முத்துக்கள் பத்து: அசோக மித்திரன்
விலை: 40-/ ரூபாய்
தொகுப்பு: திலகவதி
வெளியீடு: அம்ருதா பதிப்பகம்

“நீ யார்” என்ற சு.ரா-வின் ஆவணப்படத்தை நண்பர் மற்றும் பதிவர் விஷ்ணு குமாருடன் (முதல் சுவடு) சென்ற வாரம் அண்ணா சாலையிலுள்ள ஃபிலிம் சேம்பரில் பார்க்க நேர்ந்தது. எழுத்தாளர் அசோகமித்திரனின் பேட்டி அதில் வருமென்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இறந்தவர்களுக்கான காரியங்கள் செய்வதைப் பற்றிய பேச்சு அது. அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும், முகபாவங்களையும் கவனமாகக் கேட்டுக் கொண்டு இருந்தேன். பல இடங்களில் அவருடைய பேச்சு மனம்விட்டு சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. எவ்வளவு பெரிய மேதை. ஆனாலும் எவ்வளவு எளிமையான மனிதராக இருக்கிறார் என்று பிரம்மிப்பாக இருந்தது. ஆனந்தவிகடன் பத்திரிகையின் பொறுப்பாசிரியர் திரு: ரவி பிரகாஷ் அவர்களின் (அசோக)மித்திரனின் மித்திரன் நான்! பதிவினைப் படித்தால் அவருடைய எளிமை நமக்கு பூரணமாகத் தெரியவரும்.

அசோகமித்திரன் கேணி இலக்கிய சந்திப்புக்கு வருகிறார் என்பது தெரிந்தவுடன் அவருடைய நல்ல படைப்புகளை மீள்வாசிப்பு செய்தால் அலாதியாக இருக்குமென்றும் கேள்வி நேரத்தின்போது உரையாட வசதியாக இருக்குமென்றும் நினைத்தேன். அதன்படி கடந்த வாரத்தில் “அசோகமித்ரனின்-முத்துக்கள் பத்து” சிறுகதைத் தொகுப்பைப் படிக்க நேர்ந்தது. அதிலுள்ள கதைகள் யாவும் நிஜ முத்துக்களே.

ஃபோட்டோ: நண்பனின் திருமணத்திற்குச் செல்லும் தோழர்கள் எல்லோரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள். இந்தச் சம்பவத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறுகதை.

சங்கமம்: அடுக்குமாடி குடியிருப்பில் மேலுள்ள வீட்டிலிருந்து நீர்க்கசிவு ஏற்படுவதால் கீழுள்ளவர்களுக்கு ஏற்படும் சிரமத்தைப் பற்றிய கதை.

எலி: ஓர் எலியைக் கொல்வதற்காக நடுத்தர குடும்பத் தலைவர்படும் அவஸ்தையை அருமையாகக் கையாண்டிருக்கிறார். எலிப்பொறியில் வைக்க வீட்டில் எதுவும் இல்லாததால் கடைக்குச்சென்று மசால் வடையை வாங்கி வருகிறான். இரண்டு வடை வாங்கி ஒன்றைப் பொறியில் வைத்துவிட்டு மற்றொன்றைத் தின்று விடுகிறான். மறுநாள் காலை பொறியில் எலி அகப்படிருக்கும் . ஆனால் வடை துளியும் தின்னப்படாமல் அப்படியே முழுசாக இருப்பது கண்டு அவன் மனம் கலங்கும். அதே மனக்கலக்கத்தை நமக்கும் உண்டாக்கிவிடுவார்.

பவள மாலை: பணி நிமித்தமாக வெளியூர் செல்லும் கணவன் தனது மனைவிக்கு பவள மாலையை வாங்குகிறான். தான் ஏமாந்துவிட்டோமோ, மனைவி கண்டுபிடித்து அசிங்கப் படுத்திவிடுவாலோ என்று நினைக்கும் கணவனின் பார்வையிலமைந்த கதை.

முனீரின் ஸ்பானர்கள்: Secunderabad -லுள்ள ஒருவன் தனது தந்தையின் இழப்பு காரணமாக சென்னைக்குக் குடிபெயர நேர்கிறது. வீட்டிலுள்ள பொருட்களை எடுத்துச் சென்று ரயிலில் ஏற்ற தனது நண்பனின் உதவியை நாடுகிறான். நண்பனும் அவனுடைய முதலாளியும் உதவி செய்ய வருகிறார்கள். அனுப்பப்படும் பொருட்களுடன் முதலாளியின் இரண்டு ஸ்பானர்கள் தவறுதலாக கலந்துவிடுகின்றன. சென்னைக்குச் சென்றதும் தான் அவனுக்கு இந்த விஷயம் தெரியவருகிறது. அதற்கு முன்பே முதலாளியின் சந்தேகம் காரணமாக நண்பனின் வேலை பறிபோகிறது.

மீரா – தான்சேன் சந்திப்பு: பக்தை மீராவும், அக்பரின் ஆஸ்தான பாடகர் தான்சேனும் சந்தித்ததாகக் கூறப்படும் வாய்வழிச் செய்தியை மையமாக வைத்து எழுதப்பட்டக் கதை.

“ராஜாவுக்கு ஆபத்து, பாலா மணி குழந்தை மண்ணைத் தின்கிறது, பங்கஜ் மல்லிக், இன்று நிம்மதியாகத் தூங்க வேண்டும்” ஆகிய கதைகளும் படிக்க ஸ்வாரஸ்யமாக இருக்கிறது.

எனது கதைகளில் ‘உத்தி’ என்று எதுவும் இல்லை. உத்தியில்லாத உத்தியைத்தான் பயன்படுத்துகிறேன் என்று சொல்லும் இவருடைய கதைகளின் எளிமையும், வாசிப்பனுபவமும் படித்து ஆனந்தப் படவேண்டிய ஒன்று. கன்னிமரா நிரந்தர புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகம் வாங்கக் கிடைக்கிறது.