மாலே மணிவண்ணா – வ.ந.கோபால தேசிகாசாரியா ர்; பக். 276; ரூ.100; வானதி பதிப்பகம், சென்னை-17; )044-2434 2810.

அறம், பொருள், இன்பம், வீடு என நால்வகைப் பேறும் இருந்தால் வாழ்க்கை முழுமை பெறும். இந்த நூலில் அந்த நான்கும் வெளிப்படும் தத்துவங்கள் கட்டுரைகள் வாயிலாக வெளிப்பட்டுள்ளன. நூலாசிரியர் சார்ந்த ஒப்பிலியப்பன் கோவில் புராணத்தில் இருந்து தொடங்கும் கட்டுரைகள், வைணவ வாழ்வியல் தத்துவங்களில் முடிகின்றன. கண்ணன் தலங்கள், அவன் திருவிளையாடல்கள், சூடிக்கொடுத்த ஆண்டாளின் பாவைக் காவியத்தின் இனிமை, அழகு திருவரங்கத்தை முன்னோர் கண்ட வழியிலேயே சென்று தரிசித்து இன்புற உத்திகள் இவை யாவும் நூலின் சிறப்பை உணர்த்தும். வைணவம் தமிழை வளர்த்ததும், வைணவத்தைத் தமிழ் வளர்த்ததுமான எடுத்துக்காட்டுகள் நூலில் ஏராளம். வைணவ ஆசார்யர்களான நாதமுனிகள் குறித்தும் பராசர பட்டர் குறித்தும் தரப்பட்டிருக்கும் தகவல்கள் நல் ஆன்மிக விருந்து.

தமிழின் முதல் பிள்ளைத் தமிழ் இலக்கியமான பெரியாழ்வாரின் பாடல்களும், ஆழ்வார்களின் தமிழை மற்ற மாநில ஆலயங்களிலும் ஆளும்வகை செய்த ஸ்ரீராமனுஜரின் செயல்களும் கட்டுரை வாயிலாக தெளிவான நடையில் தரப்பட்டிருக்கின்றன. பழகு தமிழ் நடையில் அமைந்த 38 கட்டுரைகளின் இந்தத் தொகுப்பு நூல், வைணவத்தையும் தமிழையும் ஒருங்கே வெளிப்படுத்துகிறது.