சேலம்: சேலம், தேசிய சமூக இலக்கிய பேரவை சார்பில், “மாஜி’ அமைச்சரும் தியாகியுமான கக்கனின், 105வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, நூல் வெளியிடப்பட்டது.

சேலம் தாரை சிட்ஸ் கூட்ட அரங்கில் நடந்த விழாவுக்கு, தேசிய சமூக இலக்கிய பேரவை தலைவர் சிவலிங்கம் தலைமை வகித்தார். பொருளாளர் தர்மலிங்கம் வரவேற்று பேசினார். மாநில துணைத் தலைவர் குப்புசாமி முன்னிலை வகித்தார்.

கக்கனின் வரலாற்று நூலை, இலக்கிய பேரவையின் மாநில தலைவரும், செங்குந்தர் சங்கத்தின் தென்னிந்தியப் பொருளாளருமான தாரை குமரவேலு வெளியிட, பேரவையின் மாவட்ட தலைவர் முருகன் பெற்றுக் கொண்டார்.

தாரை குமரவேல் பேசியதாவது:

எளிய குடும்பத்தில் பிறந்த கக்கன், 12வது வயதில், பண்ணைக்கு கூலி வேலைக்கு சென்றார். பின்னர், விடுதலைப் போராட்டத்தில் தொண்டனாக தொடங்கி, லோக்சபாவில் உறுப்பினராக, தமிழக அமைச்சராக, பொது வாழ்க்கையில் உயர்ந்தார். ஆனால், தனி மனித வாழ்க்கையில் தொடங்குகின்றபோது எப்படி இருந்தாரோ, அப்படியே தூய்மையாகவும், நேர்மையாகவும், ஏழையாகவும், இறுதி வரை வாழ்ந்து மறைந்தார்.

மனிதனின் பிறப்பும், இறப்பும் இயற்கையே வாழும் காலத்தில், சமுதாயத்திற்கு செய்யும் சேவையைப் பொறுத்து, புகழ் கிடைக்கிறது. அதனால், தியாகி கக்கனின் வாழ்க்கை, பிறருக்கு எடுத்துக் காட்டாகவும், வழிகாட்டியாகவும், இன்றும் அமைகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கக்கனின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதிய முன்னாள் மதுரை வானொலி நிலைய இயக்குனர் இளசை சுந்தரம் கவுரவிக்கப்பட்டார், பேராசிரியர் சீனிவாசன், மத்தூர் முருகன், தாரை ராஜகணபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.