சுப.வீரபாண்டியன், வானவில் புத்தகாலயம், 10/2 (8/2) போலீஸ் குவார்ட்டர்ஸ் சாலை

(தி.நகர் பேருந்து நிலையம் அருகில்) தி.நகர், சென்னை-17. விலை 80

‘நாடு சர்வ நாசம் ஆனதற்கு திராவிட இயக்கம்தான் காரணம்’ என்று அரசியல் விமர்சன அரங்கத்தில் ஒலிக்கும் குரல்களுக்கு எதிர்வினையாக எழுதப் பட்டுள்ள கட்டுரைகள் இவை.

சுமார் 45 ஆண்டுகளாக தமிழகத்தில் திராவிட இயக்க ஆட்சியே மாறி மாறி நடந்து வருகிறது. அதற்கு முன்னால் பிரிட்டிஷார் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த காலகட்டத்தில், திராவிட இயக்கத்தின் முன்னோடி அமைப்பான நீதிக்கட்சியின் ஆட்சியும் இங்கு நடந்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் தமிழகம் சமூக, அரசியல், பொருளாதார ரீதியாக அடைந்த வளர்ச்சி, மேம்பாடுகளை அந்த இயக்கத்தினர் தங்களது சாதனைகளாகச் சொல்கிறார்கள். இந்தச் சாதனைகள் போதாது என்றும் இன்னும் கூடுதலான வளர்ச்சிக்கு இந்த இயக்கம் வித்திட்டு இருக்க வேண்டும் என்பதும் சிலரது விமர்சனம். இன்னொரு பக்கத்தில், ‘திராவிடம்… திராவிடம் என்று சொல்லி இவர்கள் தமிழர்களை வளரவிடாமல் தடுத்து விட்டார்கள்’ என்ற குற்றச் சாட்டும் வைக்கப்படுகிறது.

அப்படியானால் திராவிடர்கள் என்று சொல்லிக்கொள்வதே தவறா னதா? தமிழர்கள் அனைவரும் திராவிடர்கள் இல்லையா? நாம் தமிழர்களா? அல்லது திராவிடர்களா? ‘பார்ப்பனர் அல்லாதார் என்னும் சொல்லுக்கு மாற்றாகவே, திராவிடன் என்னும் சொல் முன்மொழியப்பட்டுள்ளது. ஆந்திர, கேரள, கர்நாடக மக்களையும் சேர்த்துக்கொள்ளும் சொல்லாகத் திராவிடன் என்னும் சொல், 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே நடைமுறை வழக்கில் இல்லை’ என்பதற்கு கால்டுவெல் தொடங்கி, பி.பி.மஜூம்தார் வரைக்கும் எழுதிய எத்தனையோ ஆதாரங்களைத் தருகிறார் சுப.வீரபாண்டியன். சாதியைக் காரணம் காட்டி அடக்கப்பட்ட மக்களுக்கு கல்வியையும் வேலை வாய்ப்பையும் கொடுத்து, அவர்கள் அரசியலில் பங்கேற்கலாம் என்ற ஜனநாயகத்தன்மையையும் புகுத்தியதுதான் திராவிட இயக்கத்தின் மகத்தான சாதனை. அதன் பலனை அனுபவித்து முன்னேறியவர்களே, அந்த இயக்கத்தை சித்தாந்த ரீதியாகக் குறை சொல்வதுதான் வேதனை.

ஆங்கில ஆட்சியாளர்களை ஆதரிக்கும் சூழ்நிலையை திராவிட இயக்கம் எடுத்ததற்குக் காரணம், அடக்கப்பட்ட மக்களுக்குக் கல்வி புகட்டுவதில் அவர்கள் உதவினார்கள் என்பதற்காகவே என்கிறார். இந்தத் தமிழ்த் தீவிரம் பெரியாரையே கன்னடர் என்று கொச்சைப்படுத்த முயற்சிப்பதைக் கண்டிக் கும் சுப.வீ, ‘பெரியார் தமிழர் இல்லையென்றால், இங்கே எவனும் தமிழன் இல்லை’ என்று சீறுகிறார். தமிழன் சந்தித்த சமூகச் சரிவை பெரியாரும், மொழிச் சரிவை மறைமலையடிகளுமே கண்டு காட்டினார்கள் என்று பெருஞ்சித்திரனார் சொன்ன மேற்கோளை சுட்டிக்காட்டுகிறார்.

‘திராவிடர் கழகம் தோன்றுவதற்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே திராவிடம் என்னும் சொல் ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்ச்சி வெளிப்பாடாகவும், ஏழை எளிய தமிழர்களின் எழுச்சி முழக்கமாகவும் தமிழக மண்ணில் கால்பதித்து உள்ளது’ என்ற வரலாறு எளிமையான தமிழில் எடுத்துரைக்கப்படுகிறது.

தமிழன் என்பது மொழி அடையாளம். திராவிடன் என்பது இன அடையாளம் என்ற வேறுபாடுகளை பலரும் உணராததன் விளைவுதான் இத்தகைய குழப்பங்கள். திராவிட இயக்கத்தை, அதன் ஆட்சியை விமர்சனம் செய்வதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு பெயரை வைத்துக்கொண்டு குறை சொல்வதைக் குத்திக்காட்டும் புத்தகம்!

– புத்தகன்