பக்கங்கள் 160
விலை: ரூ. 90
வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை – 600018.

இந்தப் புத்தகத்தை இணையம் மூலம் இங்கே வாங்கலாம்.

நம்பக்கூடாத கடவுள்: புத்தக அறிமுகம்

”மனிதன் குரங்கிலிருந்து வந்தானா? அப்படியா அறிவியல் சொல்கிறது? இது ஒரு பொதுவான தப்பபிப்ராயம்.மனிதன் குரங்கிலிருந்து வரவில்லை, மனிதனே குரங்கு தான்.. மனிதன் சிம்பன்சியிலிருந்து வந்தானா, கொரில்லாவிலிருந்து வந்தானா என்றால் எதுவும் இல்லை. மனிதனும் சிம்பன்சியும் ஒரு பொது மூதாதையிடமிருந்து 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் பரிணாமப் பாதையில் கிளைபிரிந்தனர்.. சிம்பன்சிகளும் மானுடமும் கிளைபிரிந்த பிறகு மூலக்கூறு கடிகாரம் இரு கிளைகளிலும் இயங்கிய வேகம் கணக்கிடப் பட்டுள்ளது. இதர பேரினக் குரங்குகளின் கிளைப்பிரிவுகளைக் காட்டிலும் சிம்பன்சி-மானுடக் கிளைகளில் அந்த வேகம் ஒரே சீரான தன்மை கொண்டதாக உள்ளது”

இது டார்வினிய அறிவியல். ஓரளவு நமக்கெல்லாம் தெரியும்.

”இந்தப் பார்வை தரும் உணர்வு மகத்தானது. இந்தப் பார்வையில் கிடைக்கும் உயிர் மதிப்பு ஆழமானது. ஒவ்வொரு சக மனிதனும், அவன் மிக மோசமான உங்கள் சித்தாந்த எதிரியாக இருக்கலாம் அல்லது அவனது மூக்கின் நீளம் உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம் – ஆனால் அவன் அல்லது அவள் ஒரு பெரும் பரிணாமப் பாதையின் சொந்தக் காரர்.. எரிச்சலும் பொறாமையும் கொண்ட தேவன்களின் பிள்ளைகளாக இருப்பதைக் காட்டிலும், சிம்பன்சிகளின் பரிமாணப் பங்காளிகளாகவும், கொரில்லாக்களின் தாயாதிகளாகவும் இருப்பது மகத்தானது”.

இது? ’டார்வினிய ஆன்மிகம்’!

nambakooedatha-kadavul-book-coverஇப்படி ஒரு பெயரைக் கேட்டவுடன் உங்கள் மண்டைக்குள் ஒரு பல்ப் எரிகிறதா? அல்லது மண்டையைப் பிய்த்துக் கொள்ளலாம் போல இருக்கிறதா? எப்படியானாலும், ஒரு வாசகராக உங்களைத் திகைக்க வைத்து, சிந்திக்க வைத்து, கற்றுத் தந்து, பிரமிக்க வைக்கும் எண்ணக் கீற்று இது என்று நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள்.

இணையத்தில் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய 22 கட்டுரைகளின் தொகுப்பு “நம்பக் கூடாத கடவுள்” என்ற பெயரில் வெளிவந்துள்ளது. அதில் ஒரு கட்டுரையின் சில வரிகளைத் தான் மேலே பார்த்தோம் (குரங்கு மனிதன் ஆகுமா?).

வெளியில் வேறுவேறு விதமாதத் தோன்றும் உயிர்வகைகள் அடிப்படையில் பரிணாமவியல் ரீதியாக பின்னிப் பிணைந்திருப்பது போலவே புத்தகத்தில் வேறுவேறு தலைப்புகளில் உள்ள பல கட்டுரைகளிலும் இயைந்து பல தொடர்புடைய சிந்தனை இழைகள் அறுபடாமல் ஓடிக் கொண்டே இருக்கின்றன.

“இந்தியப் பண்பாட்டில் படைதோனுக்குக் கோயிலே கிடையாது, பிரம்மனுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒன்றிரண்டு.. படைக்கும் தெய்வம் எளிய மனத்துக்குத் தேவையாக இருக்கலாம், ஆனால் பண்பட்டு விரியும் ஞானத் தேடல் கொண்ட மானுடத்துக்கு அல்ல. நடைவண்டியைப் பிடித்துக் கொண்டு பச்சைக் குழந்தை நடந்தால் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் பதின்ம வயதுப் பையன் நடந்தால்? தலையில் குட்டத் தான் தோன்றும். நான் படைப்போன் என்றான் பிரமன். அறிவுக் கடவுள் முருகன் குட்டினான்” (மூன்றாவது பாதை).

இப்போது டார்வினிய ஆன்மிகத்தின் இன்னொரு பரிமாணம் கிடைக்கிறது.

சரி, கலாசார உணர்வு இல்லாத ஒருவகை வறண்ட நாத்திகவாதம் போலும் என்று நீங்கள் எண்ணத் தொடங்கினால், அங்கே தவறு செய்கிறீர்கள்.

”அந்த இடம் ஒரு தேசத்தின் ஆதார தேசிய உணர்ச்சியுடன் தொடர்புடையது. இந்த தேசம் முழுவதும் அனைத்து சமுதாய மக்களிடமும் ஒரு ஆழமான பண்பாட்டு ஆன்மிக உணர்ச்சியுடன் இணைந்த ஒரு பெயர் ஸ்ரீராமன். ஆதிகவி வான்மீகிக்கு அவன் ஆதர்ச நாயகன். அகநானூற்றுக் கவி கடுவன் மள்ளனார்க்கும் சபரிக்கும் அவன் தெய்வம். குகனுக்கு சகோதரன். ஆனால் அவனையும் கூட கேள்விக்கு உட்படுத்தும் மரபு ஹிந்துக்களுடையது. எனவேதான் அவன் பாரதத்தின் தேசிய நாயகன். ராம ரசத்தைப் பருகுங்கள் என்று சிந்து நதிக்கரை சீக்கியரையும் பிபரே ராமரசம் என்று காவேரிக்கரை தென்னிந்தியரையும் இணைக்கும் பண்பாட்டு உன்னதம் ராமன்”

என்ற உணர்ச்சி பொங்கும் வரிகள் வேறொரு கட்டுரையில் தெறித்து விழுகின்றன (உண்மையான கரசேவை).

”கடவுளை நீங்கள் உணரத் தான் முடியும், அனுபவிக்கத் தான் முடியும். *நம்ப* முடியாது, நம்பவும் கூடாது”

என்று இந்து ஆன்மிகத்தின் சாரத்தை ஒரே வாக்கியத்தில் அழகாகச் சொல்லிச் செல்கிறது நூலுக்குப் பெயர் தந்திருக்கும் “நம்பக் கூடாத கடவுள்” கட்டுரை.

”உலகின் ஆதிமொழி தமிழா” என்ற கேள்வியை அறிவியல்பூர்வமாக எந்த மரபு வழிபாட்டுணர்வும் காழ்ப்புணர்வும் இன்றி மற்றொரு கட்டுரை ஆராய்கிறது. கறாரான அறிவியல் வரலாற்று ஆய்வு முடிவுகளைக் கருத்தில் கொண்டு, அதே சமயம் தொல்பழங்காலக் குடிகளுக்கிடையில் பண்பாட்டு உறவுகள் நிகழ்ந்து அதன் தொடர்ச்சிக்கான தடயங்களும் இருக்கக் கூடும் என்பதையும் சமநிலையுடன் இக்கட்டுரை கச்சிதமாக முன்வைக்கிறது. இதில் சு.கி.ஜெயகரன் என்ற நிலவியலாளர் எழுதியிருக்கும் ’குமரி நிலநீட்சி’ என்ற நூலில் இருந்து மேற்கோள்களை சான்றாதாரமாக அளித்திருக்கிறார் அரவிந்தன். அதைப் படித்து விட்டு, சு.கி.ஜெயகரன் எழுதியிருக்கும் ‘மணல்மேல் கட்டிய பாலம்’ என்ற ஒரு கட்டுரைத் தொகுப்பையும் வாங்கி வாசித்தேன் (காலச்சுவடு வெளியீடு).

லெமூரியா மற்றும் நிலவியல் தொடர்பான 2-3 கட்டுரைகள் தவிர்த்து அந்தத் தொகுப்பு எனக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. ஆரிய திராவிட இனவாதத்தையும், சமணர்கள் கழுவேற்றத்தையும் நிறுவப்பட்ட வரலாற்று ஆதாரங்கள் போல எழுதிச் செல்கிறார் ஜெயகரன். அறிவுலகில் நெடுநாள் முன்பே நார்நாராகக் கிழிக்கப் பட்ட எரிக் வான் டானிக்கனின் “கடவுளரின் ரதங்கள்” நூல் குறித்து அதே வாதங்களை முன்வைத்து எழுதியிருக்கிறார், பரவாயில்லை. ஆனால் நடுவில் டானிக்கனின் வெள்ளை இனமேன்மைவாதத்தை சம்பந்தமே இல்லாமல் திருவள்ளுவரின் தாய்-தந்தையரான ஆதி பகவன் குறித்துக் கூறப்படும் தமிழகத் தொன்மக் கதையுடன் தொடர்பு படுத்துகிறார். ஆனால் இதே கலாசாரத்தில் மீனவர் வியாச மகரிஷியும், வேடுவர் வால்மீகி மகரிஷியும் பற்றிய தொன்மங்களை வசதியாக மறந்து/மறைத்து விடுகிறார். நடுநிலையாளர் என்று எண்ணியிருந்த சு.கி.ஜெயகரன் சில விஷயங்களில் மட்டும் முன்முடிவுகளை அப்படியே ஏற்றுக் கொள்பவராகவும், காழ்ப்புணர்ச்சிகளை வெளிப்படுத்துபவராகவும் வெளிவந்தார். ’மணல்மேல் கட்டிய பாலம்’ என்ற அந்தப் புத்தகத்தின் தலைப்புக்கேற்பவே அவர் பற்றிய பிம்பமும் உடைந்து போயிற்று.

ஆனால் அரவிந்தனிடத்தில் இத்தகைய சறுக்கல்களையும், காழ்ப்புணர்வுகளையும் சல்லடை போட்டுத் தேடினாலும் காண முடியாது. அவரது வாதங்கள் எப்போதும் ஒரு பிரசினையின் எல்லாப் பக்கங்களையும் எடுத்துரைப்பதாகவே இருக்கும். சதிக்கோட்பாடுகள் (conspiracy theories) பற்றிய இரண்டு சுவாரஸ்யமான கட்டுரைகள் இதற்கு ஒரு நல்ல உதாரணம். “உலகை ஆள ஒரு சிறு கும்பல் சதி செய்கிறது” என்பதை வைத்து எப்படி “பிறர்” மீது வெறுப்பு பிரசாரங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன என்பதைச் சொல்கின்றன இக்கட்டுரைகள். ஆர்.எஸ்.எஸ்ஸைக் குறிவைத்து இந்து விரோதிகள் உருவாக்கிப் பரப்பிய வதந்திகளைப் பற்றிக் கூறுவதோடு, ஏசுசபை பற்றி கத்தோலிக்க சர்ச் உருவாக்கிய ஒரு வதந்தியையும் எப்படி ஒருசில இந்துத்துவர்களே நம்பி தங்கள் பிரசாரத்தில் பயன்படுத்தினர் என்பதையும் பதிவு செய்கிறார். இந்த நடுநிலைமை தான், இத்தகைய ஆய்வுநோக்கு தான் உண்மையில் இந்துத்துவ அறிவியக்கத்திற்கு பலம் சேர்க்கிறது. இந்த வகையில் அரவிந்தன் இந்துத்துவ சிந்தனையாளர்கள் பின்பற்ற வேண்டிய ஒரு சிறந்த முன்னுதாரணமாகவும், வழிகாட்டியாகவுமே திகழ்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

கஜினிமுகமதுவின் படையெடுப்புகளையும், ராஜராஜ சோழனின் படையெடுப்புகளையும் ஒப்பிடும்போதும் சரி, தன் அண்ணன் ஔரங்கசீப்பால் இஸ்லாமிய விரோதி என்று குற்றம் சாட்டப் பட்டுக் கொல்லப் பட்ட தாரா சுகோவின் தரப்பை முன்வைக்கும்போதும் சரி, மார்க்சியப் பார்வையையும் சீனாவின் “பொன்னுலக சுரங்கங்களையும்” விமர்சிக்கும்போதும் சரி, வரலாற்றில் அடிமை முறையை முதலில் ஒழித்தது யார் என்று ஆராயும்போதும் சரி – இதே நடுநிலை நோக்கையும், அதிகூர்மையான வாதங்களையும் நாம் கண்டுணரலாம்.

aravindan_neelakandanதொன்மம், மதம், அறிவியல், சமூகம், சூழலியல், மானுடநேயம், பிரபஞ்சம் அளாவிய நோக்கு என்று பல தளங்களில் விரிந்து செல்லும் சிந்தனை இழைகளை இத்தொகுப்பின் ஒவ்வொரு கட்டுரையிலும் நீங்கள் பார்க்கலாம். பேசுபொருட்களின் வீச்சில் மட்டுமல்ல, ஆழத்திலும் இக்கட்டுரைகள் சளைத்தவை அல்ல. ஒவ்வொரு கட்டுரைக்குப் பின்னும் அதற்கான ஆதாரங்களை உள்ளடக்கிய சான்றுகளின் பட்டியலே இதற்குச் சான்று.

இன்றைக்கு தமிழகத்தின் முக்கிய சிந்தனையாளர்களில் வைத்து எண்ணத் தக்கவர் அ.நீ. அரவிந்தனின் தீவிர ஆய்வு நோக்கும், தொடர்புடைய துறைகளில் அவரது தேர்ந்த புலமையும் அவரைத் தொடர்ந்து வாசித்து வருபவர்கள் நன்கறிந்தது. ஒரு மூன்று பக்கக் கட்டுரைக்குக் கூட அவர் அமைக்கும் பரந்துபட்ட களமும், தரும் உழைப்பும் அசாதாரணமானவை. எனது நெருங்கிய நண்பர் என்பதற்காகச் சொல்லவில்லை, அரவிந்தனின் எழுத்துக்களைப் படிக்கும் ஒவ்வொரு வாசகருமே அதனை மனப்பூர்வமாக உணரமுடியும்.

இந்தத் தொகுப்புக்கு “ஹிந்துத்துவ சிந்தனைகள்” என்று பதிப்பகத்தார் பெயர் சூட்டியுள்ளனர். ஃப்ராக்டல்கள் (fractals) பற்றிய அறிவியலும், அம்பேத்கரின் சாதிய நிராகரிப்புப் பார்வையும், காலனிய சக்திகளின் காடழிப்புச் செயல்களின் பின்னுள்ள வர்த்தக அரசியலை அம்பலப் படுத்துவதும், பெண் அறிவியலாளர்கள் பற்றிய சித்தரிப்பும் எல்லாம் ஹிந்துத்துவம் என்ற சித்தாந்தத்தில் தான் சரியாகப் பொருந்துகின்றன என்று அவர்கள் கருதியிருப்பதாகத் தெரிகிறது. வாழ்க! அவர்கள் எண்ணம் உண்மையிலேயே சரியானது, பாராட்டுக்குரியது. இந்துத்துவம் ஒரு குறுகிய சமூக, அரசியல் சித்தாந்தம் அல்ல, மாறாக உலகம் முழுவதும் ஒரு குடும்பம் என்று அரவணைக்கும் மானுடநேய நோக்கு என்பதை இந்தப் பெயரே சொல்லிவிடுகிறது. இந்துத்துவ சிந்தனையாளரான தீனதயாள் உபாத்யாயா உருவாக்கிய “ஒருங்கிணைந்த மனிதநேயம்” (integral humanism) என்ற கருத்தாக்கத்துடன் இயைவதாகவும் இது உள்ளது.

அதே சமயம், இந்த அற்புதமான நூலுக்கு ”இந்துத்துவ முத்திரை” குத்தியிருப்பதால், பெயரைப் பார்த்தே முகம் சுளித்து எதிர் தரப்பாளர்களும், நடுநிலைப் பாவனைக்காரர்களும் புத்தகத்தைத் தள்ளி வைக்கக் கூடும். அப்படித் தள்ளி வைப்பவர்கள் ஒரு மாபெரும் சிந்தனைக் களஞ்சியத்திற்குள் நுழையும் வாய்ப்பைத் தாங்களே வலிய இழக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும். அந்தோ! அவர்களுக்காகப் பரிதாபப் படுகிறேன்.

இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கும் கிழக்குப் பதிப்பகத்துக்குப் பாராட்டுக்கள்.

   Send article as PDF