ஆசிரியர்: ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ.கிருஷ்ணமாசாரியர்
மொத்தப் பக்கங்கள்: 6000+.
வெளியிட்டோர்: ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ,

ஒவ்வொரு பகுதிகளும் பற்றிய சிறு குறிப்பு:

பகுதி 1 (2 பாகங்கள்): புராணக் குறிப்புகள் முதல் ஸ்ரீராமானுஜர் காலம் வரையிலான வரலாறு. மேலும் பராசர பட்டர் தொடங்கி கி.பி 1623 முத்துவீரப்ப நாயக்கன் காலம் வரையிலான வரலாறு.

பகுதி 2 (2 பாகங்கள்): கி.பி 1623 முதல் 1803, கோயில் நிர்வாகம் கிழக்கிந்தியக் கம்பெனி வசம் வரும் வரையிலான வரலாறு. கந்தாடை ராமானுஜ முனி உட்பட இக்காலகட்டத்தில் திருவரங்கத்தில் வாழ்ந்த ஆசாரியர்கள் வரலாறு.

பகுதி 3 (3 பாகங்கள்): கிபி. 1803 முதல் 2003 வரை கோயில் உரிமைகள் தொடர்பாக தென்கலையார் தொடுத்த நீதிமன்ற வழக்குகள், தீர்ப்புகள். சித்திரை முதல் பங்குனி வரை நடைபெறும் பல்வேறு விழாக்கள். ஒழிபியல் என்ற தலைப்பில் கோயில் பற்றிய பல துணுக்குச் செய்திகள்.

பகுதி 4 (2 பாகங்கள்): ஸ்ரீரங்கமஹாத்மியம் நூல் தரும் கோயில் விவரங்கள். பங்குனிப் பெருவிழா மற்றும் அதன் வரலாறு பற்றி விரிவான விவரணங்கள். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் திருவரங்கம் தொடர்பான 247 பாசுரங்களுக்கான விளக்கம், பூர்வாசாரியர்கள் உரையின்படி.

பகுதி 5 (2 பாகங்கள்): நாதமுனிகள் முதல் ஸ்ரீராமானுஜர் வரையிலான ஆசாரியர்களின் திருவரங்க அனுபவம். விஜயநகர, மதுரை மன்னர்கள், தஞ்சை நாயக்கர் காலத்து கல்வெட்டுகள், செப்பேடுகள் பற்றிய முழுமையான விவரங்கள்.

பகுதி 6 (3 பாகங்கள்): கூரத்தாழ்வான் திருவரங்க வாழ்வும் பணியும். கூரேச வைபவம் என்ற நூல் கூறும் குறிப்புகள். ஆழ்வான் அருளிய 5 சம்ஸ்கிருத தோத்திர நூல்களின் மூலமும் உரையும்.

பகுதி 7 (2 பாகங்கள்): முதலியாண்டான் தொடங்கி மணமாள மாமுனிகள் வரை இராமானுஜருக்குப் பின்வந்த ஆசாரியர்களின் திருவரங்க அனுபவம். திருவரங்க கோயில் அமைப்பு. கோயிலின் அனைத்து பகுதிகள் (கோபுரங்கள், தூண்கள், மண்டபங்கள், சன்னிதிகள்..), சிற்பங்கள், சித்திரங்கள் பற்றிய விரிவான விவரணங்கள். சில வரலாற்றுப் புதிர்கள் குறித்த பிற்சேர்க்கை.

தனித்தனி பகுதிகளின் விலை & மற்ற விவரங்கள் அறிய பதிப்பாளரைத் தொடர்பு கொள்ளவும்.

கோயிலொழுகு ஏழாம் பாகம் வெளியீட்டு விழாவில் நான் ஆற்றிய உரையின் சில முக்கியமான கருத்துக்களை, நூல் பற்றிய ஒரு சிறிய அறிமுகமாக இங்கு தருகிறேன்.

கோயிலொழுகு என்ற பெயரில் பரம்பரை பரம்பரையாக ஸ்ரீரங்கம் கோயிலில் தொடர்ச்சியாக எழுதப் பட்டு, பாதுகாக்கபட்டு வரும் சுவடிகளின் அடிப்படையிலான வரலாற்று நூலைத் தான் கிருஷ்ணமாசாரியர் சுவாமி அவர்கள் எழுத ஆரம்பித்திருந்திருக்கிறார். அது முதல் இரண்டு பாகங்களில் முடிந்து விட்டது. பிறகு இக்கோயில் தொடர்பான ஏராளமான மற்ற விஷயங்களையும் சேர்த்து எழுதி, அது இப்போதுள்ள பிரம்மாண்டமான வடிவத்தை அடைந்திருக்கிறது. திருவரங்கம் கோயிலுடன் தொடர்புடைய அனைத்து வைஷ்ணவ ஆசாரியார்களின் வரலாறுகள், ஆசாரியர்களின் திருவரங்க அனுபவம், மன்னர்கள் மற்றும் நிர்வாகிகள், கோயிலில் நடைபெற்ற உத்சவங்கள், அவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள், கோயில் நிர்வாகம் தொடர்பான ஏராளமான செய்திகள், போர்கள், நீதிமன்ற வழக்குகள், கல்வெட்டுகள் சொல்லும் செய்திகள், ஸ்ரீரங்கம் தொடர்பான பல சம்ஸ்கிருத, தமிழ் பாசுரங்களுக்கான விளக்கங்கள், கோயில் கட்டிடக் கலை, சிற்ப சித்திரக் கலைகள் – இப்படி பல விஷயங்கள் சேர்ந்து இது ஒரு என்சைக்ளோபீடியாவாக, ஸ்ரீரங்கம் பற்றிய ஒரு முழு கலைக்களஞ்சியமாக ஆகிவிட்டிருக்கிறது. ஆசிரியரே தனது உரையில் சொன்னது போல, புத்தகத்தின் அனைத்து பாகங்களையும் முழுதாகப் படிப்பது பொது வாசகர்களுக்கு அசாத்தியமான விஷயம். அவரவர்கள் தங்களுக்கு ஆர்வமுள்ள விஷயங்களையே தேடிப் படிக்கக் கூடும்.

srirangam-koyilozhugu-books-2

History என்றால் வரலாறு. Historiography என்பதை வரலாற்று வரைவியல் என்று சொல்லலாம். வரலாறு எப்படி, எந்தெந்த பார்வைகளில், எந்தெந்த விஷயஙக்ளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப் படுறது என்பதைப் பற்றிப் புரிந்து கொள்வது வரலாற்று வரைவியலின் ஒரு அம்சமாகும். உதாரணமாக, முன்பு வரலாறு என்றால் அரச வம்சங்கள், அது தொடர்பான விவகாரங்கள், போர்கள் ஆகியவற்றைப் பற்றியே மையமாகப் பேசப் பட்டது. ஆனால் தற்போது அதை விட முக்கியமாக, பல்வேறு விதமான மக்களும் ஒவ்வொரு காலகட்டத்தில் எப்படி வாழ்ந்தார்கள், அவர்களது பழக்க வழக்கங்கள் எப்படியிருந்தன, வாணிகம் எப்படியிருந்தது, பெண்கள் நிலை, கல்வி, கலைகள் போன்ற பல விஷயங்களையும் பற்றிய சமூக வரலாறு (social history) முக்கியத் துவம் வாய்ந்ததாகக் கருதப் படுகிறது. இந்த அடிப்படையில் கோயிலொழுகு ஒரு முக்கியமான வரலாற்று வரைவியல் ஆவணமாகவும் சிறப்பிடம் பெறுகிறது.

கோயிலொழுகு ஏழாம் பாகம் முதல் பகுதியிலிருந்து ஒரு உதாரணம். தேவர்கள் எல்லாரும் பார்த்திருக்க, நாணமின்றி பெரியபிராட்டி பெருமாளின் திருமார்பின் மேலேறிக் கொண்டாளே, அது சரியா என்று ஒரு சீடர் கேட்க, ஆசாரியார் விளக்கம் சொல்கிறார் – ”அந்தப்புரத்திலே கூனன், பேடு, கிழவன் போன்றோர் இருக்கையிலே, மகாராணி நீராடப் போகும் சமயம், அவர்களும் தாதிமார்களுடன் சேர்ந்து சேவகம் செய்வார்களாகையாலே, மகாராணிக்கு நாணம் ஏற்படுமோ?அது போல, சகல தேவகணங்களும் எம்பெருமானுடைய பரிசாரகர்கள் போன்று ஆகையினாலே, பெரிய பிராட்டி அனைவரும் பார்த்திருக்க பெருமாள் திருமார்பில் ஏறி அமர்ந்தாள்” என்கிறார். இதன்மூலம் அந்தக் காலகட்டத்திய அந்தப்புர நடைமுறை பற்றியும், ஆசாரியர்கள் சம்பாஷணைகளின் போது எப்படி எந்தவிதமான மனத்தடைகளும் இன்றி உரையாடினார்கள் என்பதும் தெரியவருகிறது.

இலக்கியம், தத்துவம், வரலாறு இவை மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தையே எடுத்துக் கொண்டால், முதலில் ஆழ்வார்களின் பாசுரங்கள். அவற்றை நாதமுனிகள் தொகுக்கிறார். பிறகு ஸ்ரீராமானுஜர் ஆழ்வார்களின் பக்தி அனுபவத்தை மையப் பொருளாக வைத்து வேதாந்த நூல்களுக்கு பாஷ்யம் எழுதுகிறார். பிறகு வருகிற ஆச்சாரியார்கள் இவை இரண்டையும் ஒன்றிணைத்து அற்புதமான வியாக்கியனங்களையும், பல்வேறு தனி நூல்களையும் அருளிச் செய்கிறார்கள். திருவாய்மொழி ஒன்றுக்கே பல்வேறு வியாக்கியானங்கள் தொடர்ந்து எழுதப் பட்டு வந்திருக்கின்றன. தத்துவத்தை கட்டமைக்கும் போது உருவாகும் முரண்பாடுகளையும், கருத்து வேற்றுமைகளையும் ஒவ்வொரு கட்டத்திலும் சமன்செய்து தெளிவு ஏற்படுத்துவதற்காகவே ஒரே நூலுக்கு இத்தனை உரைகள் எழுந்திருக்கலாம் என்று நூலாசிரியரிடம் கூறினேன். தனக்கும் அது ஏற்புடையதே என்று அவர் சொன்னார். இப்படி பல காலகட்டங்களின் ஊடாக ஸ்ரீவைஷ்ணவம் ஒரு உறுதியான கட்டமைப்பு மிக்க சித்தாந்தமாக பரிணாம வளர்ச்சி பெறுவது பற்றிய ஒரு அழகிய சித்திரமும் கோயிலொழுகில் நமக்குக் கிடைக்கிறது.

srirangam-jeeyars-who-sacrificed-themselvesஇன்னொரு விஷயம் hagiography. பிரபலான பெரும் ஆளுமைகளின் வரலாற்றுக் குறிப்புகளை எழுதுவது பற்றிய துறை இது. ஆங்கிலத்தில் இந்தச் சொல்லைப் பயன்படுத்தும்போது,அந்த குறிப்பிட்ட ஆளுமைகள் பற்றிப் போற்றிப் புகழ்ந்து எழுதப் பட்ட மிகைச்சித்திரங்களையே அவை பெரும்பாலும் குறிக்கின்றன. அரசவைக் கவிஞர்களின் பாடல்கள், பாபர் நாமா, அயினி அக்பரி போன்ற அரசவை நாட்குறிப்புக்கள் ஆகியவையும் இதில் வரும். இந்தக் கண்ணோட்டத்தில் கோயிலொழுகை நாம் பார்க்கும்போது, ஒரு விஷயம் தென்படுகிறது. இது அடிப்படையில் மக்களால் எழுதப் பட்ட ஒரு உண்மையான மக்கள் வரலாறு. ஒரு அரசு அதிகாரத்தின், ஆட்சியின் ஆவணம் அல்ல இது. மாறாக, பல்வேறுபட்ட குரல்களின் தொகுப்பு என்று இதைக் குறிப்பிடுவது சரியாக இருக்கும். மன்னர்கள் மற்றும் நிர்வாகிகளைப் பற்றிய புகழுரைகள் மட்டுமல்ல, கண்டனங்களும், எதிர்ப்புக் குரல்களும், விமர்சனங்களும் கூட இதில் பதிவு செய்யப் பட்டுள்ளன. ஒரு கொடுங்கோல் மன்னன் காலத்தில் (கோனேரி ராஜன்??) அவனை நல்வழிப்படுத்தும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைய, தங்கள் மரணமாவது அவனைத் திருத்தக் கூடும் என்ற எண்ணத்தில் இரண்டு ஜீயர்கள் கோபுரத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது பதிவு செய்யப் பட்டுள்ளது. அந்தக் கோபுர வாசலில் அவர்களது உருவங்களும் சிறிய அளவில் செதுக்கப் பட்டிருக்கின்றன. கொடுங்கோல் மன்னனை எதிர்த்து மாண்டவர்களின் நினைவுச் சின்னம் இங்கே பதிவாகியிருக்கிறது, எந்தப் புரட்சி கோஷங்களும் இல்லாமல்.

மாபெரும் கல்விக் கூடங்களும், ஆய்வு நிறுவனங்களும் சேர்ந்து செய்ய வேண்டிய பணியை கிருஷ்ணமாசாரியார் அவர்கள் தனியொருவராக நின்று செய்திருக்கிறார். கண்ணன் தன் சிறுவிரலால் மலையைத் தூக்கியற்கொப்பான காரியம். தனது ஐம்பது வயது வரை இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணியாற்றி விட்டு, ஓய்வுவாங்கிக் கொண்டு இந்தக் கோயிலைப் பற்றி ஆய்வு செய்வதற்காகவே ஸ்ரீரங்கத்தில் வாசம் செய்யத் தொடங்கியிருக்கிறார். இந்த மாபெரும் பணிக்குத் தன்னை தயார் செய்து கொள்வதற்காகவே அதற்கு முன்பு தமிழ், சமூகவியல், பொது நிர்வாகம் ஆகியவற்றில் தொலைவழிக் கல்வி மூலம் படித்து முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். கல்வெட்டுகளைப் படித்து, பொருளறியக் கற்றுக் கொண்டிருக்கிறார். சம்பிரதாயமான பார்வையுடனேயே வைஷ்ணவ நூல்களை நன்கு கற்றறிந்தவர். ஆயினும், இந்த நூலை பெருமளவுக்கு அறிவியல் பூர்வமாகவும், ஆதாரங்களின் அடிப்படையிலும், தெளிவான் வரலாற்று உணர்வுடனும் எழுதியிருக்கிறார். இது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம். வேறு துறைகளில் பணிபுரிந்தாலும் வரலாறு, பண்பாட்டு ஆய்வுகள் ஆகிய துறைகளில் ஆர்வமுடையவர்கள் தங்கள் இடையறாத உழைப்பு மூலம் பல விஷயங்களைக் கற்றறிந்து செறிவான பங்களிப்புகளை நல்க முடியும் என்பதற்கு ஒரு முன்னுதாரணமாகவே அவர் திகழ்கிறார் என்று சொல்வேன்.

srirangam-krishnamacharyar-speaking-at-the-function1

ஸ்ரீ கிருஷ்ணமாசாரியர் 18-3-2011 அன்று வெளியீட்டு விழாவில் உரையாற்றுகிறார். அமர்ந்திருப்பவர்கள் (இடமிருந்து வலமாக) டாக்டர் கல்யாணராமன் – சரஸ்வதி நதி ஆய்வு மையம், ஜி.பி.ஸ்ரீனிவாசன், பெரியநம்பி சுந்தரராஜாசாரியார் சுவாமி. மேலும், பழங்காசு ப.ஸ்ரீனிவாசன் (நாணயவியல் ஆய்வாளர்), இரும்பாநாடு பத்மநாபன் (வைணவ அறிஞர்), அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு ஆகியோரும் உரையாற்றினர்.

இது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் விஷயம். அதே நேரம் மிகவும் வருத்தமளிக்கும் விஷயமும் கூட. ஏனென்றால், இத்தகையதொரு பணியை உண்மையில் செய்ய வேண்டியவை நமது கல்வி அமைப்புகள், கலாசார அமைப்புகள். என்ன செய்துகொண்டிருக்கின்றன அவை? வரலாறும் கலையும் இலக்கியமும் பண்பாடும் கொட்டிக் கிடக்கும் ஒரு பொக்கிஷம் இந்தக் கோயில். இதே போன்று சிதம்பரம், மதுரை, காஞ்சி என்று பல கோயில்கள் தமிழகமெங்கும் உள்ளன. இவற்றை முறையாக ஆய்வு செய்து, ஆவணப் படுத்தி, மக்களைக் கவரும் வகையில் கோயில் சிறப்புகளை எடுத்துச் செல்வது தமிழ்நாட்டு அரசின், அதன் பல்கலைக் கழகங்களின், நிறுவனங்களின் கடமையாகும். இது போன்றதொரு கலைச் செல்வம் மேலை நாடுகளில் இருக்குமேயானால் கோயில் இயல் என்றொரு துறையே அங்கு உருவாகி, பல பல்கலைக் கழகங்களில் இதில் நிஜ ஆர்வமுடைய கணிசமான அளவு மாணவர்கள் பயிலும் நிலை இருக்கும். அப்படி இல்லாவிட்டாலும் கூட, இங்கே இருக்கும் கலைக் கல்வித் துறைகளாவது (humanities departments) இப்பணிகளைச் செய்யலாம். ஆனால் இத்திறக்கில் ஒன்றுமே நடப்பதாகத் தெரிவதில்லை.

இந்தப் புத்தகத்தை இது போன்ற பிற கோயில் வரலாற்று நூல்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதும் தவிர்க்கவியலாதது. குடவாயில் பாலசுப்பிரமணியம் எழுதியிருக்கும் ராஜராஜேஸ்வரம், அ.கா. பெருமாளின் சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் வரலாறு ஆகிய நூல்கள் உடனடியாக நினைவு வருகின்றன. கோயிலொழுகும் அவைகளைப் போன்றே முழுமையான தரவுகளின் அடிப்படையில் எழுதப் பட்டுள்ளது. ஆனால் அந்த நூல்களின் நடை, மொழி, கூறுமுறை ஆகியவை இன்றைய நவீனத் தமிழ் வாசகனுக்கு நெருக்கமாகவும், நேரடியாகப் பேசும் வகையிலும் உள்ளன. ஒப்பீட்டில் கோயிலொழுகில் வைஷ்ணவ பரிபாஷை மிக அதிகமாக உள்ளது. நிறைய இடங்களில் எளிய தமிழ் விளக்கங்கள் உள்ளன என்றாலும், மணிப்பிரவாள நடை ஓரளவு பரிச்சயம் இல்லாமல் இந்தப் புத்தகத்துள் நுழைவது கடினம் என்றே நினைக்கிறேன்.

வரலாறு எப்போதுமே கடந்த காலத்தின் பிரதிநிதி மட்டும் அல்ல. அதில் நிகழ்காலத்திற்கான பாடங்களும்,எதிரொலிகளும் கூட இருக்கக் கூடும். அதனால் தான் வரலாற்றைப் பயில்வது முக்கியமாகிறது.

ஒரு காட்சி. மறவர் குலத்தவரான பிள்ளையுறங்காவில்லி தாசரை முன்னிறுத்தி ”சாத்தாத முதலிகள்” விஷயமாக முதலியாண்டான் ஸ்ரீராமானுஜரிடம் கேட்கிறார். பூணூல் சாத்தாத, அதாவது பிராமணரல்லாத வைணவர்களை சாத்தாத முதலிகள் என்று கூறுவது வைஷ்ணவ பரிபாஷை மரபு. ”நமக்கும் நம் முதலிகளுக்கும் உள்ள தன்னேற்றத்தை அருளிச் செய்ய வேணும்” என்று கேட்கிறார் முதலியாண்டான். தன்னேற்றம் என்றால் மேன்மை, சிறப்பு என்று பொருள் கொள்ளலாம். இதற்குப் பதிலாக ஸ்ரீராமானுஜர் பத்து வார்தைகள் அருளிச் செய்கிறார் (வார்த்தை என்றால் கருத்து). இவை வார்த்தாமாலை என்ற நூலில் தொகுக்கப் பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு உதாரணங்கள் கொடுக்கிறார் –

அணுவுக்கும் மஹாமேருவுக்குமுள்ள தன்னேற்றம். எங்ஙனேயெனில், நாம் ஸம்பந்தமும் குடிகோத்ரமும் ஸூத்ரமுமாகப் பண்ணுவுதோம்.அவர்கள் ஸம்பந்த ஞானானுஷ்டமே (அதாவது தொண்டக் குலத்துக்குரிய ஜீவ பர சம்பந்தம் பற்றிய ஞானமும், அதன் அனுஷ்டானமும்) குடிகோத்ர ஸூத்ரமென்றிருப்பார்கள்.

கரும்புக்கும் கண்டுக்குமுள்ள (கல்கண்டு) தன்னேற்றம். எங்ஙனேயெனில், நாம் வேதமாகிற கரும்பைக் கடித்துப் பல்லு முறிவுதோம். அவர்கள் ஸாரத்வயமாகிற கண்டைக் கடித்து இன்புறுவர்கள்.

பதிவ்ரதைக்கும் பரநாரிக்குமுள்ள தன்னேற்றம். எங்ஙனமேயென்னில், நாம் ஆக்நேயாதிகளுக்கும் (அக்னி முதலான தேவதைகளுக்கும்) சேஷமாயிருப்புதோம். அவர்கள் அவனுக்கே சேஷமென்று அவனையொழிந்தவர்களுக்கு சேஷமன்றென்று அறுதியிட்டிருப்பார்கள்.

இது இருவர்களுக்குமுள்ள தன்னேற்றம்.

– கோயிலொழுகு, பாகம் 7 – பகுதி 1, பக்கம் 10-17.

இங்கு பிராமணர் – பிராமணரல்லாதார் பற்றிய ஒரு 11ம் நூற்றாண்டு உரையாடல் பதிவு செய்யப் பட்டுள்ளதைக் காண்கிறோம். நவீனகாலத்திற்கு முந்தைய மன்னராட்சிக் கால சமூகம் அது. சாதி வேறுபாடுகளை சட்டமாகக் கடைப்பிடித்தமாக சமூகச் சூழல்.அப்போது அக்காலகட்டத்தின் இரு மாபெரும் சமயத் தலைவர்கள், குருவும் சீடனாக உரையாடுகையில், எத்தகைய மனப்பாங்கு, எத்தகைய மொழி புழங்கிற்று என்பதற்கு ஒரு உதாரணம் இது. இருபதாம் நூற்றாண்டில் தமிழக அரசியலை ஆக்கிரமித்த ஒரு பிற்போக்கு இயக்கத்தினர் பிராமணர் – பிராமணரல்லாதார் பிரசினையை முன்வைத்து செய்த கடும் வெறுப்புணர்வு பிரசாரங்களையும், இனவாத திரிபுவாதங்களையும் இதனுடன் வரலாற்று ரீதியாக நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

srirangam-paramapada-vasalஇதே போன்று, பிள்ளைலோகாச்சாரியரின் சீடர் விளாஞ்சோலைப் பிள்ளை என்பவர் இருந்திருக்கிறார். இவர் புலையர் சமூகத்தைச் சேர்ந்தவர். தனது உற்ற சீடரான திருவாய்மொழிப் பிள்ளைக்கு உபதேசம் செய்யுமாறு விளாஞ்சோலைப் பிள்ளையை லோகாசாரியர் பணிக்க, அவரும் குருவின் ஆணையை சிரமேற்கொண்டு நிறைவேற்றினார். விளாஞ்சோலைப் பிள்ளை பரமபதம் அடைந்ததும் அவரது ஈமக் கிரியைகளை அந்தணரான திருவாய்மொழிப் பிள்ளையே செய்தார். அதற்கும் முன்பு மாறநேரி நம்பிகள் என்ற பரம வைஷ்ணர் மறைந்த போதும் இதே போன்று பெரிய நம்பிகள் இறுதிக் கடன்கள் செய்திருக்கிறார். மாறனேரி நம்பிகளும் பிறப்பால் புலையர் சமூகத்தைச் சார்ந்தவரே.

பிற்காலத்தில், 17ம் நூற்றாண்டில் வந்த பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் என்ற பெரும் கவிஞர் அஷ்டப் பிரபந்தம் என்று புகழ்பெற்ற எட்டு நூல்களை எழுதியிருக்கிறார். இதில் திருவரங்கக் கலம்பகம் என்ற நூலில், மறவர்குலப் பெண் திருவரங்கநாதன் மீது காதல் கொண்டதை அழகாக விவரித்துப் பாடியிருக்கிறார். அவளைப் பெண்கேட்டு அரச குலத்தினர் ஓலைகொடுத்து தூதர்களை அனுப்ப, அவர்களை நோக்கி அந்த சமூகத் தலைவன் இப்படிக் கூறுகிறான் –

பேசவந்த தூத! செல்லரித்த ஓலை செல்லுமோ?
பெருவரங்கள் அருளரங்கர் பின்னைகேள்வர் தாளிலே
பாசம் வைத்த மறவர் பெண்ணை நேசம் வைத்து முன்னமே
பட்டமன்னர் பட்டதெங்கள் பதிபுகுந்து பாரடா!

ஆய்ச்சியர் குலத்து கோபிகைகளும், அப்படியே தன்னைக் கருதிக் கொண்ட ஆண்டாளும் மட்டுமல்ல, மறவர் குல மாதரசியும் அரங்கன் மீது அன்பு பூண்டவள். அதை முகாந்திரமாகக் கொண்டு அரசர்களது தூதர்களையே மிரட்டும் துணிவும் வீரமும் உடையோராக மறவர்கள் இருந்திருக்கிறார்கள் என்று இந்தப் பாடல் மூலம் தெரியவருகிறது.

நேற்று ஆந்திராவில் இருந்து தரிசனத்திற்கு வந்திருந்த பெரிய கூட்டம் ஒன்றைப் பார்த்தேன். சிவப்புத் தலைப்பாகை கட்டி முறுக்குமீசை வைத்த ஆண்கள். வண்ணச் சேலைகளும் விதவிதமான ஆபரணங்களும் அணிந்த பெண்கள். பயணத்தால் அலுத்து தூசிபடிந்த கரிய திருமேனிகள். செஞ்சுக்கள் என்று சொல்லப் படும் ஆந்திர வனவாசி சமூகத்தினர் இவர்கள் என்று பார்த்தாலே தெரிந்தது. அகோபிலம், ஸ்ரீசைலம் பகுதிகளின் வனப்பிரதேசங்களில் வசிப்பவர்கள். அங்கிருந்து அரங்கனை சேவிக்க வந்திருக்கிறார்கள்!

எனவே, ராமானுஜரின் வார்த்தைகள் அங்கேயே முடிந்து விட்ட உரையாடல் அல்ல. அதனைத் தொடர்ந்து பல்வேறு சாதி சமூகங்களையும் அரவணைக்கும் ஒரு சமூக இயக்கமாகவே அது பரிணமித்தது என்பதை நாம் அறிய முடிகிறது. சாத்தாத வைஷ்ணவர்களின் பெரும் சமூகத் தலைவராக பின்னாளில் கந்தாடை ராமானுச முனி என்பவர் இருந்திருக்கிறார். கோயிலைச் சுற்றியுள்ள வீதியொன்றில் அவர் பெயரில் சாத்தாத வைஷ்ணவர்களுக்கான மடம் இன்றும் இருக்கின்றது. அதில் உள்ளே ஸ்ரீநிவாசப் பெருமாள் சன்னிதியும், பிள்ளையுறங்கா வில்லிதாசர், அவரது மனைவி பொன்னாய்ச்சியார் ஆகியோரது சித்திரத் திருவுருவங்களும் உள்ளன.

srirangam-saathaada-vaishnava-sabha

மற்ற அனைத்து மடங்களைப் போல இங்கும் பரம்பரையாக வரும் ஆச்சாரியர்கள் இருப்பார்களே என்று கேட்டேன். இல்லை என்பதே பதிலாகக் கிடைத்தது. கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக இந்த மடத்திற்குத் தலைவர் இல்லையாம். அந்தப் பாரம்பரிய இழை அறுபட்டு விட்டிருக்கிறது, அதுவும் மிக சமீப காலத்தில். சமூக ரீதியாக மிக முக்கியமானதொரு காலகட்டத்தில்.

(ஆனால் இது ஒரு பெரும் இழப்பு என்ற உணர்வு கூட நான் பேசிய சில வைஷ்ணவப் பெரியவர்களுக்கு சிறிதும் இல்லை என்பதை எனது உரையினூடாக வருத்தத்துடன் குறிப்பிட்டேன். நிகழ்ச்சிக்கு வந்திருந்த சில பெரியவர்கள் இதனை ஆமோதித்தனர். வில்லிதாசர், விளாஞ்சோலைப் பிள்ளை முதலான பெரியோர்களின் நினைவைப் போற்றும் வகையில் சிறு கோயில்கள் அமைக்க வேண்டும்.சாத்தாத வைணவர்களின் குரு பரம்பரையைத் தொடரச் செய்ய வேண்டும். இது உடனடியாகச் செய்யவேண்டிய பணி என்று வந்திருந்தவர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.)

கோயிலொழுகு நூலில் இது போன்று பற்பல அருமையான சம்பவங்களும், குறிப்புகளும் உள்ளன. இவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து குழந்தைகளுக்கும், இளைய தலைமுறையினருக்கும் சென்று சேரும் வண்ணம் காமிக்ஸ் கதைப் புத்தகங்களாகவும், நேர்த்தியான ஆவணப் படங்களாகவும் உருவாக்க வேண்டும்.

வெள்ளையம்மாளின், பஞ்சுகொண்டானின் தியாகத்தின் சின்னங்களாக ஒரு பெரும் கோபுரமும், நுழைவாயிலும் இங்கு நின்று கொண்டிருக்கின்றன. ஆனால்தரிசனம் செய்ய வருபவர்களில் 90 சதவீதத்தினருக்கு இந்த வரலாற்றுச் செய்தி தெரிவதில்லை. அவர்களுக்கு இத்தகவல் சென்று சேர வழியும் இல்லை. இந்தக் கோயிலைக் காப்பாற்றி நமக்களிக்க எப்பேர்ப்பட்ட மகத்தான தியாகங்கள் செய்யப் பட்டிருக்கின்றன என்ற தகவல் தெரிந்தால், ஒருவேளை பக்தர்களின் சுயநல பிரார்த்தனைகளின் பேரிரைச்சல்களில் எங்கோ ஒரு மூலையிலாவது அது கசிந்து கொண்டிருக்கும். இன்றும் திண்டுக்கல்லிலும், தென்காசியிலும், கன்யாகுமரியிலும் கோயில்களை அழிவிலிருந்து பாதுகாக்க ஏழை எளிய மக்கள் செய்யும் தியாகங்களை நினைவில் கொள்ளவும், மதிக்கவும் அது ஒரு உந்துதல் அளிக்கக் கூடும்.

ஒவ்வொரு கோயிலுக்கு அருகிலும் அதன் பல நூற்றாண்டு கால வரலாற்றைக் காட்சிப் படுத்தும் வகையில் அருங்காட்சியகங்கள் அமைய வேண்டும். கோயிலுக்கு உள்ளேயும் இந்த வரலாற்றுச் செய்திகளை அங்கங்கு மக்களுக்கு நினைவுபடுத்தும் வகையில் பலகைகள் வைக்கப் படவேண்டும். அப்போது தான் கோயிலைப் பற்றிய ஒரு கலாசார,பண்பாட்டு,வரலாற்று உணர்வும் மக்கள் மனதில் உண்டாகும். வழிபாட்டுணர்வுடன் கூட, அத்தகைய உணர்வும் இணைந்தால் தான் கோயில்களின் மீது மக்களுக்கு பிரக்ஞை பூர்வமான பற்றும் பிடிப்பும் உண்டாகும். இன்றைய சூழலில் அது தமிழகத்திற்கு மிக அவசியமாகத் தேவைப் படுகிறது. திருவரங்கம் கோயில் விஷயத்தில் அத்தகையதொரு உணர்வினை உண்டாக்குவதில் கோயிலொழுகு நூலின் பங்களிப்பு மகத்தானது என்பதில் சிறிதும் ஐயமில்லை.