10330347_1502084773348622_4897460423492545022_nஉயிர்மை மற்றும் சுஜாதா அறக்கட்டளை இணைந்து வழங்கிய 2013ஆம் ஆண்டு சுஜாதா விருதுகள் வழங்கும் விழா சுஜாதாவின் பிறந்த நாளான மே மாதம் 3ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு சென்னை அண்ணா சாலை புக் பாய்ண்ட் அரங்கத்தில் மிக சிறப்பாக நடைப்பெற்றது.

மேடை நிறைந்த காட்சியாக ஒருபுறம் விருது பெறுபவர்களும், மறுபுறம் தேர்வு குழு உறுப்பினர்களும் இடம் பெற மையப்புள்ளியாக திருமதி. சுஜாதா அவர்களும் விழாவை 6ஆண்டுகளாக சிறப்புற எடுத்து நடத்தும் உயிர்மை உரிமையாளர் திரு. மனுஷ்யபுத்திரன் அவர்களும் அமர்ந்திருக்க விழா இனிதே ஆரம்பமாயிற்று. அரங்கம் நிறைந்த வாசகர்களுடன் அரங்கத்திற்கு வெளியிலும் வாசகர்கள் கூட்டம். காண மகிழ்ச்சியாக இருந்தது. விழா சற்றே தாமதமாக தொடங்கினாலும் மனுஷ்யபுத்திரன் அவர்களின் சிறப்பான வரவேற்புரையுடன் நிகழ்ச்சி களைகட்டியது. 6 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 3 நீதிபதிகள் இடம் பெற்று விருதாளர்களை தேர்வு செய்தனர்.

சுஜாதா சிறுகதை விருது திரு. என் ஸ்ரீராம் எழுதிய ‘மீதமிருக்கும் வாழ்வு’ என்ற நூலுக்கும், சுஜாதா நாவல் விருது திரு. சி. மோகன் எழுதிய ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’ என்ற நூலுக்கும், சுஜாதா கவிதை விருது திரு. ரவி உதயன் எழுதிய ‘சிறகுகளை சேமிக்கிறவன் பறவையாகிறான்’ என்ற நூலுக்கும், சுஜாதா உரைநடை விருது பேரா. தொ. பரமசிவம் எழுதிய ‘பரண்’ என்ற நூலுக்கும், சுஜாதா சிற்றிதழ் விருது ‘நிழல்’ என்ற இதழுக்கும், சுஜாதா இணைய விருது அரவிந்த் சச்சிதானந்தம் அவர்களின் www.aravindhskumar.com என்ற இணைய இதழுக்கும் வழங்கப்பட்டன.

அந்தந்த பிரிவை சார்ந்த நீதிபதிகளில் ஒருவர் தாங்கள் தேர்ந்தெடுத்த நூல்கள் குறித்து பேச அழைக்கப்பட்ட போது எல்லோருமே புலவர்களை மறந்து புரவலர்‘பா’ பாடியது சற்று தூக்கலாகவே தெரிந்தது. ஆனாலும் நிகழ்ச்சி தொகுப்பாளினி சுகிதா ஒவ்வொரு விருதாளரிடமும் முறையே இரண்டு கேள்விகளை கேட்டு அதற்கான பதிலையும் பெற்றது விருதாளர்களை வாசர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருந்தது. சுஜாதா தமிழ் எழுத்துலகம் மறக்கமுடியாத ஒரு தீவிர சக்தி. அந்த மாமனிதரை நினைவூட்டுவதாக எண்ணி நினைவாஞ்சலி என்ற பெயரில் ஏதோ ஒரு நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.

இந்த ஆண்டு சந்தியா பதிப்பகம் சிறந்த நாவலுக்கான விருதையும், உரைநடைக்கான விருதையும் பெற்றுள்ளது.

திருமதி. சுஜாதா அவர்களின் நன்றி உரையுடன் விழா சிறப்பாக முடிவுற்றது.