக்கியத்துக்குப் பயன்படுத்தக் கூடாது’ என்றீர்கள். இப்போது ஸ்பீட் கதைகள், ஒரு நிமிடக் கதைகள், குறுங்கதைகள் என்றெல்லாம் இலக்கியம் வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது. கால மாற்றத்துக்கு இந்த வடிவங்கள் எல்லாம் தேவை என்று நினைக்கிறீர்களா?”

”இந்த மாதிரி கதைகளைப் பற்றி நான் ஒன்றுமே நினைப்பது இல்லையே!” (முகத்தை உயர்த்திப் பார்க்கிறார்)

”எழுத்தாளர், பத்திரிகையாளர், சினிமாக்காரர்… எனப் பல முகங்கள் உங்களுக்கு உண்டு. எழுத்தாளனாக உச்சம் தொட்ட நீங்கள், மற்ற துறைகளில் எதில் நிறைவு கண்டதாக உணர்கிறீர்கள்?”

”பத்திரிகைத் துறை பங்களிப்பில் நிறைவு கண்டதாக நினைக்கிறேன். அதுவும் ஓரளவுதான். பத்திரிகை என்பதுதான் பலருடைய எண்ணங்க ளுக்கு இடம் அளிக்கவேண்டிய துறை. அதில் பலருடைய எண்ணங்களையும் விருப்பங்களையும் நிறைவேற்ற வேண்டியிருக்கிறது. பலருடைய நிலைமைகளையும் அனுசரித்து நிறைவேற்றிய நிறைவு, எனக்கு ஓரளவு உண்டு.”

”இப்போது வாசித்துக்கொண்டிருக்கிற புத்தகம்?”

”தஸ்தாயெவ்ஸ்கியின் ‘கேம்ப்ளர்’ நாவலை இப்போது வாசித்துக்கொண்டி ருக்கிறேன். அது எழுதப்பட்டு ஒரு நூற்றாண்டுக்கும் மேல் ஆகிவிட்டது. என்றாலும், அது எனக்குப் புதிதாகவே இருக்கிறது. படிக்கும்போது அது எழுதப்பட்ட கால வித்தியாசத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.”

”எழுத்தாளர்களைச் சமூகம் கொண்டாட வேண்டும் என்று சில எழுத்தாளர்கள் சொல்கிறார்களே?

”எழுத்தாளனை எழுத்தாளனாகக் கொண்டாட வேண்டும் சமூகம். ‘என்னைத் தனியாகக் கவனியுங்கள், என்று எழுத்தாளன், மக்களிடம் மனு போட்டுக்கொண்டிருக்க முடியாது. ஆனால், எழுத்தாளனின் ஸ்தானத்தை எழுத்தாளர்கள்தான் கெடுத்துக்கொள்கிறார்கள். இது தனி மனித உரிமை என்றொரு வாதம் வைக்கப்படுகிறது. பிரச்னைகளை அக்கறையோடு அணுகி, தீர்வு காண வேண்டும் என்பதுதான் கலைஞனின் சமூகக் கடமை. அது இல்லாதபட்சத்தில் அவனை சமூகம் விட்டுத்தள்ள வேண்டும். இதற்குக் கூட்டம் கூட்டி ஒன்றும் செய்ய முடியாது!”

”ஓர் எழுத்தாளனாக முழு திருப்தியோடு வாழ்ந்திருக்கிறீர்களா?”

”எழுத்து, எனக்கு ஜீவனம் அல்ல; ஜீவன். நான் வாழ்ந்திருக்கிறேன். அது போதாது. எல்லோரும் நிறைவோடு வாழ வேண்டும் என்பதும் என் அவா!”

”முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இடதுசாரிகள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். ஓர் இடதுசாரியான உங்களுக்கு இதில் வருத்தம் ஏதும் இல்லையா?”

”மக்களை விமர்சிப்பதில் பயன் இல்லை. ஏனென்றால், தேர்தல் வந்தால் மக்களிடம்தான் செல்ல வேண்டியிருக்கிறது. குறிப்பாக, அரசியல்வாதிகள் தங்களை மதிக்காத மக்களை நாடிச் செல்கிறார்கள். அதற்குரிய பலன் இதுவே. அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் மிகப் பெரிய இடைவெளி உண்டாகிவிட்டது. கூடியவரை மக்களை அரசியல்வாதிகள் ஏமாற்றுவதும், மக்களிடம் அரசியல்வாதிகள் ஏமாறுவதும் மாறிமாறி நடக்கின்றன. இதில் நான் சொல்ல என்ன இருக்கிறது!”

”’வாழ்க்கை, முரண்பாடுகளின் மூட்டையாக இருக்கிறது’ என்று எழுதியிருக்கிறீர்கள். உங்கள் தொடக்கக் கால வாழ்வோடு இப்போது எந்த அளவுக்கு முரண்பட்டிருக்கிறீர்கள்?”

”எல்லா விஷயங்களிலும் வாழ்க்கை முரண்பட்டிருக்கிறது. வாழ்க்கையின் அமைப்பே அப்படித்தான் இருக்கிறது. இயற்கையிலேயே இருக்கிற முரண்பாடுகள் ஒரு பக்கம் என்றால், செயற்கையான பல முரண்பாடுகளை சில வியாபாரிகள் உருவாக்கி வருகிறார்கள்!”

”இப்போது, உங்களுடைய ஒரு நாள் வாழ்க்கை எப்படி அமைகிறது?”

”ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. மாற்றம் எதுவும் இல்லை!”

”நிறைவான வாழ்க்கை வாழ்ந்ததாக நினைக்கிறீர்களா?”

”இல்லை… நிறைவு அளிக்கவில்லை. மிகவும் குறைபாடுடையதாக… குறைபாடுகள் மட்டுமே தெரிவதாகத் தெரிகிறது!”

”இன்றைய தலைமுறையினருக்கு பணம் மட்டுமே வாழ்வு என்று ஆகியுள்ளதே?”

”மதிப்பெண் வாங்குவதையே வெற்றி என்று நினைக்கிறார்கள் மாணவர்கள். பெற்றோர்கள் இதை ஊக்குவித்து வழி வகுக்கிறார்கள். அரசியலிலும் தனி மனித வாழ்விலும் எங்கும் லாபக் கணக்குகளைப் பார்த்து மட்டுமே வாழத் தொடங்கிவிட்டனர். இதையும் மாற்ற, இளைஞர்கள்தான் வர வேண்டும். லாப-நட்ட கணக்குகளை மட்டுமே பார்க்கக் கூடாது. மக்களை விமர்சனம் செய்வதில் பலன் இல்லை என்று ஆரம்பத்தில் சொன்னேன். மக்கள் என்போர் முன் தலைமுறையைச் சார்ந்தவர்கள்தான். வரும் தலைமுறையை வழிநடத்த வேண்டியது முன் தலைமுறையின் கடமை!”

”தமிழர்களின் மிகச் சிறந்த குணம் எது… மிக மோசமான குணம் எது?”

”தமிழர்களிடம் சிறப்பான குணம் என்று ஒன்றைத் தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. கோழைத்தனம்தான், பொதுவான குணமாக இருக்கிறது. தனிப்பட்ட குணமாக ஒன்றிரண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தலையெடுக்கலாம். அதில் சிறப்பானதைக் கொண்டாடுவதும், சிறப்பற்றதைக் காணாமல்விடுவதும்தான் எழுத்தாளன் பணி.”

நன்றி : ஆனந்த விகடன்

   Send article as PDF