நூல்: ஒற்றன்

ஆசிரியர்: அசோகமித்திரன்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை: 100 ரூபாய்

1973 – ஆம் ஆண்டு அமெரிக்காவின் அயோவா சிடியிலுள்ள பல்கலைக் கழகம் உலகிலுள்ள சில மிக்கியமான எழுத்தாளர்களை அழைத்து ஒரு ஏழு மாத கால சந்திப்புடன் கூடிய மாநாடு நடத்தினார்கள். அதற்கு ஜப்பான், ஐரோப்பா, அமேரிக்கா, தென் கொரியா, வாட கொரியா, தைவான், இந்தியா, சிலி, பெரு, ஆப்பிரிக்கா போன்ற பல கண்டம் மற்றும் தேசங்களில் இருந்து எழுத்தாளர்கள் கலந்து கொண்டார்கள். இந்தியாவிலிருந்து அந்த மாநாட்டிற்கு எழுத்தாளர் அசோகமித்திரன் கலந்து கொண்டார்.

டான் இதழில் வெளிவரும் அசோகமித்ரனின் மொழி பெயர்ப்பை படித்து அமெரிக்கத் தூதரகம் மூலமாக அந்த அழைப்பு அவருக்கு வந்திருந்தது.

நாவலின் ஒவ்வொரு அத்யாயமும் வேறுவேறு நபர்களால் சிறுகதை வடிவில் அமைந்துள்ளது. ஒரு அத்யாயமானது மற்றொரு அத்யாயத்தை சார்ந்துள்ளது என்று கூற முடியாது. இது படிப்பவர்களுக்கு ஒரு சுதந்திரம் என்றே நினைக்கிறேன். இதே வடிவில் தான் அ. முத்துலிங்கத்தின் ‘உண்மை கலந்த நாட்குறிப்பு’ம் அமைந்திருக்கும். ஆனால் அவர் சிறு வயது முதல் தனக்கு நேர்ந்த பல விஷயங்களை அந்த நாவலில் சொல்லி இருப்பார். ஒற்றனில் அசோகமித்திரன் எழுத்தாளர்களுடனான தனது 7 மாத கால அனுபவத்தை ஒரே கதைக்களத்தை வைத்துக் கொண்டு சொல்லி இருக்கிறார்.

தாங்க முடியாத குளிரில் அவதிப்படுவது, கே-மார்ட் பல சரக்குக் கடையில் சலுகை விலையில் செருப்பு வாங்கி காலை புண்படுத்திக் கொள்வது, புதிதாக வாங்கிய கடிகாரத்தைத் தொலைத்தது, நீண்ட நேரம் பேருந்திற்காகக் காத்திருந்து லாரியில் ஏறிப் போக வேண்டிய இடத்திற்குச் சென்றது, இலக்கியம் படிக்க வந்து காதலில் விழுந்த இலாரியா, அபே குபேக்னா, பிராவோ, கஜூகோ என்ற ஜப்பானிய எழுத்தாளர் என பலருடன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை நகைச்சுவை இழையோட இந்த நாவலில் பதிவு செய்து இருக்கிறார்.

அயோவா சிடி மாநாட்டிற்கு கலந்துகொள்ள இந்தியாவிலிருந்து விமானத்தில் ஏறியது முதல் திரும்பி வரும் வரையுள்ள பல மனிதர்களுடனான அனுபவங்களை வித்யாசமான முறையில் நாவலாக்கியுள்ளார். படித்துக் கொண்டே இருக்கும் போது பல இடங்களில் குலுங்கக் குலுங்க சிரிக்க வைக்கிறார்.

கதை என்றோ – கதையின் நாயகன் என்றோ குறிப்பிட்டுச்சொல்லும் படி யாரும் நாவலில் இல்லை.தனது பயணத்தில் சந்திக்க நேர்ந்த பல நாட்டு மனிதர்களையும், அவர்களுடனான தனது அனுபவங்களையும் கொண்ட நகைச்சுவைத் தொகுப்பு போல் இந்த நாவலை நமக்கு அளித்துள்ளார்.