உயர் நீதிமன்றத்தில் ஒலித்த சந்துரு!

‘எனக்கு ஒரு கோடி ரூபாய் கிடைத்தால், புதிதாக ஒரு நூலகம் கட்டுவேன்’ என்றார் காந்தி. அவரை மகாத்மா என்று கொண்டாடும் நாட்டில் நூலகத்துறையை எப்படி வைத்து இருக்கிறோம் என்பதற்கு உதாரணமான வழக்கு இது! 

 

‘ஒரு சமூகத்தின் கலாசாரத்தை, வரலாற்றைப் பாதுகாக்கும் நூலகங்களின் நிலை தமிழகத்தில் மிக மோசமாக உள்ளது. இப்போது, பொதுநூலகத் துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள அன்பழகன், அதற்குத் தகுதியற்றவர். தகுதி உள்ளவரை அந்தப் பதவிக்க நியமிக்க வேண்டும்’ என்று, சென்னை உயர் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினார் முத்துஸ்வாமி. 25 ஆண்டுகளாக சென்னைப் பல்கலைக்கழக நூல் நிலையத்தில் பணிபுரிந்த முத்துஸ்வாமி, நூலகத் துறையில் தேர்ந்த அறிவும் அனுபவமும் உள்ளவர்.

”பொது நூலகத் துறையின் தலைமைப் பொறுப் பான பொது நூலக இயக்குனர்தான், மாநிலத்தில் உள்ள அனைத்து நூலகங்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டவர். அப்படிப்பட்ட பணிக்கு, தொடர்ந்து தகுதியற்றவர்களே நியமிக்கப்படுகின்றனர். இப்போது நியமிக்கப்பட்டுள்ள அன்பழகனுக்கு நூலகத்தைப் பற்றியோ, நூலக அறிவியல் பற்றியோ எதுவுமே தெரியாது. நிலைமை இப்படி இருந்தால், நூலகங்கள் எப்படி வளர்ச்சி அடையும்?” என்று தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதியரசர் கே.சந்துரு முன் நடந்தது.

முத்துஸ்வாமியின் வேதனைக்கு மட்டுமல்ல, அறிவைத் தேடி நூலகங்களுக்குச் செல்லும் அனைவருக்கும் ஆறுதலாக கடந்த 16-ம் தேதி இந்த வழக்கில் நீதியரசர் கே.சந்துரு ஆணித்தரமான தீர்ப்பை வழங்கி உள்ளார். ‘பொது நூலகங்கள் என்பவை கலாசாரம், ஆவணப்படுத்துதல், இலக்கியம், அறிவியல் வளர்ச்சி, கல்வி ஆகியவற்றுக்கு நீண்ட காலச் சேவை செய்யக்கூடியவை. இதைப் புரிந்துகொண்டு அரசாங்கம் அவற்றின் வளர்ச்சிக்கும் பராமரிப்புக்கும் பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். நூலகத் துறையைச் செழுமைப்படுத்த வேண்டி இதற்கென தனி இயக்குனரகம் 1972-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. கல்வித் துறையிலும் தேர்வுத் துறையிலும் பணிபுரியும் அதிகாரிகளுக்கு ஓய்வு பெறும் காலத்தில் பதவி உயர்வு கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, பொது நூலகத்துறை இயக்குனர் பதவி இதுவரை பயன்பட்டு வந்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் பொது நூலகத் துறைக்கு நியமிக்கப்பட்ட 24 இயக்குனர்களில் 7 பேர் தவிர்த்து மற்ற அனைவரும் கல்வித் துறை அதிகாரிகளே.

நூலக அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்று, 10 முதல் 15 ஆண்டுகள் அனுபவம் உள்ள ஒருவரே பொது நூலக இயக்குனராக நியமிக்கப்பட வேண்டும் என பொது நூலகச் சட்ட விதிகள் தெளிவாக விளக்குகின்றன. ஆனால், அத்தகையத் தகுதி வாய்ந்தவர்கள் இல்லை என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இன்றைய காலகட்டத்தில் அந்தத் துறைக்குத் தகுதியானவர் இல்லை என்று சொல்வதும், தகுதியானவரை நியமிக்க முடியாததும் அவமானகரமானது. வருமான வரியில் நூலக வளர்ச்சிக்காக வசூல் செய்யப்படும் தொகையும் முறையாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதும் இங்கு தெளிவாகி உள்ளது. நூலகர் பணி என்பது புத்தகங்களை எடுத்துக் கொடுக்கவும், வாங்கிவைக்கவும் மட்டுமான கிளார்க் வேலை அல்ல. மிகப் பொறுப்பான வேலை அது.  

உலக வரலாற்றில் பல நூலகங்கள் நேரடித் தாக்குத லுக்கு உள்ளாகி இருக்கின்றன. யாழ்ப்பாண நூலகத்தைக் காவல் துறையும் ராணுவமும் சேர்ந்து தீயிட்டுக் கொளுத்திய சம்பவத்தில் 97 ஆயிரம் புத்தகங்கள் சாம்பல் ஆயின. அதில் தமிழ் இனத்தின் வரலாறு, அறிவியல், கலை, இலக்கியம் அழிக்கப்பட்டன. அதே போல், கோயபல்ஸ் தலைமையில், 1933-ம் ஆண்டு மே 10-ம் நாள் ஜெர்மனியில், கொளுத்தப்பட்ட 25 ஆயிரம் புத்தகங்களின் மூலம் யூத இனத்தின் கலை, வரலாறு அழிக்கப்பட்டன. யூதக் கவிஞன் ஹெயின் ரிச் வார்த்தையில் இதைச் சொல்வதானால், ‘புத்தகங்கள் கொளுத்தப்படும்போது அந்த நெருப்பில் எரிவது மனிதர்களே’.  

ஆனால், நூலகங்களைப் பராமரிக்க நிதி ஒதுக்காதது, ஒதுக்கப்பட்ட நிதியை வழங்காமல் தாமதிப்பது, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது, தகுதியற்றவர்களை நியமிப்பது போன்ற பொறுப்பற்ற செயல்களும் நூலகங்கள் மீதான மறைமுகத் தாக்குதல் கள்தான்.

எனவே, நூலகத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் உடனடியாக தகுதி உடையவர்களை நியமிக்க வேண்டும். இப்போது, பொதுநூலகத் துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள அன்பழகன், அந்தப் பொறுப்புக்குத் தகுதியற்றவர். எனவே, அவரை நியமித்தது செல்லாது’ என்று நீதியரசர் கே.சந்துரு தனது வார்த்தைகளால் அரசாங்கத்தின் செயல்பாடுகளை அடித்து நொறுக்கினார்.

உலகப் புத்தகத் திருநாள் (ஏப்ரல்23) வரும் வேளையில் இந்தத் தீர்ப்பு ஆறுதலாக அமைந் துள்ளது!

ஜோ.ஸ்டாலின்