சென்னை: தனது தரப்பு வாதங்கள், நியாயங்களை விளக்கியும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மறைக்கப்பட்ட உண்மைகளையும் விளக்கி பேரறிவாளன் எழுதிய கடிதங்கள் உள்ளிட்டவற்றின் தொகுப்பு அடங்கிய நூலின் இந்தி மொழியாக்கம் சென்னையில் வெளியிடப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் நூலை வெளியிட்டார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சிபிஐ தேசியச் செயலாளர் டி.ராஜா, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நூலின் முதல் பிரதியை தெற்காசியாவில் மரண தண்டனை ஒழிப்பு இயக்கத்திற்கான கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஜக்மோகன் சிங் பெற்றுக் கொண்டார்.

இந்த நூலில் ராஜீவ் கொலைச் சம்பவங்கள் குறித்த தொகுப்பு, உண்மைகள், அந்த வழக்கு கையாளப்பட்ட விதம், பேரறிவாளனின் கடிதங்கள், நீதி கோரும் விண்ணப்பம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

நிகழ்ச்சியில் பரதன் பேசுகையில், நான் நீண்ட காலம் பொது வாழ்விலும், அரசியலிலும் இருந்துள்ளேன். எதற்குமே நான் கலங்கியதில்லை. ஆனால் இந்த நூலைப் படித்ததும் நான் அழுது விட்டேன்.என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை.

தான் பட்ட சித்திரவதைகள், கொடுமைகள், கட்டாயமாக தன்னிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தை பேரறிவாளன் விளக்கியிருப்பது யாரையும் கண் கலங்க வைக்கும். நமது நாட்டில் நிலவும் போலீஸ் சித்திரவதையை, அமெரிக்காவின் குவான்டனாமோ சிறை சித்திரவைதகளுக்கு ஒப்பிடலாம்.

மரண தண்டனையை ஒழிக்க ஒரே வழி, பேரறிவாளனின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக்குமாறு மத்திய அரசுக்கு தீவிர கோரிக்கை வைப்பதுதான் ஒரே வழி. பேரறிவாளனிடமிருந்து இது தொடங்க வேண்டும். இது நமது கடமை. நமது மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் இதை செய்ய வேண்டும் என்றார்.

பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் பேசுகையில், எனது மகனுக்கு நீதி வழங்குங்கள் என்றார்.அவர் பேசும்போது பலமுறை அழுதார். தனது மகன் எழுதிய கடிதங்களை கூட்டத்தில் அவர் உணர்ச்சி பொங்க படித்துக் காட்டினார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், போலீஸாரும்,சிபிஐயும், எனது மகனுக்கு எதிராக ஜோடித்த வழக்கு இது. எனது மகனை சித்திரவதை செய்து வாக்குமூலம் வாங்கி தண்டித்து விட்டனர். எல்லா வழக்குகளிலும் பணக்காரர்கள், வசதி படைத்தவர்கள் எப்படியோ தப்பி விடுகிறார்கள். ஆனால் எங்களைப் போன்ற பாவப்பட்டவர்கள், வசதி இல்லாதவர்கள், ஏழைகள்தான் தண்டனைக்குள்ளாகிறார்கள்.

19 வயதாக இருக்கும்போது எனது மகன் சிறைக்குப் போனான். கடைசியாக நான் அவனை சந்தித்தபோது, இந்த உலகத்தை காண ஆசைப்படுகிறேன் என்று கூறினான். எனது கைகளைப் பிடித்துக் கொண்டு எனக்காக போராடி வரும் அத்தனை பேருக்கும் நன்றி கூறுவதாக தெரிவித்தான். எனது மகனையும், மற்ற இருவரையும் காக்குமாறு அனைவரையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் என்ரார்.

ஜக்மோகன் சிங் பேசுகையில், மரண தண்டனையை நிரந்தரமாக ஒழிக்கும் நேரம் வந்து விட்டது. ஆனால் இந்தியாவில் மரண தண்டனை தொடர்பாக நீதித்துறையும், இந்திய அரசும் இரட்டை நிலையை கடைப்பிடித்து வருவது வேதனைக்குரியது என்றார்.