சாண்டில்யன் எழுதுகிறேன் – தெ.இலக்குவன்; பக்.248; ரூ.100; வானதி பதிப்பகம், சென்னை- 17;   044-2431 0769.

சரித்திர நாவலாசிரியராகப் புகழ் பெற்ற சாண்டில்யனின் படைப்புகளை ஆய்வு செய்து எழுதப்பட்டிருக்கும் நூல் இது.

சாண்டில்யனின் 35 சரித்திர நாவல்களில் முப்பத்து நான்கும், சரித்திர சிறுகதைத் தொகுப்பு இரண்டும், சமூக நாவல்கள் நான்கும் இதில் ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் ஒரு குறை, ஆய்வின் பெரும் பகுதி கதையை விவரிப்பதிலேயே போய்விடுகிறது. குறிப்பாக “பாண்டியன் பவனி’ என்ற நாவலைப் பற்றிய அத்தியாயம் முழுவதும் கதையை விவரித்துவிட்டு கடைசியாக ஒரே ஒரு வரியில் வேறு எழுதுவதற்கு எதுவுமில்லாத நாவல் என்ற குறிப்படுகிறார் நூலாசிரியர்.

சாண்டில்யன் தன்னுடைய நாவல்களின் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தனித்தனியாக பொருத்தமான தலைப்புகளை வைத்திருப்பதைப் பாராட்டும் நூலாசிரியர், நாவலின் நீளத்துக்காகத் தேவையில்லாமல் பல அத்தியாயங்கள் வருவதையும் சுட்டிக் காட்டத் தவறவில்லை. உதாரணமாக “கடல் புறா’ நாவலில் ஓர் இடத்தில் குணவர்மன் தன் கதையைக் கூறுவதாக ஆரம்பிக்கிறான். ஆனால் நான்கு பக்கங்கள் கழித்துதான் கதை ஆரம்பிக்கிறது.

தேவையில்லாமல் பல அத்தியாயங்கள், சலிப்பூட்டக்கூடிய நீண்ட வர்ணனைகள், எழுதியதையே திரும்பத் திரும்ப எழுதுவது போன்றவற்றால் கதை பல இடங்களில் நீர்த்துப் போய்விடுகிறது என்பதையும் தன்னுடைய ஆய்வுகளின் இறுதியில் குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.

சாண்டில்யனின் அத்தனை படைப்புகளையும் ஒரே சமயத்தில் படித்து முடித்த திருப்தியைத் தரும் நூல் இது.

   Send article as PDF