ஆசிரியர்: சி.சு.செல்லப்பா
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை: 125 ரூபாய்

“செப்டம்பர் 13ம் தேதியன்று நடைபெற்ற ‘சென்னைச் சிறுகதைப் பட்டறை’யில் கலந்து கொள்வதற்கு முன் சிறுகதைகள் பற்றிய தெளிவு ஏற்பட ஏதாவது புத்தகம் கிடைக்காதா என்று தேடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது பார்த்து காலச்சுவடு வெளியீட்டில் சி.சு.செல்லப்பா எழுதிய இந்தப் புத்தகம் கண்ணில்பட்டது.

1956-ல் சுதேசமித்திரன் தீபாவளி மலரில் சிறுகதை இலக்கியம் பற்றி சி.சு.செல்லப்பா ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அவருக்கு சாதகமாகவும், பாதகமாகவும் அந்தக் கட்டுரை சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலிருந்து சிறுகதை ஆசிரியர்களைப் பற்றியும், அவர்களுடைய படைப்புகளைப் பற்றியும் விமர்சனம் எழுதும் ஆவலை இந்த விவாதம் தூண்டிவிட்டிருக்கிறது.

அதன்படி, பின்னாளில் “எழுத்து” இலக்கிய இதழை சி.சு.செல்லப்பா சொந்தமாகத் தொடங்கிய போது – 1964 முதல் 1969 வரையிலான காலகட்டங்களில் போதிய இடைவெளியில் “தமிழ்ச் சிறுகதை” என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அதன் பிறகும் சிறுகதைகளைப் பற்றி எழுதிய பிரசுரமாகாத கட்டுரைகளையும் சேர்த்து ‘தமிழ்ச்சிறுகதை பிறக்கிறது’ என்ற புத்தகமாகக் கொண்டுவந்திருக்கிறார்.

“வ.வே.சு ஐயர், அ. மாதவையா, றாலி, பி. எஸ். ராமையா, கல்கி, எம்.எஸ். கல்யாணசுந்தரம், ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், சி.சு.செல்லப்பா, சங்கு சுப்ரமண்யன், புதுமைப்பித்தன், பே.கோ. சுந்தரராஜன், ந.சிதம்பர சுப்ரமண்யன், தி.ஜ.ர, மௌனி, லா.ச.ரா” போன்ற தமிழின் முக்கியமான மூத்த படைப்பாளிகள் எழுதி 1920 முதல் 1939 வரையில் வெளிவந்த முத்திரைச் சிறுகதைகளை எடுத்துக் கொண்டு அவற்றின் உருவம், உள்ளடக்கம், கதை நுட்பம், வடிவ நேர்த்தி ஆகியவற்றை விவாதித்து, அவை பிற்கால சிறுகதை இலக்கியத்திற்கு அளித்த பங்களிப்பை இந்த விமர்சன நூலின் மூலம் முன் வைக்கிறார்.

இதன் முதற்பதிப்பு 1974-ல் வெளிவந்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சில திருத்தங்களுடனும், பிற் சேர்க்கைகளுடனும் காலச்சுவடு பதிப்பகத்தார் 2007 ஆண்டு மீள் பிரசுரம் செய்துள்ளார்கள்.

சிறுகதை எழுத ஆசைப்படுபவர்களுக்கும், சிறுகதை இலக்கியத்தைப் புரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கும் இந்த விமர்சனப் புத்தகம் பயனுள்ள நூலாக இருக்கும். இந்நூல் காலச்சுவடு பதிப்பகத்தில் வங்கக் கிடைக்கிறது.