மங்கையர்க்கரசி எங்கள் தெய்வம் – இராமநாதன் பழனியப்பன்; பக்.496; ரூ.270; வானதி பதிப்பகம், சென்னை-17; )044-2434 2810.

பாண்டியன் நின்றசீர் நெடுமாறனின் (கூன்பாண்டியன்) மனைவிதான் மங்கையர்க்கரசியார். அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒன்பது பேர் தொகையடியார்கள். அவர்களுள் மூவர் பெண்கள். அவர்களுள் ஒருவர் மங்கையர்க்கரசியார். பெண்ணாகப் பிறந்து, சேக்கிழாரால் தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்ட தெய்வப் பெண்மணி இவர்.

ஓர் அரசிக்கு இருக்க வேண்டிய அத்தனைத் தகுதிகளையும் பெற்றவர். அதுமட்டுமல்ல, ஓர் அரசியினுடைய பொறுப்புகள் எவையெவை என்பதையும் முற்றிலும் உணர்ந்தவர். ஒரு பெண்ணால் எதையும் சாதித்துக்காட்ட முடியும் என்பதையும் நிரூபித்துக் காட்டியவர். சைவ நெறியில் சிறந்திருந்த மங்கையர்க்கரசியார், சமயத்தாலும் ஏனைய குணநலன்களாலும் மாறுபட்டவரான, சமணம் சார்ந்திருந்த நின்றசீர் நெடுமாறனை மணந்து, நடத்திய இல்லற வாழ்க்கை தியாகம் நிறைந்தது. அவ்வரசியின் அளப்பரிய தியாகமே நூல் முழுவதிலும் பதிவாகியுள்ளது.

பெரியபுராணம் (ஞானசம்பந்தர் புராணம்), திருஞானசம்பந்தர்-திருநாவுக்கரசர் தேவாரத்தில் அரசியாருக்குத் தொடர்புடைய தேவாரப் பதிகங்கள், குலச்சிறை நாயனார் புராணம் ஆகியவற்றிலிருந்து மங்கையர்க்கரசியாரின் மாண்புகள் அனைத்தும் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எல்லா நற்குணங்களும் அமையப் பெற்றிருந்த மங்கையர்க்கரசியார் பற்றிய இந்நூலை, “இல்லறத்தை நல்லறமாக்க நினைக்கும்’ பெண்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டும்.

   Send article as PDF