தடம் பதித்த மாமனிதன் – ரசிகமணி டி.கே.சி. – தி.சுபாஷிணி; பக்.400; ரூ.250; மித்ரஸ் பதிப்பகம், ஸ்ரீனிவாசா என்க்ளேவ், புதிய எண்.10, பழைய எண்.18, வாசன் தெரு, தியாகராய நகர், சென்னை-17.

ரசிகமணி என்றும் டி.கே.சி. என்றும் அழைக்கப்பட்ட டி.கே.சிதம்பரநாத முதலியார் தென்காசி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்ததில் தொடங்கி, அவருடைய கல்லூரிப் படிப்பு, வழக்குரைஞர் பணி, இந்து அறநிலையத்துறை பணி, திருமண வாழ்க்கை, கம்பராமாயண ஈடுபாடு, கல்கி, ராஜாஜி, கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை முதலிய அறிஞர்களின் தொடர்பு, வட்டத்தொட்டி அமைப்பின் இலக்கியப் பணி போன்ற பல்வேறு விஷயங்களைச் சுவைபட இந்நூலில் பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.

சென்னை கிறிஸ்தவ கல்லூரியின் இலக்கிய நிகழ்ச்சியில் பங்கு கொள்ள மதுரை பாண்டித்துரை தேவர் வந்தபோது (உடன் வந்தவர்கள் “தமிழ்த்தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயரும் வெள்ளக்கால் வி.பி.சுப்பிரமணிய முதலியாரும்) அக்கல்லூரி மாணவராயிருந்த டி.கே.சி. வரவேற்புரை வாசித்ததைக் கேட்டு பாண்டித்துரை தேவர் பாராட்டியதும், 1948 இல் வினோபா பாவே சென்னை வந்தபோது அவரைச் சந்தித்த டி.கே.சி. கம்பராமாயணத்தின் இரணியன் வதை படலத்திலுள்ள “கடவுள் தூணிலும் உளன், நீ சொன்ன சொல்லிலும் உளன்’ என்ற வரிகளைச் சொன்னதைக் கேட்டு வியந்த வினோபா பாவே, “நான் வால்மீகி, துளசிதாசர் போன்ற பலருடைய ராமாயணங்களைப் படித்திருக்கிறேன். ஆனால் தமிழ்ப் பாடலில் உள்ள மந்திரசக்தி தனி. கடவுள் இல்லை என்று சொல்லுகிற சொல்லிலும் கடவுள் இருக்கிறார் என்று சொல்ல முடிகிறதே. இப்படி தமிழ் ஒன்றில்தான் சொல்ல முடியும். கம்பர் ஒருவர்தான் இவ்வாறு உண்மைக்கு தெளிவு கொடுக்க முடியும்’ என்று பாராட்டியதும் டி.கே.சி.யின் ஆளுமையை நன்கு வெளிப்படுத்தும் நிகழ்வுகள்.

இந்நூலில் பிறரது கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்கள் சற்று அதிகம்தான்.

பின்னிணைப்பாக டி.கே.சி. எழுதிய நூல்கள், கடிதங்கள், வாழ்க்கைக் குறிப்பு, சில அரிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

டி.கே.சி.யின் பன்முகத் திறமைகளைச் சுவையாகப் பதிவு செய்திருக்கிறது இந்நூல்.