மருதகாசி திரையிசைப் பாடல்கள் (இரு தொகுதிகள்); தொகுப்பாசிரியர்: பொன். செல்லமுத்து; முதல் தொகுதி பக்.352; ரூ. 150; இரண்டாம் தொகுதி பக்.368; ரூ. 160; மணிவாசகர் பதிப்பகம், 31 சிங்கர் தெரு, பாரிமுனை சென்னை – 108.

1949}இல் வெளிவந்த “மாயாவதி’ படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் மருதகாசி. இவர் அடுத்த 30 ஆண்டுகளுக்குத் தமிழ்ப் படவுலகின் முக்கிய பாடலாசிரியராகத் திகழ்ந்தார். இவர் எழுதிய பாடல்களில் 312 பாடல்கள் முதல் தொகுதியிலும் 360 பாடல்கள் இரண்டாவது தொகுதியிலும் இடம் பெற்றுள்ளன.

இவர் புராணம், இதிகாசம், சமூகம், இலக்கியம் என கதைகளுக்கேற்ப பல்வேறு பிரிவுகளிலும் தனது புலமையாலும் வாழ்க்கை அனுபவத்தாலும் சிறந்த பாடல்களைக் கொடுத்திருக்கிறார்.

“ஆடாத மனமும் உண்டோ’, “முல்லை மலர்மேலே’, “வாராய் நீ வாராய்’, “சமரசம் உலாவும் இடமே’, “அடிக்கிற கைதான் அணைக்கும்’,”தென்றல் உறங்கிய போதும்’ முதலிய பாடல்கள் கருத்தாழம் மிக்கவை.

கதையின் தேவைக்காக பிஸ்தா பருப்பு, மாம்பழம், சாத்துக்குடி போன்றவற்றைப் பற்றியெல்லாம்கூட பாடல் எழுதியிருந்தாலும் எதிலும் விரசம் என்பதே இல்லை.

“சம்பூர்ண ராமாயணம்’, “லவ குசா’,”தசாவதாரம்’ ஆகிய மூன்று படங்களிலும் ராமபிரானின் கதையை பாடல் வடிவில் சொல்லியிருந்தாலும் ஒரு பாடலில் சொல்லப்பட்ட வார்த்தைகள் அடுத்த பாடலில் மீண்டும் வந்துவிடாமல் தவிர்த்திருப்பதில் அவரது மொழி ஆளுமை புலனாகிறது. கவிஞர் விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதால் வேளாண்மை தொடர்புடைய “மணப்பாறை மாடுகட்டி’, “தை பொறந்தா வழி பொறக்கும்’, “ஏர் முனைக்கு நேர் இங்கே’, “கடவுள் என்னும் முதலாளி’ ஆகிய பாடல்கள் அற்புதமாக அமைந்திருக்கின்றன.

ஒவ்வொரு தொகுதியின் இறுதியிலும் படங்களின் பெயர்கள் மற்றும் பாடல்களின் முதலடி ஆகியவை பக்க எண்களுடன் அகர வரிசைப்படி கொடுக்கப்பட்டிருப்பதும் கவிஞரின் பாடல் இடம்பெற்ற படங்கள் ஆண்டு வரிசைப்படி கொடுக்கப்பட்டிருப்பதும் தொகுப்பாசிரியரின் உழைப்பைக் காட்டுகிறது.