நூல் விமர்சனம்: பரத்தை கூற்று – CSK

காட்டுப் பூக்களால் தொடுத்த மாலையை கழுத்தில் போட்டுக்கொண்டு வாலியுடன் துவந்த யுத்தத்தில் இருக்கிறான் சுக்ரீவன். வாலியின் அடி ஒவ்வொன்றும் பாறையென சுக்ரீவன் மேல் விழுந்து கொண்டிருக்கிறது. எங்கிருந்தோ வந்த கூறிய அம்பு வாலியின் தேகத்தைத் துளைத்து இதயத்தைத் தொட்டுக் கொண்டு நிற்கிறது. அம்பினை எடுத்துப் பார்த்து ராமபாணம் என்று தெரிந்துகொள்கிறான்.

“மறைவில் இருந்து தாக்குகிறாயே சூரியகுலத்தில் உதித்த உனக்கு இது தகுமா? உன்னுடைய குலத்திற்கே களங்கம் ஏற்படுத்திவிட்டாயே? என்று ராமனைப் பார்த்துப் பொருமுகிறான்.

“நீ மட்டும் சுக்ரீவனை துரத்திவிட்டு அவனுடைய மனைவியை அனைத்துக் கொண்டாயே அதுமட்டும் ஞாயமா?” என்று ராமன் கேட்கிறான்.

“ஒரு தார கற்பொழுக்கம் எல்லாம் மனித குலத்திற்குத் தான். வானரர்களுக்கு இல்லை. அதற்காகவா என்னைக் கொன்றாய்…” என்று வாலி கேட்கிறான். (அதன் பிறகு ராமனுக்கும், வாலிக்கும் நடக்கும் உரையாடல் சுவாரஸ்யம் வாய்ந்தது. வாய்ப்பு கிடைக்கும் பொழுது அதைப்பற்றி பேசலாம்…)

“குரங்கிலிருந்து மனிதன் பரிமாண வளர்ச்சி கண்டான்…” என்பது குட்டலினி கபாலத்தைத் தொட்ட விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்ட விஷயம். மனிதர்கள், யாரும் யாருடனும் வெளிப்படையாகப் புணரலாம் என்பது கலாச்சார ரீதியாக முகம் சுளிக்கக் கூடிய விஷயம். ஏனெனில் நாகரீகத்தின் நிழலைப் பின் தொடர்ந்து நாம் வெகுதூரத்திற்கு வந்துவிட்டோம். அதில் கூட ஆண்களுக்கு ஒரு விதமாகவும், பெண்களுக்கு ஒரு விதமாகவும், திருநங்கைகளுக்கு ஒரு விதமாகவும் நம் சமூக அமைப்பு செயல்படுவது வேதனைக்குரிய உண்மை.

பெண் விபச்சாரிகளைக் கணக்கெடுத்துப் பார்க்கையில் ஆண் விபச்சாரிகளோ, திருநங்கைகளோ மிகவும் குறைவு. அதிலும் பெண் விபச்சாரிகளில் பலரும் நிர்பந்தத்தினால் தான் பாலியல் தொழிலுக்கு வருகிறார்கள். அவர்களின் மனச் சோர்வும், மன உளைச்சலும் வார்த்தைகளால் விளக்க முடியாத ஒன்று.

என்னுடைய கல்லூரி வாழ்க்கையின் இறுதியாண்டில் இருக்கிறேன். சொற்சித்தர் வலம்புரி ஜான் அவர்கள் ஆண்டுவிழாவில் பேச இருக்கிறார். ஆர்வமுடன் மாணவர் கூட்டத்தில் நின்று கொண்டிருந்தேன். வந்தவர் பேசினார். அது பேச்சல்ல… மாயவெளி… ஆம்… அவரின் பேச்சு என்னை எங்கெங்கோ அழைத்துச் சென்றது. அதில் ‘வேசியின் கல்லறையும்’ அடக்கம்.

வேசியின் சமாதியைப் படிமமாக வைத்து கவிதை எழுதுமாறு கேட்டிருந்தார்கலாம். அதற்கு ஒரு கவிஞன் கீழ்கண்டவாறு எழுதியிருந்தானாம். எழுதியவன் கல்லூரி மாணவன் என்பதால் அவரைப் பற்றி புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார். அந்த வரிகள்…

‘இன்றுதான் இவள் –
நிம்மதியாகத் தூங்குகிறாள்.
இனிமேலும் இப்படித்தான்…’
வேசியின் கல்லறை

மேலுள்ள நான்கு வரிகள் வேசிகளின் விழிப்பு நிலை வேதனைகளை, காமத்தின் பற்கள் கொஞ்சம் கொஞ்சமாக கொறித்துத் தின்பதை உணர்த்துவதற்குப் போதுமானதாக இருக்கிறது. ஓய்வின் குளிர்ச்சியை, உறக்கத்தின் வாசனையை, தனிமையின் அழகை, வாழ்வின் நிம்மதியை பரத்தையின் சமாதி மட்டுமே அவளுக்குக் கொடுக்கிறது.

இந்தக் கவிதையை நான் கேட்டுக் கொண்டிருந்த வயதில் நண்பர் CSK வேசிகளின் உணர்வுகளைப் பற்றி சிந்தித்துக் கொண்டு இருந்திருக்கிறார். பரத்தையின் கூற்றாக 500 கவிதைகளை அப்பொழுதே எழுதியிருக்கிறார்.