‘பாளையக்காரப் புரட்சியின் தலைவர்கள்’ என்று, இந்திய வரலாற்று ஆசிரியர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டவர்கள் மருது சகோதரர்கள். இந்த இருவர்தான் வெள்ளையருக்கு எதிரான போரை ஒருங்கிணைத்து ஓர் இயக்கமாக்கி, வெள்ளையனை வெளியேறச் சொல்லி முறைப்படிப் பிரகடனம் செய்தவர்கள். ‘வளரி’ என்ற ஆயுதத்தை வைத்துக்கொண்டு வெள்ளையரை அச்சுறுத்தியவர்கள். இலக்கைத் தாக்கிவிட்டு, எய்தவன் கைக்கே வந்துசேரும் வளரி இருக்கும் வரை மருது பாண்டியர்களை யாரும் வெல்ல முடியாது என்பார்கள். அதனால்தான் மருது பாண்டியரின் ஆயுதக் கிடங்கைக் கைப்பற்றியதும் வளரியைத் தேடித்தேடி அழித்தனர். அத்தகைய மாவீரர்களின் முழுமையான வரலாறு இது. 

ஒரு வரலாற்றுப் புத்தகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்​காட்டாகச் சொல்ல வேண்டிய ஆவணம் இது. ஆவணக் காப்பக ஆதாரங்கள், தனியார் ஆவணங்கள், தீர்ப்புத் திரட்டுகள், ராணுவ நாட்குறிப்புகள், இலக்கியப் பதிவுகள், வாய்மொழி வரலாறு, தொல்லியல் ஆதாரங்கள், நூல்கள், இதழ்கள், அறிக்கைகள் என சுமார் 1,800 ஆவணங்களை அடிப்படையாக வைத்து இந்த வரலாற்று நூல் தொகுக்கப்பட்டுள்ளது. யாராலும் வீழ்த்த முடியாத மன்னர்கள் என்று மகுடம் சூட்டிவிடாமல், எந்தவித கற்பனா சக்தியும் கலக்காமல் எழுதப்பட்டது. அதனால்தான் இந்தப் புத்தகத்தை 17-18-ம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாறு என்றும் சொல்லலாம்.

சிவகங்கைச் சீமை கிழக்கே கடற்கரையில் தொடங்கி, மேற்கே மேலூர்- மதுரை மாவட்ட எல்லை வரையிலும், வடக்கே தொண்டைமான் புதுக்கோட்டை – நத்தம் எல்லையாகவும் தெற்கே ராமநாதபுரம் சீமை எல்லையாகவும்கொண்டு 50 மைல்கள் நீளமும், 40 மைல்கள் அகலமும்கொண்டதாக விளங்கியது. இந்தச் சிறு எல்லையை வைத்துக்கொண்டு சிம்ம சொப்பனமாக இருந்ததால்தான் பெரிய மருது 63 வயதிலும் சின்ன மருது 58 வயதிலும் தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டனர். ஆனாலும் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகளால் இவர்களது வீரத்தை மதிக்காமல் இருக்க முடியவில்லை. ‘வெள்ளை மருது நிதானத்துக்கு மிஞ்சிய உடல்வாகும் பலமும்கொண்ட அசாதாரணமான தோற்றமுடையவர். சின்ன மருது கருப்பு நிறத்தவர். எனினும் கம்பீரமான, வசீகரமான, தோற்றமுடையவர்’ என்று வெல்ஷ் எழுதி இருக்கிறார்.

விதவை மறுமணமும், மணவிலக்கும் அனுமதிக்கப்படாத அன்றைய சமூக அமைப்பில் அவற்றை அனுமதித்தவர்கள். ஏராளமான கோயில்களைக் கட்டிய இவர்கள்தான்  தர்காக்களையும் அமைத்தனர். கிறிஸ்தவ மதத்துக்கு பலரும் மாறியதை தடுக்கவில்லை. தீண்டாமை தடுக்கப்பட்டது சம்பந்தமாகவும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மனிதாபிமானிகளாகவும் இருந்துள்ளனர். மெய்க்காப்பாளராக வந்து, மன்னர் அந்தஸ்துக்கு வளர்ந்தனர் மருது சகோதரர்கள். இவர்களது போர்ப் பயிற்சியும் போர்த் திறனும் படிக்கப்படிக்க ரத்தம் உறையவைக்கிறது. இவர்கள் ராக்கெட் தயாரித்ததாக பிரிட்டிஷ் ஆவணங்கள் சொல்கின்றன. எழுத்துச் சிலையாக எழுப்பப்பட்டு நிற்கிறது இந்தப் புத்தகம்.                             

    – புத்தகன்

 அன்னம், மனை எண்1, நிர்மலா நகர், தஞ்சாவூர்-7. விலை 780/-

   Send article as PDF