அசோகமித்திரன் அன்றாட வாழ்வின் சரித்திரம்

– எஸ்.ராமகிருஷ்ணன்

அசோகமித்திரனை நீண்ட நாட்களுக்குப் பிறகு திண்ணை இணைய இதழை நடத்திவரும் கோ.ராஜாராம் மகளின் திருமண வரவேற்பில் சந்தித்தேன். வீட்டிற்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். சம்பிரதாயமான நல விசாரிப்புகளுக்குப் பிறகு ஆட்டோவில் போக வேண்டியதுதானே என்று சொல்லி வழியில் சென்ற ஒரு ஆட்டோவை நிறுத்தினேன். அவரோ இல்லை நான் பேருந்தில் போவதற்குத்தான் விரும்புகிறேன். பேருந்து நிலையம் வரை துணைக்கு வாருங்கள் என்றார்.

இருவரும் சாலையைக் கடந்து செல்வதற்காக நின்று கொண்டேயிருந்தோம். அவர் செல்ல வேண்டிய பேருந்து எங்கே நிற்கும் என்று விசாரிப்பதற்காக விடுவிடுவென அருகில் இருந்த பெட்டிக்கடைக்குச் சென்று அங்கிருந்த விற்பனையாளனைக் கேட்டார். அவரது கேள்வியை அவன் கண்டுகொள்ளவேயில்லை. ஆனால் அருகில் சைக்கிளில் சாய்ந்து கொண்டிருந்த இன்னொரு ஆள் தூரத்தில் தெரியும் பேருந்து நிறுத்தத்தைக் காட்டினார்.

இரவு எட்டரை மணியைத் தாண்டியிருந்தது என்பதால் பேருந்து எளிதில் வரவில்லை. அவர் பிடிவாதமாக பேருந்தில்தான் போவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார். மழைநாளின் இருள் அடைந்து போயிருந்த புரசைவாக்கம் சாலையில் எங்களைத் தவிர ஒரு பெண்மணியும் இரண்டு நடுத்தரவயது ஆண்களும் நின்றிருந்தார்கள்.

பேருந்து வரும்வரை அவர் பேசிக் கொண்டிருந்தார். பேருந்தில் அதிகமான கூட்டமிருந்தது. அதைப் பற்றிய எந்தச் சலிப்புமின்றி பேருந்தில் ஏறி நின்று கொண்டார். பேருந்து கிளம்பியதும் உள்ளேயிருந்து குனிந்து எனக்கு கையசைத்து விடை தந்தார். நான் சாலையில் நின்றபடியே அவரைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.

அசோகமித்திரனை முதன்முதலாகப் பார்த்தபோது ஒரு பழைய சைக்கிளை உருட்டிக் கொண்டு சாலையைக் கடப்பதற்காக தி.நகர் பேருந்து நிலையத்தின் எதிரில் நின்று கொண்டிருந்தார். இவ்வளவுக்கும் இப்போது இருப்பதுபோல அதிக வாகன நெருக்கடி இல்லாத நாட்களது. இந்தியா காபி ஹவுஸ் முன்பாக நான் நின்றிருந்தேன் .

அவர்தான் அசோகமித்திரனா என்று சந்தேகமாக இருந்தது. அவரது புகைப்படம் ஒன்றை புத்தகத்தின் பின்அட்டையில் பார்த்திருக்கிறேன். அதில் இருந்ததை விடவும் மிகவும் மெலிந்து போனவராக நேரில் காணப்பட்டார்.

அந்த மாத கணையாழியில் எனது குறுநாவல் ஒன்று ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் தேர்வு செய்யப்பட்டு வெளியாகி இருந்தது. அசோகமித்திரன்தான் தேர்வு செய்திருந்தார். முன்னதாக நான் கணையாழியில் இரண்டு மூன்று கதைகள் எழுதியிருக்கிறேன். அத்தோடு அசோகமித்திரன் கணையாழியின் கௌரவ ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவ்வளவு தொடர்பிருக்கிறது போதாதா என்று அவர் அருகில் போய் வணக்கம் என்று சொன்னேன்.

அவர் சற்றே பதட்டத்துடன் உங்களுக்கு என்ன வேணும் என்று கேட்டார். நீங்க அசோகமித்திரன் தானே என்று கேட்டேன். ஆமா நீங்க யாரு என்றார். உங்க வாசகன், கணையாழியில் கதை எழுதியிருக்கிறேன் என்று என் தோள் பையிலிருந்த கணையாழியை எடுத்து நீட்டினேன். அவர் அதைக் கண்டு கொள்ளவில்லை.

‘பாருங்க சார். வாசகனா இருக்கிறது நல்லதுதான். ஆனா இப்படி வழியில் சந்தித்துப்பேசினா எப்படி? இங்கே ரோட்டை கிராஸ் பண்றதே பெரிய பிராப்ளம். இதுல நேத்து மழை பெஞ்சு வழியெல்லாம் தண்ணி கட்டியிருக்கு.. நிறைய கொசுவேற. நீங்க எந்த ஊருன்னு சொன்னீங்க’ என்று கேட்டார்.

பெயரையும் ஊரையும் சொன்னதும் ‘படிச்சிருக்கேன்’ என்றபடியே அவரசமாக அங்குமிங்கும் பார்த்த படியே சைக்கிளை சாலையைக் கடந்து உருட்டிச் சென்றார். நானும் பின்தொடர்ந்தேன். பீரங்கி ஒன்றை யுத்தமுனைக்கு பாதுகாப்பாகக் கொண்டு சென்று சேர்த்துவிட்ட ராணுவ வீரனைப் போல சைக் கிளை பாதுகாப்பாகக் கொண்டு விட்ட சந்தோஷம் அவரது முகத்தில் தெரிந்தது.

வாழைப்பழம் விற்கும் தள்ளு வண்டிக்காரன் அருகில் தன்னுடைய சைக்கிளை நிறுத்திவிட்டு ஏதாவது ‘வேலை பாக்குறீங்களா’ என்று கேட்டார். ‘இல்லை சார். கதை எழுதுறேன். காலேஜ் படிச்சி முடிச்சிட்டேன்’ என்று சொன்னேன். வாழைப் பழ வண்டி அருகில் யானைக்கால் வந்து வீங்கியிருந்த ஒரு பிச்சைகாரன் அலுமினியத் தட்டில் ஊற்றி டீ குடித்துக் கொண்டிருந்தான். அவனைச் சுட்டிக்காட்டி ‘இவன் வீடு கண்ணமாப் பேட்டை சுடு காடுகிட்டே இருக்கு. ஒருநாள் இவன் ரிக்ஷாவில் வீட்டுக்குப் போறதை பாத்திருக்கேன்’ என்றார்.

அந்த ஆள் டீயை தன் நாவால் நக்கிக்கொண்டிருந்தான். அது அசோகமித்திரனுக்குப் பிடிக்கவில்லை என்பது அவரது முகச் சுழிப்பிலே தெரிந்தது. ‘மாம்பலத்தில் நிறைய யானைக்கால் வியாதி உள்ள வங்க இருக்காங்க. அதுக்கு காரணம் கொசுதான்’ என்றார். எனக்கு அவரது பேச்சும் அவதானிப்பும் உள்ளூர சிரிப்பை வரவழைத்தபடி இருந்தது.

பிறகு ஏதோ யோசனைக்குப் பிறகு, ‘கதை கட்டுரை எழுதுறது எல்லாம் நல்ல விஷயம் தான். ஆனா அதை நம்பி மட்டும் இருக்காதீங்க. ஏதாவது வேலை பாருங்க. இங்கே அறை கிடைக்கிறது கஷ்டம். நல்ல தண்ணீர் கிடைக்காது. நீங்க கிராமம்னு வேற சொல்றீங்க. கதை எழுதுறது எல்லாம் ஒண்ணும் பெரிய விஷயமில்லை. பழக்கம்தான். காரணமே இல்லாம இங்கே வந்து நிறைய பேர் சிரமப்பட்டு இருக்கிறாங்க’ என்றார்.

அந்த நாட்களில் என் மீது உண்மையான அக்கறை கொண்டு எவராவது வேலைக்குப் போகும் படியாகச் சொன்னால்கூட நான் ஆத்திரப்படக்கூடியவனாக இருந்தேன். வேறு யாராவது பேசி இருந்தால் நான் கத்தியிருப்பேன். ஆனால் அவர் எனக்கு விருப்பமான எழுத்தாளர் அசோகமித்திரன் என்பதால் மௌனமாக நின்று கொண்டிருந்தேன். சில நிமிஷங்கள் இவரும் பேசிக் கொள்ளவேயில்லை. பிறகு அவர் சைக்கிளை உருட்டிக் கொண்டு நடந்துபோகத் துவங்கினார்.

எதற்காக இவருக்கு சைக்கிள். ஒருவேளை துணைக்கு ஒரு ஆள் வருவது போல கூட வைத்திருக்கிறாரோ என்று பார்த்தபடியே இருந்தேன்.
அருகில் தாமோதரரெட்டி தெருவில்தான் அவர் வீடு இருக்கிறது என்று அப்போது தெரியாது. அதன் சில வாரங்களுக்குப் பிறகு அவரை அமெரிக்கன் சென்டர் நூலகத்தில் மறுமுறை சந்தித்தபோது முந்தைய சந்திப்பின் சுவடு ஏதும் இன்றி மிக நெருக்கமாக அருகில் அமர்ந்து ஒன்றாக காபியைப் பகிர்ந்து கொண்டு என்ன புத்தகங்கள் படித்துக் கொண்டிருக்கிறேன், அமெரிக்கன் சென்டர் நூலகத்திற்கு அடிக்கடி வருவேனா என்று விசாரிக்கத் துவங்கினார். அதன் பிறகு ஒருமுறைகூட வேலை பற்றி எதையும் கேட்கவோ சொல்லவோயில்லை.

அன்றிலிருந்து இந்தப் பதினெட்டு ஆண்டுகளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரது வீடு தேடிச் சென்றிருக்கிறேன். இலக்கிய விவாதம் செய்திருக்கிறேன். மிகச் சிறிய வீடு. முன்அறையில் நாற்காலி ஒன்றிற்குள் ஒடுங்கியபடியே மிக மெதுவான குரலில் தீர்க்கமாக தன் அபிப்ராயங்களைச் சொல்வார். அவர் கலந்து கொள்ளும் இலக்கிய நிகழ்வுகளில் அவரைப் பார்த்திருக்கிறேன். இணக்கமான சிரிப்பும் பழகுவதற்கு எளிமையும், கைகளைப் பற்றிக் கொண்டு உரிமையோடு பேசும் நெருக்கமும் தனிக்குணமாக இருந்தன.

குங்குமம் இதழில் உதவி ஆசிரியராக சில மாதங்கள் வேலை பார்த்தபோது எந்த சிறப்பிதழ் என்றாலும் உடனடியாக சிறு கட்டுரை ஒன்றை எழுதித் தரும்படியாக அசோகமித்திரனைத் தான் தொடர்பு கொள்வேன். ஒருமுறை கூட அதை அவர் தொல்லையாகக் கருதியதில்லை. மாறாக ஒரு நாள் அல்லது இரண்டுநாள் இடை வெளியில் கட்டுரையை முடித்து விட்டு கொடுத்து அனுப்பி வைப்பார். இதழின் பக்கங்களுக்கு மிகக் கச்சிதமான அளவில் அது பொருந்தியிருக்கும். ஒரு முறைகூட அவரது எழுத்தை எடிட் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது. மற்றக் கட்டுரைகளில் இருந்து தனித்துத் தெரியும்படியாக அவரது பார்வைகளும் அமைந்திருக்கும்.

ஒருமுறை அமெரிக்கன் சென்டர் நூலகத்தில் பிளேடு ரன்னர் என்ற ரிட்லி ஸ்காட்டின் படத்தைக் காண்பதற்காக கவிஞர் பிரமீளுடன் சென்றிருந்தேன். படம் துவங்கிய ஐந்து நிமிஷங்களில் இருளுக்குள் அசோகமித்திரன் நடந்து வருவது தெரிந்தது. நான் அவரை அழைத்து அருகில் உட்காரச் சொன்னேன். அவரும் உட்கார்ந்து கொண்டார். படம் முடிந்து விளக்குகள் ஒளிரத் துவங்கியபோதுதான் அருகில் பிரமீள் உட்கார்ந்திருந்ததை அவர் கவனித்திருக்கக்கூடும்.

அசோகமித்திரனின் முகம் அப்படியே வெளிறிப்போனது. விடுவிடுவென அங்கிருந்து விலகி வெளியே போகத் துவங்கினார். உடனே பிரமீள் என்ன உங்க பிரண்டு என்னைப் பாத்துட்டு பேய் அடிச்ச மாதிரி போறார் என்று கேலி செய்தார். அந்த கேலிக்குள்ளாகவே அவர்களுக்குள் இணக்கமில்லை என்பது தெரியவந்தது. நான் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை.

ஆனால் வெளியே வந்த பிரமீள் எதையோ நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருந்தார். என்ன நடந்தது என்று சொல்லுங்கள் என்றபோதும் அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. பிறகு என்னிடம் ரகசியமான குரலில் தப்பா ஒண்ணும் நடக்கலை. அவர் ஒரு தடவை என்னை வேலைக்குப் போகச் சொல்லி ஆலோசனை சொன்னார். நான் கோபப்பட்டுட்டேன் அவ்வளவுதான் என்றார்.

வாழ்க்கையை மிக வறுமையான சூழலில் எதிர்கொண்டு நெருக்கடிகளுக்குள்ளாகவே குடும்பம் எழுத்து என்று அறிந்திருந்த அசோகமித்திரனுக்கு தன்னைப் போல இன்னொருவர் ஆகிவிடக்கூடாது என்ற அக்கறை இருந்தது நிஜமே. ஆனால் தோற்பதற்காகவே சூதாடலாம் என்று முடிவு செய்து கிளம்பிய எங்களைப் போன்றவர்களை அவரால் திருத்த முடியவில்லை என்பதுதான் நிஜம்.

தமிழின் பெரும்பான்மை எழுத்தாளர்கள் சிறு நகரங்களிலிருந்தும் கிராமங்களில் இருந்தும் எழுதத் துவங்கியவர்கள். அதனால் அவர்கள் படைப்பில் கிராமத்து மனிதர்களும் நிலம் சார்ந்த நினைவுகளும், சிறுநகர வாழ்க்கையும் , குடும்பஉறவு சார்ந்த பிரச்சினைகளும், வீழ்ச்சியடைந்த மனிதர்களின் கதைகளும் திரும்ப திரும்ப எழுதப்பட்டன. நகரம் அவர்களுக்கு தீவினையின் குறியீடு. அல்லது சீரழிவின் அடையாளம். ஆகவே நகரம் சார்ந்த வெறுப்புணர்வு இயல்பாகவே பலருக்குள்ளும் இருந்தது.

தமிழ்க் கதைகளில் மாநகர வாழ்வு சார்ந்த பதிவுகள் அதிகமில்லை. ஜெயகாந்தன் ஒருவகையில் மாநகரின் நடைபாதையோரம் வசிக்கும் மனிதர்களை, சேரி வாழ்க்கையை, அறியப்படாத உதிரிமனிதர்களை , தன் கதைகளை முன்னிலைப் படுத்தினார். ஆனால் மத்திய தர வர்க்கத்து மனிதர்கள் தங்கள் வேலைக்காக, பிழைப்பிற்காக மாநகரத்திற்கு வந்து கிடைத்த இடத்தில் ஒண்டிக் கொண்டு நெருக்கடிகளுக்குள் அன்றாட வாழ்வைக் கொண்டு செல்லும் நிகழ்வுகளை முழுமையாக இலக்கியமாக்கியவர் அசோகமித்திரன். இதே மத்தியதர உலகின் வேறுமுகங்களை கோபி கிருஷ்ணன், விமலாதித்த மாமல்லன், திலீப்குமார் கதைகளில் காணமுடியும்.

சென்னையின் ஐம்பதாண்டுக் கால மாற்றங்களுக்கு உள்ள ஒரே இலக்கிய சாட்சி அசோகமித்ரனின் கதைகளே. சென்னையின் சமூக கலாச்சார நிலவியல் மாறுதல் குறித்து தன் நினைவுகளை அவர் தனிநூலாகப் பதிவு செய்திருக்கிறார். அத்தோடு அவரது பெரும்பான்மைக் கதைகளின் பின்புலமாகச் சென்னையும் அதன் அன்றாட நிகழ்வுகளும் அதை எதிர்கொண்ட மக்களின் எதிர்வினைகளும் பதிவாகி உள்ளன. ஒருவகையில் அவர் ஒருவரே முழுமையான சென்னை எழுத்தாளர். அவரது கதைகளே முழுமையான மாநகரக் கதைகள்.

புதுமைபித்தன் துவங்கி இன்றுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் சென்னைக்கு ஏதோ காரணங்களுக்காக இடம் மாறி வந்திருக்கிறார்கள். வசித்திருக்கிறார்கள். அவர்கள் படைப்புகளில் சென்னை அங்கும் இங்குமாகப் பதிவாகியிருக்கிறது. ஆனால் அராபியக்கதைகளில் வரும் பாக்தாத் நகரம் போல அசோகமித்ரனின் பெரும்பான்மைக் கதைகளில் சென்னை நகரம் முக்கிய பாத்திரமாக இடம் பெறுகிறது.

இன்னொரு பக்கம் பால்ய காலமும் செகந்தராபாத் நகரமும் அவர் மனதின் தாழ்வாரத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. இது பதினெட்டாவது அட்சக்கோடு நாவலில் மிக வலிமையாக வெளிப்பட்டுள்ளது. இந்தியப் பிரிவினை சார்ந்த முக்கிய இலக்கியப் பதிவு அது. ஒரு நகரம் வன்முறையின் கையில் சிக்கி எப்படி வதைபடுகிறது என்பதை அவர் விவரிக்கும் விதம் அற்புதமானது.

அசோகமித்திரன் பன்முகப் பட்ட கலைஞர், தமிழ்சினிமா, இலக்கியப் பத்திரிகை, பத்தி எழுத்து. சிறுகதை, நாவல், நவீன நாடகம், இலக்கியப் பயிலரங்கம் என்று அவர் செயல்பட்ட தளங்கள் விரிவானவை. இந்திய அளவில் தமிழ் எழுத்தாளர்களில் ஒரு சிலர்கூட அறிமுகமாகியிராத சூழலில் இவரது படைப்புகள் ஆங்கிலத்தில் பிரபல பதிப்பகங்களால் வெளியிடப்பட்டு தனித்து அறியப்பட்டார்.

சாகித்ய அகாதமி விருது பெற்றவர். அமெரிக்காவில் உள்ள அயோவா பல்கலைக்கழகத்தில் சென்று உலக எழுத்தாளர்களுக்கான சிறப்பு முகாமில் கலந்து கொண்டவர். ஆங்கிலத்திலும் எழுதும் திறன் கொண்டவர், பிர்லா விருது, டால்மியா விருது அட்சரா விருது உள்ளிட்ட பல முக்கிய இந்திய விருதுகளைப் பெற்றவர். ஜெர்மன், சிங்கப்பூர், பாங்காங் என்று பல்வேறு உலக இலக்கிய நிகழ்வுகளில் பங்கு பெற்றவர். கடந்த நாற்பது ஆண்டுகாலமாக எழுதி வருகின்றவர் என்று எத்தனையோ சிறப்பு கொண்டவர்.

எனக்கு இவரது நாவல்களில் மிகவும் பிடித்தது ஒற்றன். அதை இதுவரை ஐம்பது முறைகளுக்கும் மேலாகப் படித்திருப்பேன். நான் அறிந்தவரை தமிழில் அது போல வேறு நாவல்களே இல்லை. இன்றைய பின்நவீனத்துவ நாவல்கள் பேசுகின்ற ஒன்றுக்கு மேற்பட்ட கதையாடல்கள் அவரிடம் அது பற்றிய எவ்விதமான பிரக்ஞையும் இன்றி படைப்பின் உத்வேகத்தில் இயல்பாக எழுதப்பட்டிருக்கின்றன.

ஒற்றன் நாவல் எதைப் பற்றியது என்று எளிதில் வகைப்படுத்திவிட முடியாது. அது நாவல் எழுதுவதைப் பற்றிய நாவல். அல்லது எழுத்தாளர்களைப் பற்றிய நாவல். அல்லது புனைவு சார்ந்த கனவுகள் ஒன்று சேர்க்கபட்ட நாவல் என்று சொல்லலாம்.

ஒற்றன், அமெரிக்காவின் அயோவா நகரில் ஏழு மாத காலம் உலகம் எங்குமிருந்தும் வந்திருந்த எழுத்தாளர்களுடன் ஒருவராக அசோகமித்திரன் கலந்து கொண்ட எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கு நாட்களைப் பற்றியது. நாவல் என்ற வடிவம் குறித்து எழுத்தாளர்கள் கொண்டிருக்கும் கற்பனையும், ஒரு நாவல் எழுதப் படுவதற்கான சாத்தியங்களும் சாத்தியமின்மையும், கதைகளில் வரும் கதாபாத்திரங்களை விடவும் வியப்பாக அறியப்படும் எழுத்தாளர்களின் ஆளுமையையும் ஒற்றனைக் கொண்டாட வைக்கின்றது.

தமிழ் நாவல் பரப்பில் ஒற்றன் மிக முக்கியமான பங்களிப்பு. அசோகமித்ரனின் கரைந்த நிழல்களோ, தண்ணீரோ வாசகர்களின் முக்கிய கவனம் பெற்ற அளவு இந்த நாவல் முக்கியம் பெறவில்லை. ஆனால் என்வரையில் இது தமிழில் வெளியான உலகின் சிறந்த நாவல் என்றே சொல்வேன்.

அசோகமித்திரனின் எழுத்துலகம் தினசரி வாழ்க்கையின் நிகழ்வுகளால் நிரம்பியது. பேருந்திற்காகக் காத்திருப்பவர்கள், அலுவலகம் செல்கின்றவர்கள், வங்கியில். மருத்துவமனையில் காத்திருப்பவர்கள், கடன் வாங்க அலைபவர்கள், ரிக்ஷாக்காரர்கள், சாலையோர வணிகர்கள், பொருட்காட்சி, கடற்கரை என்று தன்னை ஆறுதல் படுத்திக் கொள்பவர்கள், வீட்டிற்குள் அடைபட்டுக் கிடக்கும் வெவ்வேறு வயதுப் பெண்கள், விளையாட இடமில்லாத சிறுவர்கள். தனித்துவிடப்பட்ட முதியவர்கள் என, சென்னையின் அன்றாட வாழ்வின் சரித்திரமே அவரது கதைகளின் மொத்த உலகம்.

இவர்கள் பெரிதும் அடித்தட்டு, மத்தியதர மனிதர்கள். அவர்களின் உலகில் அசோகமித்திரனும் ஒருவ ராக வாழ்ந்திருக்கிறார். தண்ணீர் பிடிப்பதற்காக அவர் வீட்டு வாசலில் வரிசை காத்திருந்திருப்பதை நானே கண்டிருக்கிறேன், கொசுவும் இடைவிடாத இரைச்சலும், கிருஷ்ணவேணி சினிமா தியேட்டரின் ஆரவாரத்திற்கும் இடையில் தன்னுடைய சிறிய ஓட்டு வீட்டினுள் நாற்காலியில் ஒடுங்கிக் கொண்டு அவர் உலக இலக்கியம் வாசித்துக் கொண்டிருப்பார்.

எழுதுவதற்கான சூழல் வீட்டில் இல்லை என்பதால் அசோகமித்திரன் நடேசன் பூங்காவிற்குச் சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து பல ஆண்டுக் காலம் எழுதி வந்திருக்கிறார். நானே சிலமுறை கண்டிருக்கிறேன். வெயில் அவர் காகிதத்தில் ஊர்வதையோ, கண்களில், தலையில் விரல்களால் துழாவுவதையோ அவர் கண்டுகொள்வதேயில்லை. எழுதும் காகிதம் கூட பாதியாகத் துண்டிக்கப்பட்ட ஒரு பக்க வெள்ளைக் காகிதங்களே.
வாழ்வின் நெருக்கடியிலிருந்தே அவரது எழுத்து பிறந்திருக்கிறது. ஆனால் அந்த நெருக்கடிகள் குறித்த புலம்பல்கள் அவரிடம் ஒரு போதும் கிடையாது. எவ்விதமான சலிப்பும் இல்லை. மாறாக தொடர்ந்த உற் சாகத்துடன் தன் வலியை அவ தானித்துக் கொண்டிருக்கும் ஒரு நோயாளியைப் போல அவர் செயல்பட்டிருக்கும் விதமே அவர் மிகச் சிறந்த எழுத்தாளர் என்பதற்கான சான்று.

அசோகமித்திரனின் எழுத்தின் தனிச்சிறப்பு அவரது நகைச்சுவை உணர்வு. மிகுந்த நெருக்கடியான மனநிலைகளுக்கு ஊடேயும் அவரால் நகைச்சுவையான சில அவதானிப்புகளை எழுத முடிந்திருக்கிறது. அது அபூர்வமானது. வாழ்க்கையின் கசப்பு தன்மீது படிந்து விடுவதை தன் நகைச்சுவை உணர்வின் வழியே கலைஞன் துடைத்தெறியும் செயல்பாடு அது. வைக்கம் முகமது பஷீரிடம் இப்படியொரு தன்மையிருப்பதை வாசிப்பில் காணமுடிந்திருக்கிறது. அதே பரிமாணம் அசோகமித்திரனிடம் இன்னொரு விதத்தில் வெளிப்படுகிறது.

அசோகமித்திரனுக்குள் கடந்த கால அனுபவங்கள் எழுதித் தீராமல் இன்றும் கொந்தளித்தபடியே உள்ளன. உண்மையில் அவர் கண்டடைந்த அனுபவத்திலிருந்து கையளவே நமக்குப் பருகத் தந்திருக்கிறார். இன்னும் கடலளவு அவருக்குள் அலைகள் இல்லாமல் நிரம்பியே இருக்கிறது.

நான் அசோகமித்திரனை, கல்லூரி நாட்களின்போது கணையாழியின் வழியாகவே அறிந்து கொள்ள ஆரம்பித்தேன். கணையாழி படிப்பது என்பது அன்று ஒரு இலக்கிய அடையாளம். ஒரு ஊரில் கணையாழி படிப்பவர்கள் என்று விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே இருந்தார்கள். ஒன்றிரண்டு கடைகளைத் தவிர வேறு எங்கும் கிடைக்காது. இவர் கணையாழி எல்லாம் படிப்பார் என்று ஒரு வரைப் பற்றி அறிமுகம் செய்து வைத்தால் அவர் பெரிய அறிவுஜீவி என்று அர்த்தம். அப்படியான ஒரு அந்தஸ்தில் கணையாழி இதழ் வெளியாகி கவனத்தைப் பெற்றிருந்தது. நான் கணையாழி வாசகனாக மாறிய நாட்களில் அதன் கௌரவ ஆசிரியராக அசோகமித்திரன் இருந்தார்.

முன்னதாக அவரது வாழ்விலே ஒருமுறை என்ற சிறுகதைத் தொகுப்பை மட்டுமே வாசித்திருந்தேன். பெரிய திருப்பங்களோ, அதிர்ச்சிகளோ இல்லாமல் அன்றாட வாழ்வின் நிகழ்வுகளிலிருந்தே அவர் கதைகளை உருவாக்குவது என்னை வசீகரித்திருந்தது. திராவிடத் தமிழின் பாதிப்பு முற்றிலும் இல்லாத எழுத்தாளர் அவர். ஹெமிங்வே போல சின்னச் சின்ன வரிகள். துல்லியமான சித்தரிப்பு என்ற நடை அவருடையது.

தொடர்ச்சியாக ஒரு ஆண்டு கணையாழி வாசித்தபோது அசோகமித்திரன் எழுதிய சிறு கட்டுரைகள், குறிப்புகள் எனக்குப் பிடித்திருந்தன. இலக்கியம், அரசியல், சமூக நிகழ்வு, சினிமா, கலைகள் என்று அவர் வேறுவேறு துறை சார்ந்து தன் மனப்பதிவுகளை எழுதி வந்தார். அந்த எழுத்தின் ஊடாக அபத்தமான சமகாலச் சூழலின் மீது அவருக்குள் புதையுண்டிருந்த கோபமே நகைச்சுவையாக மாறுவதைக் கண்டேன்.

அதன்பிறகு, அசோகமித்திரனைத் தேடிப்படிக்கத் துவங்கினேன். கரைந்த நிழல்கள் வாசிப்பதற்கு முன்வரை சினிமாவைப் பற்றி ஒருவர் நாவல் எழுத முடியும் என்ற எண்ணம்கூட எனக்கிருந்ததில்லை. ஆனால் நாவலை வாசித்து முடிந்தபோது அது வெறுமனாக தமிழ் சினிமாவை மட்டும் பேசும் நாவல் இல்லை மாறாக சினிமா என்ற மாயலோகத்தின் உள்ளே எத்தனை வலிகள், எவ்வளவு கண்ணீர், இழப்புகள், சோகங்கள், மறைந்திருக்கின்றன. முகம் தெரியாத மனிதர்களின் பகலிரவான உழைப்பு அர்த்த மற்று, அடையாளமற்றுப் போய்விடுகின்றது என்பதைப் பற்றியதாக உணரச் செய்தது.

கரைந்த நிழல்களில் எட்டே முக்கிய கதாபாத்திரங்கள். பத்து அத்யாயங்கள் அவ்வளவே. ஆனால் அதற்குள் ஐம்பது ஆண்டுக்கால சினிமா சரித்திரத்தின் இருண்ட உலகம் அடங்கிவிடுகிறது. வீழ்ச்சி ஒருமனிதனை என்ன செய்கிறது. ஊழின் கைகள் எப்படி மனிதர்களைச் சுழற்றியடிக்கிறது என்பதை கரைந்த நிழல்கள் துல்லியமாக விவரிக்கின்றது. நாவலில் கதை வளர்ந்து செல்வதில்லை. மாறாக துண்டிக்கப்பட்ட பல நிகழ்வுகளுக்குள் கதை முன்பின்னாக நகர்கிறது. எந்த முக்கிய நிகழ்வுகளுக்கும் முறையான காரணங்கள் சொல்லப்படுவதில்லை. அது வாசிப்பவனால் உணர்ந்து கொள்ளும்படியாக விடுபடப்படுகிறது.

அது போலவே நாவலில் வரும் நடிகைகள், தயாரிப்பாளர்கள், தயாரிப்பு நிர்வாகிகள், ஊழியர்கள் யாவரும் சினிமா என்ற அடையாளத்தைத் தாண்டிய அகச்சிக்கல் கொண்ட மனிதர்கள். காரணமற்ற ஆசைகளும் நிராகரிப்பும் துவேஷமும் புறக்கணிப்பும் கொண்டவர்கள். ஒவ்வொருவருக்கும் அவரளவில் ஆன ஒரு நியாயமிருக்கிறது. உண்மையில் அப்படித்தானிருக்கிறது வாழ்க்கை.

ஜெமினி ஸ்டுடியோவில் தான் பணியாற்றிய நாட்களின் அனுபவத்திலிருந்து அவர் இந்த நாவலை எழுதியிருக்கிறார். தீபத்தில் இது தொடராக வெளிவந்திருக்கிறது. கச்சிதமான வடிவம் கொண்ட நாவல் என்றே சொல்வேன்.

அசோகமித்திரனின் பங்களிப்பு மூன்று தளங்களில் மிக முக்கியமானது என்று நான் பார்க்கிறேன். 1) சினிமா குறித்த அவரது பார்வைகள் மற்றும் அனுபவங்கள். 2) உலக இலக்கியம், குறிப்பாக அமெரிக்க இலக்கியவாதிகளைப் பற்றிய அவரது அறிமுகமும் வாசிப்பு பகிர்தலும் 3) அவரது இலக்கியப் பங்களிப்புகளான சிறுகதைகள் குறு நாவல்கள், நாவல்கள். கட்டுரைகள். இந்த மூன்றிலும் அவரது பார்வைகளும் பங்களிப்பும் சிறப்பானவை.

அசோகமித்திரனைத் தொடர்ந்து வாசித்தபோது அவரது எழுத்து எதில் மையம் கொண்டிருக்கிறது என்பதை ஓரளவு அறிந்து கொள்ள முடிந்தது. அசோகமித்திரன் படைப்புகளின் அடியோட்டமாக உள்ள இழை வாழ்க்கையின் சந்தோஷங்கள், நெருக்கடிகள் யாவும் தற்காலிகமானவை. மனிதர்களை ஒன்று சேர்க்கவும் பிரிக்கவும், துவேஷம் கொள்ளவும் நிம்மதியற்று அலைக் கழிக்கவும் அவர்களது மனப்போக்குகளே காரணமாக இருக்கின்றன. பொருளாதார காரணங்கள் ஒரு அளவில் மட்டுமே வாழ்க்கையை திடப்படுத்த உதவக்கூடும். ஆனால் மனித மனம் ஓயாமல் ஊசலாடிக் கொண்டேயிருக்கிறது. அதன் இயல்பே அதுதான். அதன் விசித்திரமே வாழ்க்கையை முன்கொண்டு செல்கிறது என்ற எண்ணங்களே அவரது சிறுகதைகள், நாவல், கட்டுரைகள் என யாவிலும் காணமுடிகிறது.

பாவம் டல்பதடோ, மானசரோவர், இன்று, ஆகாயத்தாமரை, விடுதலை, பதினெட்டாவது அட்சக்கோடு, புலிக்கலைஞன், மணல், காலமும் ஐந்து குழந்தைகளும், ஒரு பார்வையில் சென்னை நகரம் என்று எனக்குப் பிடித்தமான அவரது படைப்புகளின் பட்டியல் மிக நீண்டது.

கடந்து செல்லும் காலம் தன் நினைவுகளைப் பதிவு செய்யும் பொறுப்பை எப்போதும் எழுத்தாளர்கள் கலைஞர்களிடமே ஒப்படைக்கிறது. அந்த வகையில் அசோகமித்திரனின் செயல்பாடுகள் யாவும் சமகாலத்தின் சாட்சியாக இருப்பது தானில்லையா?

நன்றி – உயிரோசை