இருளும் கூட அழகுதான், கே. சண்முகம், அருண் பதிப்பகம், 8/644 மீனாட்சி பவன், நேருஜி நகர், ரிசர்வ்லைன், சிவகாசி, பக். 72, விலை ரூ. 40/

“வெடியின்/ வீரியத்தை/ நாங் களே சோதிக்கிறோம்/ எங்கள்/ உடல்களைச் சிதறவைத்து” என்று நம்மைத் திடுக்கிட வைக்கும் போதும்; “வெந்து/ கருகிக்/ கிடக்கும் போதும்/ மனசின் தவிப்பு/ நாளைய/ வட்டிக் காரனுக்கு” என்கிறபோதும் வார்த்தைத் தெளிப்புகளில் இவர் சிவகாசிக்காரர் என்பது புரிகிறது.

அச்சுத் தொழிலாளியான இவரின் கவிதைகள் காரமானவை. “வெடி வெடித்தால் வேடிக்கை பார்க்கும் மக்கள்/ வெடிப்பதற்காகவே வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்/ கந்தக பூமியில் கருகிக் கிடக்கும்/ கண்ணீ ரைக் கண்டு கண்ணீரே உறைந்து போனது” சவுக்கடி கவிதை இது.

“தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும் முதலில் காவல் நிலையங்களில்” அடடா… எவ்வளவு நிஜம். “வீட்டுக் குப்பைகளை/ வீதியில் கொட்டினார்கள்/ அண்ணாந்து பார்த்தேன்/ அவரவர் வீடுகளில்/ டிஷ் ஆண் டெனாக்களும்/ கேபிள் இணைப் புகளும்/ கலாச்சாரக் குப்பைகளை/ வீட்டினுள் கொட்ட” நல்லகுட்டு. “கண்ணைக் கூசச் செய்து பார்வையைக் குருடாக்கும்/ ஒளியைவிட/ மவுனமான இருள் அழகுதான்”