நூல்: செங்கொடியின் பாதையில் நீண்ட பயணம்
ஆசிரியர்: கோ.வீரய்யன்,
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு மாநிலக் குழு சென்னை-45. பக்.256, ரூ.125.

வரலாறு என்பதே முன்னேற்றத்திற்கான போராட்டம்தான் என்று சொல்வார்கள். இதை வெளிப்படுத்தும் விதமாக வந்துள்ள நூல்தான், “செங்கொடியின் பாதையில் நீண்ட பயணம் என்ற தோழர் கோ.வீரய்யன் அவர்களின் சுயசரிதை. சித்தாடி எனும் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்து குடும்பத்தின் வறுமையும், கிராமத்தின் சூழலும் சேர்ந்து பள்ளி சென்று படிப்பதற்கான வாய்ப்பு வீரய்யனுக்கு கிடைக்கவில்லை, மாடுமேய்க்கும் வேலைக்கு இடையூறில்லாமல் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இரவு நேரத்தில் சில மாதங்கள் படித்ததுதான் எழுத்தையும் – எண் கணிதத்தையும் அறிய கிடைத்த அரிய வாய்ப்பு. தன் சுய முயற்சியில் புத்தகங்களை படிக்கும் ஆற்றலை வளர்த்துக் கொண்டுபிறகு பல புத்தகங்களுக்கு அவர் ஆசிரியர் என்பது எத்துணை பெருமைமிகு முன்னேற்றம் என்பதை நூலைப்படிக்கும் ஒவ்வொருவரும் உணர முடியும்.

நூலுக்கு, ‘நீண்ட பயணம்” என்று மிகப்பொருத்தமாகவே பெயரிடப்பட்டிருக்கிறது. செஞ் சீனத்தின் மாபெரும் தலைவர் மா சே துங்கின் நீண்ட பயணம், நிலப்பிரபுக்களிடமிருந்து கிராமப்புற ஏழைகளை விடுவித்து சீனத்தில் புதிய ஜனநாயகப் புரட்சி ஏற்பட வழிவகுத்தது. தோழர் ஜீ.வியின் இந்த நீண்ட பயணம் நிலப்பிரபுத்துவ கோட்டையாக விளங்கிய தஞ்சை மாவட் டத்தில் நிலப்பிரபுக்களை தளர்ச்சியடையவும் – கிராமப்புற ஏழைகளை எழுச்சி கொள்ளவும் செய்தது. அந்த வேதியியல் மாற்றத்தை அறிய அனைவரும் வாங்கிப் படியுங்கள் – மற்றவர்களையும் படிக்கச் செய்யுங்கள்.