வீணையின் குரல்: எஸ்.பாலசந்தர் – ஒரு வாழ்க்கை சரிதம் – விக்ரம் சம்பத்; தமிழில் : வீயெஸ்வி; பக்.440, விலை ரூ. 350, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், )

கடந்த நூற்றாண்டில் தென்னிந்தியாவில் தோன்றிய ஒரு கலை மேதை என்றே எஸ்.பாலசந்தரைக் கூற வேண்டும். நடிப்பு, எழுத்து, சங்கீதம், பின்னணிப் பாட்டு, திரைப்பட இயக்கம் என்று வலம் வந்தவர் எஸ்.பாலசந்தர்.

சினிமாவில் தான் நினைத்ததை சாதித்த அவர், அதன் பிறகு மிகத் தீவிரமாக கர்நாடக இசைக்குத் திரும்பிவிட்டார். அவருடைய வார்த்தைகளில் கூற வேண்டுமானால், “”வீணை என்றால் பாலசந்தர், பாலசந்தர் என்றால் வீணை” என்று அறியப்பட அவர் பெரும் உழைப்பு உழைத்தார்.

அவருடைய இசை ஞானம் லேசுப்பட்டதல்ல; பல வாத்தியங்களைச் சிறு வயதில் தானாகவே வாசிக்கப் பழகியிருந்தார். வீணையையும் அவராகவே வாசிக்கப் பழகிக் கொண்டார். பின்னர் அதில்தான் எத்தனை புதுமைகள், சோதனை முயற்சிகள்! ஆனால் எதிலும் மரபு தவறியது கிடையாது. வீணை அமைப்பிலும் அதனை உருவாக்குவதிலும் தொழில்நுட்பத்திலும் கூட அவர் கவனம் செலுத்தினார்.

எந்த ஒரு மேதையும் வைரம்தான். சீராக பட்டை தீட்டப்படாத கரடு முரடான சில பக்கங்கள் இவருக்கும் உண்டு. சக கலைஞர்களுடன் அவருடைய மோதல், அவருடைய குறைகள், மேன்மை எல்லாவற்றையும் சமமான தட்டுகளில் வைத்து அளிக்கிறார் நூலாசிரியர் விக்ரம் சம்பத்.

பாலசந்தரின் வருகையின் முக்கியத்துவத்தைத் தெரிவிக்க விரும்பிய ஆசிரியர், கர்நாடக இசை சரித்திரம், மியூசிக் அகாதமி-தமிழிசை சர்ச்சை என்று சற்று அகலக் கால் வைத்திருப்பதாகத் தோன்றுகிறது.

விமர்சனபூர்வமான வாழ்க்கைச் சரிதங்கள் தமிழில் வந்தது கிடையாது என்றே சொல்லிவிடலாம். அந்தக் குறையைப் போக்கும் முக்கியமான புத்தகம் இது.