மதுரை, செப்.3- தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் ஆண்டு தோறும் மதுரையில் நடைபெறும் புத்தகத் திருவிழா நேற்று  மாலை  மதுரையில் உள்ள தமுக்கம் மைதானத்தில் துவங்கியது.

தொடக்க விழா நிகழ்ச்சியில் டாக்டர் பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டி தலைமை தாங்கினார். மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் காட்சி அரங்கத்தினை திறந்து வைத்தார். பேராசிரியர் தமிழண்ணல் வாழ்த்துரை வழங்கினார்.

இந்த 6 வது மதுரை புத்தகத்திருவிழா சுமார் 50ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. புத்தகத்திருவிழாவில் 196 அரங்குகள் அமைக்கப்பட்டு அவற்றில் இந்தியாவின் மிகச்சிறந்த ஆங்கிலம், தமிழ் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும், பிறமொழிப்பதிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

லட்சக்கணக்கான தலைப்புகளில் ஏராளமான நூல்கள் குவிந்துள்ளன. புத்தகத்திருவிழா தினமும் காலை 11மணி முதல் இரவு 9மணி வரை நடைபெறும் இதற்கு அனுமதி இலவசம். இங்கு வாங்கும் புத்தகங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படவுள்ளது.

இந்த திருவிழாவையொட்டி கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி ஆகியவை நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை  தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் சேது சொக்கலிங்கம், செயலாளர் இராம.லெட்சுமணன், மதுரைக்கல்லூரி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் செந்தூரன்,  கவிஞர் தேவேந்திர பூபதி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். தொட்ந்து 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் மாலை கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.