பழைய கதை புதிய பார்வை
வெளியீடு: ராம்பிரசாத் பப்ளிகேஷன்ஸ்,
106/4, ஜானி ஜான்கான் சாலை, சென்னை – 14
விலை: 45

இ.எஸ். லலிதாமதி எழுதியிருக்கும் சிறுகதைத் தொகுப்பு குழந்தைகளுக்கு வழிகாட்டும் பழைய கதை, புதிய பார்வை. ஓர் உப்பு வியாபாரி வயதான கழுதை மீது தன் வியாபாரத்துக்காக அதிக எடையுள்ள உப்பு மூட்டையை ஏற்ற, அதன் பாரம் சுமக்க முடியாமல் சுருண்டு விழுந்தது கழுதை. வியாபாரி கம்பைக் கொண்டு அந்தக் கழுதையை அடிக்க, அது வலியில் துடிக்கிறது. இதனைக் கண்ட  அந்தக் கழுதையின் குட்டி கத்திக் கதறி அழுகிறது. உடனே அந்த வியாபாரி அந்தக் குட்டிக் குழுதையின் முதுகில் அந்த உப்பு மூட்டையை ஏற்றி விடுகிறார். அந்தக் குட்டி சுமக்க முடியாமல் சுமந்து செல்கிறது. அப்போது, வழியில் உள்ள ஓர் அரசு அலுவலகத்தில் நுழைந்து விடுகிறது. அங்கிருந்த அதிகாரி, ‘வயதான கழுதை, குட்டிக் கழுதை ரெண்டையும் கொடுமைப்படுத்தியதற்காக உன்னைக் கைது செய்து தண்டிப்பேன். ஒழுங்கா கழுதைகளை விட்டுட்டுப் போய் சைக்கிள் மாதிரி வேறு வாகனத்தில் உன் வியாபாரத்தை நடத்தும் வழியைப் பார்…’ என்று விரட்டுகிறார். பிறகுதான் அது விலங்குகள் பாதுகாப்பு அலுவலகம் என்பது தாய்க்கழுதைக்குப் புரிகிறது. நம்மை விட இன்றைய தலைமுறைக் குழந்தைகள் புத்திசாலிகள் என்று மனதுக்குள் வியக்கிறது தாய்க்கழுதை.

இதுபோன்ற 37 சுவாரஸ்யமான குட்டிக் கதைகளை இன்றைய கால ஓட்டத்துக்கும் பகுத்தறிவுக்கும் ஏற்ப புதிய முறையில், எளிய நடையில் எழுதியுள்ளார் ஆசிரியர்.

தாய்நாட்டைப் போற்றுவோம், உழைப்பு உயர்வு மட்டுமல்ல, உடம்புக்கும் நல்லது. கடமையைச் செய்ய கர்வப்படக் கூடாது, பிராணிகளிடம் பரிவு, நீர்வளம் காப்போம் போன்ற இன்றைக்குத் தேவையான பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தும் கதைகள், குழந்தைகளின் மனதை எளிதாகக் கவ்விப் பிடிக்கும் வகையில் எளிமையான நடையில் எழுதப்பட்டுள்ளன. குழந்தைகளின் பிறந்தநாள் பரிசாக அளிக்க ஏற்ற நூல்.