கமலின் கலைப்படங்கள் – பி.ஆர்.மகாதேவன், பக்.160. விலை 120/-. நிழல், சென்னை-78; )044- 4212 4159.

அறிவுஜீவி என்று ஒரு குறுகிய வட்டத்தினரும் விவரமறிந்தவர் என்று பொதுவாக பத்திரிகைகளும் கேள்வி கேட்காமல் ஒப்புக்கொண்டுள்ள கமல்ஹாசனின் முக்கியமான, வித்தியாசமான திரைப்படங்கள் என்று அறியப்படுபவற்றில் தர்க்கரீதியான ஓட்டைகள் மலிந்துள்ளன என்று இப்புத்தகத்தின் ஒரு பகுதி கூறுகிறது.

கதை சொல்லும் சினிமாவை தீவிரமாக நேசிக்கும் நூலாசிரியர், ஹே ராம், விருமாண்டி, தேவர்மகன், அன்பே சிவம், குருதிப்புனல், குணா ஆகிய படங்களை பார்ட் பார்ட்டாக பிரித்து, பிய்த்துப் போட்டிருக்கிறார். உலகநாயகன் என்பதால் எப்படி உலக சினிமாவெல்லாம் தேடி, ஒத்தி எடுத்துள்ளார் என்று விவரிக்கிறார்.

அவர் அலசும் எல்லாப் படங்களுக்கும் கதையை எவ்வாறு மாற்றி அமைத்திருக்கலாம் என்றும் கூறியிருப்பது வித்தியாசமான முயற்சி. என்றாலும் கதையம்சம் மொத்தமாக மாறிவிடுவதால் அது தேவையற்றது. மேலும், வேற்று மொழிப்படங்களை இறுகத் தழுவி எடுக்கப்பட்ட கதைகளை எப்படி மாற்றினால் என்ன? -அது காப்பிதானே?

வெளிநாட்டு சினிமாவின் ஆடம்பரங்களில் மையல் கொண்டு, சுயமான சிந்தை இல்லாதவர்கள் மலிந்துள்ள திரைப்பட உலகத்தில் வித்தியாசமாக எதிர்பார்த்துவிட முடியாது.

இவ்வளவு காரமான விமர்சனத்தை அளித்துள்ள நையாண்டி நடை அபாரம். இவை பத்திரிகைகளில் காண்பதரிது என்பது தமிழின் துரதிருஷ்டம். படித்து, இன்புற்று, சிந்திக்க வேண்டும்.