புதிய கோட்பாட்டு நோக்கில் பழந்தமிழ் இலக்கியம் – க.பஞ்சாங்கம்; பக்.304; ரூ.200; வெளியீடு: அன்னம், தஞ்சாவூர்-7; )

தமிழகத்தின் பல்வேறு கல்வி நிலையங்களில் நடந்த கருத்தரங்கு மற்றும் பயிலரங்குகளில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. தொல்காப்பியம் – எடுத்துரைப்பியல் நோக்கு என்பதில் தொடங்கி, மொத்தம் 24 தலைப்புகளில் தொல்காப்பியம், கல்லாடம், குறிஞ்சி, புறநானூறு, நெடுநல்வாடை, சிலப்பதிகாரம், திருக்குறள், நாலடியார், தமிழ்ச் செவ்வியல் இலக்கியம் என சங்க இலக்கியங்கள் தொடர்பாக வெவ்வேறு கோணங்களில் ஆராய்ந்து அமைத்திருக்கும் இலக்கியப் பதிவுகள்.

“வெறியாடல்’ தொடர்பான அரிய தகவல்களை 40 பாடல்கள் வழி தந்திருக்கிறார். தொல்காப்பிய மெய்ப்பாட்டியலில் வரும் மெய்ப்பாடுகளை கவிஞர் பழமலையின் “சனங்களின் கதை’ என்ற கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதைகளோடு ஒப்புநோக்கியிருப்பது நவீன இலக்கியத்திலும் ஆசிரியர் ஆழங்காற்பட்டிருப்பதைப் புலப்படுத்துகிறது. இதிலுள்ள கட்டுரைகள் பழைமைக்கும் புதுமைக்கும் பாலமாக அமைந்துள்ளன.

“நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’.

கட்டுரைகளுக்கு நடுநடுவே 25-க்கும் மேற்பட்ட பக்கங்களைக் காணவில்லை. நூல் விமர்சனத்துக்கு இப்படிப்பட்ட நூல்களையா அனுப்புவது? படிக்கும் சுவாரஸ்யத்தையே கெடுத்துவிடுகிறது. பதிப்பகத்தார் இனியாவது கவனம் வைத்தால் சரி.