சிலம்பில் பாத்திரங்களின் பங்கும் பண்பும், முனைவர் கா. மீனாட்சி சுந்தரம். ருக்மணி இராமநாதன் அறக்கட்டளை 2/14, 9ஆம் தெரு வடக்கு, சுப்பிரமணியபுரம், காரைக்குடி-630 003. பக். 275. விலை ரூ. 150/-

“வயது முதிர்ச்சியும் தளர்ச்சியும் இருந்தாலும்’ சிலம்பில் பாத்திரங்களின் பங்கும் பண்பும் எனும் நூலை எழுதித்தந்துள்ளேன். என் பட்டறிவும் புலமையும் நிறைந்தவை எனக்கூறேன். என் பாத்திரப் பகுப்பும் கருத்தும் பேரறிஞர்களிடமிருந்து மாறுபடலாம். இலக்கிய ஆராய்ச்சி என்பதே புதுமை தேடல். பழமையை புதுப்பித்தல், படைப்பாசிரியரின் உளங்காணல் என்பவைதாம் என்பதில் ஐயமில்லை” என நூலாசிரியர் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலம் கவனிக்க வேண்டிய செய்தி. இலக்கியங்களை சுவைத்து கற்பது ஒருவகை. ஆய்ந்து கற்பது ஒருவகை. இதில் எது சரியானது என்கிற பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கிறது. கவிஞரின் காலச் சமூகச் சூழலோடு பொருத்திப் பார்ப்பதும், கற்பதும் உயரிய வகை எனினும் ரசனை வழி கற்பதில் சில நன்மைகள் உண்டு. பாத்திரப் படைப்புகளை உய்த்து உணரவும், உள்வாங்கவும் அது நம் முள் படைப்பாற்றலை கிளர்த்திவிட ஏது வாகும். நிற்க. இந்நூல் சிலம்பின் பாத்திரப்படைப்புகளை அதன் நிறைகுறைகளோடு அதற்குரிய இடத்தில் நிறுத்தி அறிமுகம் செய்விக்கிற ஒரு முயற்சி… “மாதவி மீதோ, தென்னவன் மீதோ, கோவலன் மீதோ, கண்ணகி மீதோ குற்றம் சாட்ட இளங்கோ எங்கும் விரும்ப வில்லை. குற்றம்சாட்டினாலும் தீதிலன் என்பதையே காட்டுகிறார் என்பதையும் கூர்ந்து நுணுகி ஆராய வேண்டும்” என்கிறார் நூலாசிரியர்.

   Send article as PDF