வரலாற்றில் ஆர்வமூட்டும் ஆவணங்கள் – தொகுப்பு மற்றும் தமிழாக்கம்: டி.ஞானையா, வெ.ஜீவானந்தம்; பக்.192; ரூ.150; அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம், 96, பெரியார் சாலை, பாலவாக்கம், சென்னை-41.

வரலாற்றில் அனைவரது ஆர்வத்தையும் ஈர்க்கும் எல்லா நிகழ்வுகளின் ஆவணங்களைச் சேகரித்து தொகுப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல என்றாலும், அனைவரும் படித்தறிந்து கொள்ளக் கூடிய முக்கிய நிகழ்வுகள் இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

குறிப்பாக, இரண்டாவது உலகப் போரின்போது ஹிட்லரின் படைகளைத் தோற்கடித்த ரஷ்யாவின் ஸ்டாலின் குறித்த பல அரிய தகவல்கள், சோகங்கள் நிறைந்த ஜின்னாவின் வாழ்க்கை, இந்தியப் பிரிவினையில் அவர் காட்டிய அவசரம், மகாத்மாகாந்திக்கும் ஜின்னாவுக்கும் பின்னாளில் ஏற்பட்ட பிணக்கு குறித்த தகவல்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன.

உலக வானில் பிரபலமாக அறியப்பட்ட இந்துத் துறவியான சுவாமி விவேகானந்தரின் கடவுள் மறுப்புக் கொள்கை, ஏழைகளுக்கு உதவ, தேவைப்பட்டால் மடங்களைக் கூட விற்றுவிடுங்கள் என்று அவர் உத்தரவிட்டது போன்ற தகவல்கள் வியக்க வைக்கின்றன. மேலும் ம.சிங்காரவேலரின் பொதுவுடமைக் கொள்கைகள் தெளிவாக்கப்பட்டுள்ளன.

இன்றைய அமெரிக்க, இந்திய முதலாளித்துவம் குறித்து 162 ஆண்டுகளுக்கு முன்பே கார்ல் மார்க்ஸ் தெளிவாக வரையறுத்துக் கூறியதும் தரப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களைக் காக்க அப்பாவி மக்கள் மீது அரசுகள் திணிக்கும் அடக்குமுறை உள்ளிட்ட புள்ளிவிவரங்களை புகழ் பெற்ற நாவலாசிரியர் அருந்ததிராய் தந்துள்ளார்.

சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கருத்துகள் இந்நூலில் அருமையாக மொழிபெயர்த்துத் தரப்பட்டுள்ளன.