பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவுச் சிறப்புக் கட்டுரை தாய்க்குப் பெயர் சூட்டிய தனயன்

க. திருநாவுக்கரசு, திராவிட இயக்க ஆய்வாளர்
திராவிட இயக்கத்திற்கு இயற்கையே எதிரியாக இருந்து மூன்று அரசியல் பின்னடைவுகளை ஏற்படுத்திவிட்டது. ஆம். இயற்கை தமிழர்களின் அரசியல் வாழ்வுரிமையை, விடுதலை உணர்வை – இராஜரிகத்தைத் தட்டிப்பறித்துவிட்டது. அது தமிழினத்திற்கு ஏற்பட்டுவிட்ட மாபெரும் தீமை என்றே நாம் கருதுகின்றோம்.

(1) இலண்டனில் 1919ஆம் ஆண்டு டாக்டர் டி.எம். நாயருக்கு ஏற்பட்டுவிட்ட அகால மரணம்.

(2) 1940ஆம் ஆண்டு சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் சென்ற விமானம் விபத்திற்கு உள்ளாகி ஏற்பட்ட அவரது மரணம்.

(3) 1969ஆம் ஆண்டு நிகழ்ந்த அறிஞர் அண்ணாவின் மரணம்.

இம்மூன்று மரணங்கள் தமிழர்களின் அரசியல் வாழ்வுரிமைக்கு, விடுதலை உணர்வுக்கு ஏற்பட்ட மாபெரும் அரசியல் பின்னடைவுகள் ஆகும்.

அறிஞர் அண்ணாவுக்கு நூற்றாண்டு தொடங்கிவிட்ட இந்த நேரத்தில் திராவிட இயக்கத்திற்கு ஏற்பட்டுவிட்ட அரசியல் பின்னடைவை எண்ணிப் பார்ப்பதில் தவறேதும் இல்லை. ஆகவே ஏற்பட்டுவிட்ட அத்துன்ப நிகழ்வுகளிலிருந்து – அம்மூவரில் ஒருவரான அண்ணாவைப் பற்றிய எண்ணங்களை அவரது நூற்றாண்டு விழாத் தொடக்கத்தின்போது இக்கட்டுரையின் மூலம் சில நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம்.

பெரியார் நீண்டகாலம் வாழ்ந்தாரே அப்படி இருக்கும்போது “அந்த மூன்று மரணங்கள்” மட்டும் திராவிட இயக்கத்திற்குப் பின்னடைவு ஆகுமா? என்று இக்கட்டுரையைப் படிக்கின்றவர்களுக்குத் தோன்றலாம். மூவரில் முதலாமவர் பெரியார் பொதுவாழ்க்கைக்கு – காங்கிரசுக்கு வந்த காலகட்டத்தில் மரணத்தைத் தழுவிக்கொண்டவர். மீதமுள்ள இருவர் பெரியார் பொதுவாழ்வில் ஒளிர்ந்த நாள்களில் இருந்து மறைந்தவர்கள். எப்படியாயினும் பெரியார் சட்டமன்றத்திற்கு வெளியே இருந்து மக்கள் மன்றத்திலே பணியாற்றியவர். சட்டமன்றத்திற்குச் செல்ல விரும்பாதவர். தம் கொள்கைகளை நிறைவேற்றுபவர்களைச் சட்டமன்றத்திற்கு வெளியே இருந்து ஆதரிப்பவர். ஆகையினாலே இதில் பெரியாரை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியவில்லை. அரசியல் நிலையில் ‘உள்ளே’ சென்று சிலவற்றைச் செய்ய வேண்டிய கடமையை, திராவிட இயக்கத்துக்காரர்களே’ செய்ய வேண்டும். அந்த நிலையை – செயல்பாட்டை இந்த மூவரின் மரணங்கள் தடுத்து நிறுத்திவிட்டன; பின்னடைவை ஏற்படுத்திவிட்டன என்றே நாம் சொல்ல வருகின்றோம்.

தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணா அவர்களைப் பற்றிப் புகழ்பாடாத அரசியல் இயக்கங்களோ தனிமனிதர்களோ இருக்கமாட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். ஆனால் அவர் உயிர் வாழ்ந்த காலத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அவர் ஏற்றுக்கொண்ட கொள்கைகளும் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாயின.

அறிஞர் அண்ணா காங்கிரசில் இருந்ததில்லை. அவர் தம்மை நீதிக்கட்சிக்காரராகவும் சுயமரியாதை இயக்க வீரராகவும் வெளிப்படுத்திக் கொண்டார். அவர்க்கென்று பெரிய குலப்பெருமை எதுவுமில்லை. தம்மை நெசவாளர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொள்வதில் அவர் பெருமையும் பெருமிதமும் அடைந்தார். அதனால்தான் போலும் திருப்பூரில் 1934இல் நடைபெற்ற செங்குந்தர் 2ஆவது வாலிபர் மாநாட்டில்தான் அவர் பொதுவாழ்க்கைக்கு அறிமுகமானார். அங்கேதான் அவர் பெரியார் அவர்களை முதன்முதலில் சந்தித்தார்.

ஆங்கிலத்திலும், தமிழிலும் மாபெரும் பேச்சாளராகத் திகழ்ந்த அறிஞர் அண்ணா அவர்கள் திருப்பூர்ச் செங்குந்தர் வாலிபர் மாநாட்டில் தமது பேச்சை எழுதிவைத்துப் படித்தார். அறிஞர் அண்ணாவின் பொது வாழ்க்கை -அரசியல் வாழ்க்கை 1934இல் தொடங்கி 1969இன் தொடக்கத்திலேயே முடிந்துவிட்டது. சுமார் 35 ஆண்டுகாலப் பொதுவாழ்க்கையில் அறிஞர் அண்ணா தமிழகத்து அரசியலை மாற்றிக்காட்டினார். ‘போரில் பெரிது புரட்சி’ என்பர். அத்தகைய புரட்சியைத் தமது நாவன்மையாலும் எழுத்துத் திறமையாலும் ஜனநாயகத்தின் மூலம் செய்துகாட்டியவர் அறிஞர் அண்ணா!

நீதிக்கட்சியின் கடைசிக் காலகட்டத்தில்தான் அறிஞர் அண்ணா அக்கட்சியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். பெரியார் கட்சியின் தலைவர்; அறிஞர் அண்ணா நீதிக்கட்சியின் பொதுச் செயலாளர். எப்போது? கட்சி 1937 தேர்தலில் தோற்ற பிறகு! இக்கட்சி தோற்கும் என்று தெரிந்து அதன் தலைவர்களுள் பலர் காணாமல் போயிருந்தனர். ஒரு சிலர் காங்கிரசு கட்சிக்கு மாறியிருந்தனர். இன்னும் சிலர் காங்கிரசுடன் இரகசிய உறவு வைத்துக்கொண்டிருந்தனர். ஒரு சிலர் அரசியல் துறவறம் பூண்டனர்.

பெரியாரும் அறிஞர் அண்ணாவும் தோற்றக் கட்சியைத் தூக்கிப் பிடிப்பானேன்?

நீதிக்கட்சி பார்ப்பனர் அல்லாதாரின் அரசியல் உரிமையை நிலைநாட்டுவதற்காக உருவாக்கப்பட்ட கட்சி. அதன் முழக்கப்படி 17 ஆண்டுகளில் அரசியல் பார்ப்பனர்களை நீதிக்கட்சி அப்புறப்படுத்தித்தான் இருந்தது.

அதுவே பார்ப்பனர் அல்லாதாரின் முழுவெற்றி என்று சொல்லிவிட முடியாது. பார்ப்பனர் அல்லாதாருக்காக நீதிக்கட்சி அதன் ஆட்சியின்போது பல சாதனைகளை நிகழ்த்திக்காட்டியிருந்தது. இது பார்ப்பனர் அல்லாதாரின் அரசியல் பயணத்தின் தொடக்கமாக இருந்தது.

சில வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுவது போல நீதிக்கட்சி எதற்காகத் தோன்றியதோ – அந்தப் பணி முடிந்துவிட்டது. ஆகவே நீதிக் கட்சி தோற்றுப் போனது என்பது அதன் வரலாற்றுப் பணி முடிந்துவிட்டது என்பதையே காட்டுகிறது என்று கூறுவர். அதனை ஒப்புக்கொள்ளுவதற்கு இல்லை.

நீதிக்கட்சி அதன் தொடக்கம் முதலே பார்ப்பனர் அல்லாதார் கட்சி என்றே பதிவாகி இருந்தது. நீதிக்கட்சி தேர்தலில் தோற்றிருந்த காலகட்டத்தில் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தோன்றி 12 ஆண்டுகள் ஆகியிருந்தன. நீதிக்கட்சி, அரசியலில் பார்ப்பனர் ஆதிக்கத்தை ஒழித்தது என்பது தற்காலிக வெற்றியைப் போன்றதுதான். இன்னும் நீண்ட தூர அரசியல் பயணம் எஞ்சியிருந்தது. நமது சமுதாய அமைப்பில் பார்ப்பனர்களுடைய ஆதிக்கம் என்பது ‘சநாதனமாக’ (அழிவில்லாததாக) ஆகிவிட்ட ஒன்று. அத்தகைய ஒன்றை ஒழிப்பதற்காகச் சுயமரியாதை இயக்கம் உருவாயிற்று. அப்பெரும் பணியை ஏற்றிருந்த சுயமரியாதை இயக்கத்திற்கு நீதிக்கட்சி தேர்தலில் தோற்றபோது அந்தச் சுமையும் கூடுதலாயிற்று.

சுயமரியாதை இயக்கமும் பார்ப்பனர் அல்லாதார் கட்சியே. ஆதலால் பார்ப்பனர் அல்லாதாரின் இலட்சியங்களை, பிரச்சினைகளை அரசியல் அதிகாரத்தின் மூலம் திராவிட இயக்கமே சாதித்துக்கொள்ள வேண்டும் என எண்ணிப் பெரியாரும் அறிஞர் அண்ணாவும் நீதிக்கட்சியை ஆதரித்தனர். இந்நிலை குறித்து அண்ணா, தி.மு.க. உருவானதற்குப் பிறகு 5-2-1956 தேதியிட்ட ‘திராவிடநாடு’ இதழில் இப்படிக் குறிப்பிடுகிறார்.

“நான், தம்பி! அப்போது ஜஸ்டிஸ் கட்சிக்குப் புகுத்தப்பட்ட புது இரத்தம் – இளவெட்டு – ஜஸ்டிஸ் கட்சி அந்தஸ்தை இழந்து வருகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு என்ற அளவிலே அங்குச் சீமான்களால் அனுமதிக்கப்பட்டு இருந்தேன்; அந்த நிலை கிடைத்ததற்குக் காரணம் ஜஸ்டிஸ் கட்சிக்குச் சுயமரியாதை இயக்கம் துணை புரிந்தாக வேண்டிய கட்டாயம் பிறந்ததுதான்.”

“துணை புரிந்தாக வேண்டிய கட்டாயம்” இயற்கையாக உருவாயிற்று. அதற்குக் கொள்கை அடிப்படையும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது என்று அறிஞர் அண்ணாவின் கூற்றிலிருந்து நாம் தெரிந்துகொள்ள முடிகிறது.

ஆகவேதான் நீதிக்கட்சியில் அறிஞர் அண்ணா அமைப்புச் செயலாளராகவும், உதவிப் பொதுச் செயலாளராகவும் பின்னர் பொதுச் செயலாளராகவும் ஆனார். நீதிக்கட்சியில் அவர் பொறுப்பேற்றது முதல் அதனை மக்கள் இயக்கமாக மாற்ற முயன்றார். சைமன் கமிஷனின் பரிந்துரையால் 1935ஆம் ஆண்டு அரசியல் சீர்திருத்தச் சட்டம் இயற்றப்பட்டது. அதன் அடிப்படையில்தான் 1937ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்று நீதிக்கட்சித் தோற்று காங்கிரஸ் வெற்றிபெற்றது. இராஜாஜி சென்னை மாகாணத்தின் பிரதமர் ஆனார்.

அவர் இந்தியை விருப்பப்பாடமாகப் பள்ளிகளில் புகுத்தினார். இதனால் முதல் இந்தி எதிர்ப்புப் போர் (1937-38) உருவாயிற்று. தேர்தலில் தோற்றிருந்த நீதிக்கட்சிக்கு இந்தி எதிர்ப்புப் போராட்டம் புத்துயிர் கொடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும். நீதிக்கட்சியின் முக்கியத்தலைவர்கள் சிலருக்கு ‘இந்தி எதிர்ப்புப் போராட்டம்’ நடத்துவது பிடிக்கவில்லை. ஆனால் நாட்டில் நிலைமை வேறாக இருந்ததை அத்தலைவர்களால் உணர முடியவில்லை.

19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழகத்தின் சிந்தனைப் போக்கில் பெரிய மாறுதல் ஏற்படத் தொடங்கி இருந்தது. அம்மாறுதலின் வீச்சுதான் முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஆகும்.

இம்முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாகத்தான் அறிஞர் அண்ணா முதன் முதலாக நான்கு மாதங்கள் சிறைத் தண்டனையைப் பெற்றார். போராட்டமோ, மறியலோ செய்ததனால் அறிஞர் அண்ணா கைதுசெய்யப்படவில்லை. சென்னை கதீட்ரல் சாலையில் இந்தியை எதிர்த்துப் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது நாட்டில் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி மிக வேகமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. அண்ணா இந்தியை எதிர்த்துப் பேசியதை – அரசாங்கத்தைக் கைப்பற்றிட அவதூறாகப் பேசி வகுப்பு துவேஷத்தைத் தூண்டிவிட்டதாக அரசினரால் வழக்குத் தொடரப்பட்டு வழங்கப்பட்ட தண்டனைதான் – அந்த நான்கு மாதங்கள்!

அறிஞர் அண்ணா சென்னையிலுள்ள ஒய்எம்சிஏவிலும், காம்ரேட் லிட்டரரி பார்லிமெண்டரியிலும், சென்னைச் சுயமரியாதை சங்கத்திலும் அடிக்கடி பேசுவார். இவர் பேச்சைக் கேட்கப் பலர் வருவர். சென்னைச் சுயமரியாதைச் சங்கக் கூட்டம் தவிர்த்து மேலே உள்ள மற்ற இரண்டு அமைப்புகளிலும் இராஜாஜி, வழக்கறிஞர் வி. சி. கோபால் ரத்னம், டி.செங்கல்வராயன் போன்றோர் அடிக்கடி பங்கேற்பர். அக்கூட்டங்களில் நடக்கும் விவாதங்களில் கலந்துகொண்டு அறிஞர் அண்ணா உரையாற்றி இருக்கிறார்.

அறிஞர் அண்ணா மறைந்து அவர்க்கு இரங்கல் கூட்டம் சென்னைக் கடற்கரையில் நடைபெற்றது. அப்போது இராஜாஜி. “When I was PrimeMinister of Undivided Madras Mr. Annadurai was a smart and small orator denying the God and religion . . .” என்று பேச்சைத் தொடங்கினார். 1937ஆம் ஆண்டில் இராஜாஜிக்குக் கடவுளையும் மதத்தையும் எதிர்க்கிற ஒரு சிறிய, பேச்சாளராக அறிஞர் அண்ணா அறிமுகமாகி இருந்தார்.

புகழ்பெற்ற வழக்கறிஞர் வி.சி. கோபால் ரத்னம் (வி.சி. தேசிகாச்சாரியின் மகன்) பல வகையான புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் உள்ளவர். பம்மல் சம்பந்த முதலியாரின் சுகுண விலாச சபாவின் அங்கத்தினர். நாடக, சிறுகதை எழுத்தாளர். நகைச்சுவையாகப் பேசக்கூடியவர். (ஆங்கிலத்தில் 5 அடிகள் கொண்ட நகைச்சுவையோடு கூடிய லிமரிக்கு வகைப் பாடல்களை மேடைகளில் கூறுவாராம்.) அத்தகைய பேச்சாளரான கோபால் ரத்னம் கலந்துகொண்ட நிகழ்வுகளில் அறிஞர் அண்ணா பேசியிருக்கிறார்.

செங்கல்வராயன் அவர்களோடு பல மேடைகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். தொடக்கத்தில் – 1937இல் சில மேடைகளிலேயே பங்கேற்று இருந்த அண்ணா துறையூரில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டிற்கு “சென்னைத் தோழர் சி. என். அண்ணா துரை தலைமையில்” என்று விளம்பரப்படுத்தப்பட்டது. அம்மாநாட்டில் அண்ணா இந்தி மொழியின் தீமையைப் பற்றி – அது பள்ளிகளில் கட்டாயப் பாடம் ஆக்கப்படக் கூடாது என்பது பற்றிப் பேசினார். இப்பேச்சைக் கேட்டு மாபெரும் சுயமரியாதை இயக்கப் பேச்சாளரான பட்டுக்கோட்டை அழகர்சாமி மிகவும் வியந்து பாராட்டி இருக்கிறார். ஆக, அறிஞர் அண்ணாவின் தலைமை உரையும் சிறை வாழ்வும் சிறை சென்றதற்கான காரணமும் இந்தியாகத்தான் இருந்து இருக்கிறது.

நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் இணைக்கப்பட்டுத் திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றம் (1944) செய்யப்பட்டுவிட்டது. திராவிடர் கழகத்தையே அரசியல் கட்சியாக மாற்ற நினைத்தார் – அண்ணா. பெரியார்க்கு அதில் உடன்பாடு இல்லை. இதன் விரிவுதான் திமுக தோன்ற முழு முதற் காரணமாயிற்று.

நீதிக்கட்சிக் காலத்தில் கலை, இலக்கியம் பற்றி மக்களிடம் எடுத்துக் செல்லப்படவில்லை. இரட்டை ஆட்சிக்காலச் சட்டமன்றத்தில் தமிழ் இலக்கியப் பெருமையைப் பற்றி டாக்டர் நடேசனார் ஓரிருமுறை எடுத்துப் பேசி இருந்தார்; அவ்வளவே!

சுயமரியாதை இயக்கக் காலத்தில் கலை, இலக்கிய விமர்சனம் கடுமையாக இருந்தது. நீதிக்கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கம் இணைந்து இயங்கத் தொடங்கியபோது இராமாயணமும் பெரிய புராணமும் மாபெரும் விவாதப் பொருளாக்கப்பட்டன. பெரியார்க்குத் துணையாக அறிஞர் அண்ணா இருந்தது பெரும்பலமாக இருந்தது. சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளையோடும் நாவலர் சோமசுந்தர பாரதியாரோடும் இராமாயணச் சொற்போர் அறிஞர் அண்ணா நிகழ்த்தும் அளவுக்கு அவ்விதிகாசத்தின் மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இலக்கிய உலகில் இதனை எப்படிப் பார்த்தாலும் மக்களிடையே இவ்விவாதம் புதுமை கலந்த அச்சத்தைத் தோற்றுவித்தது. இன்னொரு முனையில் இளைஞர்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றது.

பெரியாரோடு இராமநாதன் இருந்தார். அழகிரி இருந்தார். (குத்தூசி) குருசாமி இருந்தார். ஜீவா இருந்தார். கைவல்யம் இருந்தார். கி. ஆ. பெ. விசுவநாதம் இருந்தார். கே. எம். பாலசுப்பிரமணியம் இருந்தார். கோவை அய்யாமுத்து இருந்தார். பாரதிதாசன் இருந்தார். இப்படிப் பலர் இருந்தனர். அறிஞர்கள் அநேகர் அவரோடு தொடர்பு வைத்து இருந்தனர். அதில் சிலர் அவரது ‘குடிஅரசு’, ‘விடுதலை’ மற்றும் இதர ஏடுகளிலும் எழுதினர். இவர்கள் எல்லாம் பெரியாரின் இயக்கத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல முயன்றனரே தவிர வெற்றிபெற முடியவில்லை. ஆனால் அறிஞர் அண்ணா வெற்றி பெற்றார். அறிஞர் அண்ணா கல்லூரி நாள்களிலேயே எழுதத் தொடங்கினார். இருந்தாலும் விடுதலையில் அவர் எழுதத் தொடங்கியதற்குப் பிறகுதான் அவரது கருத்தின் ‘பரிமாணம்’ உலகுக்குத் தெரிந்தது.

‘விடுதலை’யில் எழுதுவதற்கு முன்பாக அவர் மேயர் பாசுதேவ் நடத்திய ‘பாலபாரதி’யிலும், காஞ்சி மணி மொழியார் நடத்திய ‘நவயுக’த்திலும் எழுதியிருந்தார். ‘ஆனந்தவிகட’னில் அவரது ஒரு சிறுகதையும் வெளியாகி இருந்தது. இவையெல்லாம் அவர் எழுத்தின் முழுப் பரிமாணத்தை வெளியில் கொணர அடிப்படையாய் அமைந்தன.

ஆங்கில உரைநடையைப் போல அவரது உரைநடை அமைந்து இருந்தது. எழுதுவது போலவே அவர் மேடையில் பேசினார். பேச்சில் ஒரு ‘சங்கீத லயம்’ இருந்தது. அவர் படித்ததையெல்லாம் பேசுவதில்லை. தேவையானதை மட்டுமே பேசுவார். இன்னும் பேசமாட்டாரா என்று எண்ணுகிறபோது அவர் பேச்சை முடித்து விடுவார்.

அவர் தொடங்கி நடத்திய வார ஏடுகளான ‘திராவிடநாடு’ இதழிலும், ‘காஞ்சி’ இதழிலும் கட்சியினரோடு தொடர்புகொள்ள ‘தம்பிக்குக் கடிதம்’ எழுதினார். இப்படி எழுதப்பட்ட மொத்த மடல்களின் எண்ணிக்கை 290. இம்மடல்களிலிருந்து அவரது இயல்பை நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. அம்மடல்களில் அவர் தெரிவிக்கிறார். அடைப்பில் இருப்பது. அவர் எழுதிய தம்பிக்கு மடலின் கால வரிசைப்படுத்தப்பட்ட எண்கள்.

கேட்போர் மனம் குளிரப் பேசுவதில்லை (168); பொருத்தமற்றதை, முறையற்றதை எழுதும் பழக்கம் இல்லை (178); சுடு மொழி கூறும் பழக்கம் இல்லை (65); விரைவாக மன வேதனையை நீக்கிக் கொள்ளும் இயல்பு இல்லை (201); உருட்டி மிரட்டிப் பேசுவதில்லை (255); சொந்த விருப்பு வெறுப்பு அதிக அளவில் இல்லை (283); பதில் கூறிக் காலத்தை வீணாக்கிக்கொள்வதில்லை (86); சுறுசுறுப்புடன் ஓயாது உழைப்பது இல்லை (1); நாள், நேரம்/காலம் பற்றிய நினைவு இருப்பது இல்லை (182).

இப்படிப்பட்ட இயல்பைப் பெற்றிருந்ததை அவரே எழுதி உள்ளார்.

அறிஞர் அண்ணா நாடகங்கள் எழுதினார். அவை திராவிட இயக்கக் கொள்கைகளை விளக்கப் பயன்பட்டன. அவர் எழுதிய நாடகங்களுள் ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்ய’மும், ‘நீதி தேவன் மயக்க’மும் சிறந்த கொள்கை நாடகங்கள். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் வரலாற்றுக் கற்பனையாகும். நீதிதேவன் மயக்கத்தில் புராணப் பாத்திரங்கள் தாமாக வந்து தம் தமது அவலத்தைப் பேசுவது போல அமைந்த உத்தி அதுவரை இல்லாதது. இதன் பிறகுதான் புராணப் பாத்திரங்கள் விமர்சனப் பாங்கில் பேசுகிற உரையாடல்கள் நாடகத்தில், திரைப் படத்தில் இடம்பெற்றன. அறிஞர் அண்ணா எழுத்தின் அனைத்து வடிவங்களிலும் எழுதினார். கவிதை, சிறுகதை, குறுநாவல், நெடுங்கதை, நாடகங்கள், திரைக்கதை, உரையாடல்கள் என இப்படி எழுதிய அவர், வணிக நோக்கத்தோடு எதனையும் எழுதவில்லை. அவர் எழுத்துக்கள் அனைத்தும் கொள்கை சார்ந்தே இருந்தன.

அறிஞர் அண்ணாவைப் பின்பற்றி பலர் எழுதினர். ஏடுகளை நடத்தினர். நீதிக்கட்சிக் காலத்திலோ, சுயமரியாதை இயக்கக் காலத்திலோ, திராவிடர் கழகமாக மாற்றம் பெற்றபோதோ பெரிய எண்ணிக்கையில் ஏடுகள் வெளிவந்தது இல்லை. தி.மு.க. உருவானதற்குப் பிறகு முந்நூற்றுக்கும் மேற்பட்ட ஏடுகள் வெளிவந்தன. அத்தனை ஏடுகளும் விற்றுத் தீர்ந்தன. சில ஏடுகளில் ‘திமுக வார ஏடு’ என்றே போடப்பட்டு வந்தன. அந்த அளவுக்கு அண்ணா கட்சியினர்க்குச் சுதந்திரம் வழங்கினார்.

திரைப்படத் துறையில் ‘வேலை தமக்கு ஒன்று (இருக்க) வேண்டும்’ எனக் கருதி சென்றவர் அல்ல அண்ணா! ‘திரைப்படத் தொடர்பு மூலமாக ஏதேனும் நல்லறிவுப் பிரச்சாரம் செய்ய வழி கிடைக்குமா’ என்ற ஆவல் காரணமாகவே தாம் திரைப்படத் துறைக்குச் சென்றதாக அவரே குறிப்பிட்டு இருக்கிறார். நாடகம் மற்றும் திரைப்படத் துறைக்குத் திராவிட இயக்கத்தினருள் முதன் முதலில் அடியெடுத்துவைத்தவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள்தான்!

அறிஞர் அண்ணாவின் நாடகம் மற்றும் திரைப் படத்துறை நுழைவு மக்களை ஈர்க்கும் விதமாக அமைந்து இருந்தது. இத்துறையிலும் அவரைப் பின்பற்றி அநேகர் எழுதினர். சில பட அதிபர்களுக்கு அறிஞர் அண்ணா திரைக்கதையின் அமைப்பை திருத்தம் செய்து தந்து இருக்கிறார். அதற்காகத் தமது பெயரைத் திரைப்படத்தில் போட வேண்டியதில்லை என்றும் அவர் கேட்டுக்கொண்டது உண்டு. உதயணன் கதையை ஒரு கம்பெனியார் 1945இல் திரைப்படம் ஆக்க முனைந்தபோது நடிகமணி டி. வி. நாராயணசாமியை கதாநாயகனாகப் போட்டால் கதை உரையாடல் அமைத்துத் தருகிறேன் என்று அண்ணா கேட்க, அதற்கு அந்நிறுவனத்தினர் ஒப்புக்கொள்ளவில்லை. அண்ணாவும் அதற்குக் கவலைப்படவில்லை. இது அண்ணாவுக்குக் கிடைத்த முதல் திரைப்பட வாய்ப்பு; இருந்தாலும் அதைப் பற்றி அவர் ஒன்றும் கவலைப்படவில்லை.

‘தாய்க்குப் பின் தாரம்’ படம் எடுப்பதற்கு முன் தேவர் காஞ்சிபுரம் சென்று அறிஞர் அண்ணாவிடம் திரைப்படம் எடுப்பதற்குக் கதை ஒன்று கேட்டார். அப்போது அவர், “என்னிடம் நாய், குதிரை, மாடு, புலி, சிங்கம் போன்ற விலங்குகள் இருக்கின்றன. இதை வைத்து ஒரு கதை இருந்தால் நல்லது” என்று கேட்டு இருக்கிறார். அதற்கு அண்ணா, “நான் எழுதியுள்ள கதைகள் என்று சில இருக்கின்றன. அவை தங்களுக்கு ஏற்றதா என்று பாருங்கள். நீங்கள் வைத்துள்ளவைகளுக்கு என்னால் எழுதித் தர முடியாது. என்னிடமுள்ளவைகளை வேண்டுமானால் பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்று கூறினார். தேவர் வெறுங்கையோடு சென்னைக்குத் திரும்பினார்.

அவர் ஈடுபாடு கொண்ட அத்தனை துறைகளிலும் அவரைப் பின்பற்றியவர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டார்கள். அதற்காகப் பெருமையும் பெருமிதமும் அடைந்தார்கள்.

அறிஞர் அண்ணாவின் பேச்சை, எழுத்தை சுவைத்த கட்சிக்காரர்கள் – அதிகம் படிக்காதவர்கள் – மூன்றாவது, நான்காவது வகுப்புப் படித்த திமுக துணை மன்ற நிர்வாகிகூட அல்ல; அதன் உறுப்பினர் மேடையில் தெளிவாகப் பேசினார்; அரசியல் பேசினார்; அலசினார். சொற்பயிற்சியைப் பெற்றார்; இரவுப் பள்ளிக்குச் சென்று அறிவை வளர்த்துக்கொண்டார். ஆதி மநுவிலிருந்து பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை வரை தி.மு.க. துணை மன்ற உறுப்பினர் படித்தார்; மார்க்சை, லாஸ்கியை தெரிந்துகொண்டார். எழுத்தின் அத்தனை வடிவங்களையும் அவர் புரிந்துகொண்டு பேசினார். கட்சி உறுப்பினர் எந்தச் சமூக விவாதத்திற்கும் எதனையும் எதிர்கொள்வதற்கும் ஆயத்தமாக இருந்தார். இதற்கெல்லாம் காரணம் அறிஞர் அண்ணாவின் பேச்சு, எழுத்து, அவரது எளிமை காரணமாக இருந்தது.

அறிஞர் அண்ணா ஏதுமில்லாதவர்களின் பிரதிநிதியாக இருந்தார். அவர்களை அண்ணா ‘தெருவோரத்து மக்கள்’ என்று அடையாளங் காட்டினார். தம்மையும், கட்சிக்காரர்களையும் ‘சாமான்யர்கள்’ என்று மக்களிடையே அறிமுகப்படுத்திக்கொண்டார். உண்மையில் ‘அவர்கள்’ சாமான்யர்களே! தொண்டை மண்டலப் பகுதிகளில் (சென்னை, செங்கற்பட்டு, வடஆர்க்காடு மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி) வாழும் பாமரனின் பாதிப்பு அவரது உடை, உணவு, பழக்க வழக்கங்கள் மற்றும் பேச்சுகளில் இருந்தன. இது சாதாரண மக்களை வெகுவாகக் கவர்ந்தது. இதனால் அறிஞர் அண்ணாவின் மீது ஒரு நம்பிக்கை தமிழக மக்களுக்குப் பிறந்தது.

திமுக தோற்றுவிக்கப்பட்டவுடன் அதனை அவர் உடனடியாகத் தேர்தலில் ஈடுபடுத்தவில்லை. கட்சியை – அமைப்பை அவர் வளர்த்தமுறை, அதற்கான சட்டத் திட்டங்கள் ஏற்படுத்தியது எல்லாம்தான் இன்றைய தினமும் அக்கட்சித் தாக்குப்பிடிப்பதற்குக் காரணமாகும். இப்போது திமுகவில் 13ஆவது முறையாக அமைப்புத் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

திமுகவில் சார்பு மன்றங்கள், துணை மன்றங்கள், படிப்பகங்கள் அதன் மேல் அமைப்புகளாக இயங்கிய ஊர்க்கிளை, உட்கிளை, வட்டக்கிளை, பேரூர்க்கிளை, நகரக்கிளை, பகுதிக்கிளை, மாவட்டம், தலைமை என அமைப்பு முறைகள்; தேர்தல்கள்; நிர்வாகிகளின் தேர்தல், ஒவ்வொரு அமைப்புக்கும் உட்குழுக்கள் என அமைக்கப்பட்ட விதம் சிறப்பானவை. கம்யூனிஸ்டுக் கட்சியைப் போல திமுகவுக்கு அறிஞர் அண்ணா ‘தலைவர்’ பொறுப்பை ஏற்படுத்தவில்லை. அங்கே பொதுச் செயலாளரே எல்லா அதிகாரமுடையவராக இருந்தார்.

கீழ் அமைப்புத் தீர்மானங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. கீழ் அமைப்புகளில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்த்துவைக்கக் குழுக்களோ அல்லது அதிகாரம் பெற்ற ஒருவரோ பிணக்குகளை விசாரணைசெய்தார். அவரது பரிந்துரைகள் தலைமைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அறிஞர் அண்ணா கழகத்தை ஜனநாயக நெறியில் முழுக்க முழுக்கக் கொண்டுசெலுத்தினார். ஜனநாயகத்தை அவர் அரசை நடத்துகிற முறை மட்டுமன்று; அது ஒரு வாழ்க்கை நெறி என்று கூறினார்.

திமுகவினர் பொதுக்கூட்டம் முதல் மாநாடுகள்வரை நடத்துவதற்கு அறிஞர் அண்ணா காரணமாக இருந்தார். காங்கிரஸ், நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், கம்யூனிஸ்டுக் கட்சியினர் என அனைவரும் மாநாடுகள் நடத்தினர். என்றாலும் திமுகவினர் ‘கலையம்சம்’ உடைய மாநாடுகளை நடத்துவதற்கு அறிஞர் அண்ணாவே காரணம் என்றால், அது மிகையல்ல. பொதுவாக இருவர் சந்திப்பைக்கூட ‘மாநாடு’ என்று அழைக்கலாம். ஆனால், திமுகவினர் மாநாடு நடத்த தொடங்கியதற்குப் பிறகு மிகப் பெரிய அளவில் மக்கள் கூட்டமுள்ள நிகழ்வினைத்தான் ‘மாநாடு’ என்று கூற வேண்டும் என்கிற புதுப்பொருள் நாட்டில் ஏற்படலாயிற்று.

முதலாம் இந்தி எதிர்ப்புப் போராட்டம் (1937-38) ‘தனிநாடு’ கோரிக்கையை முன்நிறுத்தியது. அப்போதைய சென்னை மாகாணத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசுகின்றவர்களும் பேசுகிற நிலப்பகுதிகளும் ஒன்றாக இருந்ததால் முதலில் தனித் தமிழ்நாடு எனக் கோரப்பட்டு – பின்னர் அக்கோரிக்கையே ‘திராவிட நாடு திராவிடருக்கே’ எனும் தனிநாடு கோரிக்கையாக விரிவாக்கப்பட்டது. பெரியாரின் திராவிடர் கழகமும், அறிஞர் அண்ணாவின் திமுகவும் இத்தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தின.

அறிஞர் அண்ணாவின் அரசியல் செல்வாக்கு மக்களிடையே வளர்ச்சி பெறலாயிற்று. 1949இல் அறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட திமுக உடனடியாகத் தேர்தலில் போட்டியிடவில்லை. அறிஞர் அண்ணா அவசரப்படவில்லை. தனிநாடு கோரிக்கையை முன்வைத்து 1957 முதல் திமுக தேர்தலில் போட்டியிட்டு 15 இடங்களை வென்றது. 1962 தேர்தலில் திமுக சார்பாக 50 பேர் வெற்றி பெற்றனர். ஆளுங் காங்கிரஸ் நீண்ட உறக்கத்திலிருந்து விழித்துக்கொண்டது. திமுகவை ஒழிக்கப் பிரிவினைத் தடைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது.

திமுகவைத் தடைசெய்துவிடுவார்கள் என்கிற பேச்சு தமிழகத்தில் மிகப் பலமாக உலா வந்தது. இத் தருணத்தில் அறிஞர் அண்ணா மக்கள் உரிமைக் கழகம் எனும் துணை அமைப்பை கே.நாராயணசாமி முதலியார் தலைமையில் தோற்றுவித்தார். இவ்வமைப்பை அண்ணா இறுதி வரை பயன்படுத்தவில்லை. தடைச்சட்டத்தை கழகம் அதன் சட்டத் திட்டத்தை திருத்திக்கொண்டதன் மூலம் பிரச்சினையை எதிர் கொண்டதால் அவ்வமைப்பை பயன்படுத்தவில்லை. இந்தத் தந்திரத்தை அண்ணா செய்யவில்லை என்றால் திமுகழகம் தடை செய்யப்பட்டு இருக்கும். தமிழ்நாடு அரசியல் களத்தில் திமுக இருந்திருக்காது.

கட்சியின் விதியை எப்படியெல்லாம் திருத்தினால் ‘கழகத்தைக் காப்பாற்ற முடியும்’ என்பதில் அண்ணா கருத்தாக இருந்தார். எம்.கே.நம்பியார் போன்ற வழக்கறிஞர்களோடு கலந்துரையாடி வர இரா.செழியனை அண்ணா அனுப்பிவைத்தார். மொத்தத்தில் கழகம் காப்பாற்றப்பட்டுவிட்டது.

அறிஞர் அண்ணாவின் தலைமையில் உள்ள கழகத்தை மத்திய அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை அண்ணாவோ சாதுர்யமாக ‘நாங்கள் பிரிவினையை கைவிட்டுவிட்டோம். பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன’ என்றார்.

எந்தச் சூழ்நிலையிலும் அவரது உரிமைக்குரலை ஓங்கி ஒலிக்க அவர் தவறியதில்லை. பிரிவினைக் கொள்கையை அவர் கைவிட்டதற்குப் பிறகும் தமிழனின் தனித்தன்மையை அவர் நிலைநாட்டத் தவறியதே இல்லை.

“தமிழன் யாருக்கும் தாழாமல் – யாரையும் தாழ்த்தாமல், எவரையும் சுரண்டாமல் – எவராலும் சுரண்டப்படாமல், யாருக்கும் எசமானனாக இல்லாமல் – உலகில் எவர்க்கும் அடிமையாக இல்லாமல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே எங்களது தலையாயக் கொள்கை.”

“தமிழ் என்ற தொன்மையானதொரு மொழிக்குச் சொந்தக்காரன் நான் என்பதை என்னால் மறக்க முடியாது. என்னுடைய முன்னோர்கள் எந்த மொழியில் பேசினார்களோ, என்னுடைய கவிஞர்கள் எந்த மொழியில் காவியங்களையும் தத்துவங்களையும் வழங்கினார்களோ; வற்றாத அறிவுச் சுரங்கங்களாக விளங்கிய இலக்கண, இலக்கியங்களை எந்த மொழியில் நாங்கள் பெற்றிருக்கிறோமோ, அந்தத் தமிழ் மொழி மைய அரசின் ஆட்சி மொழியாக ஆகும் நாள்வரையில் நான் ஓயமாட்டேன்.”

மேலே உள்ள அவரது பேச்சிலிருந்து நாம் எடுத்துக் காட்டியுள்ள இரண்டு மேற்கோள்கள் அவரது கொள்கை உரத்தைக் காட்டுகின்றன.

திமுகவுக்குப் பலம் பெருகியது; மக்கள் செல்வாக்கு கூடியது. அறிஞர் அண்ணா என்றால் 1966இல் இல்லஸ்டிரேடட் வீக்லியில் அண்ணாவின் பேட்டியின்போது அந்த ஏடு வழங்கிய முன்னுரையில், “எங்கெங்கு எல்லாம் உலகப் பந்தில் தமிழர்ககள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தமிழர்களின் இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பார்” என்று குறிப்பிட்டதுபோல 1962 தேர்தலுக்குப் பிறகு நிலைமை வளர்ந்து இருந்தது. அதே நேரத்தில் அகில இந்திய அளவில் காங்கிரஸ் மக்களிடையே செல்வாக்கு இழந்து வந்தது. ஒரு பக்கம் மத்திய அரசின் சட்டத்திலிருந்து திமுக மீண்டு எழுச்சியுற்ற நேரத்தில், மறுபக்கம் காமராசர் தமது கே-பிளான் மூலம் தமிழகக் காங்கிரஸ் அமைச்சரவையிலிருந்து வெளியேறியதையும் வரலாறு மறப்பதற்கில்லை.

இப்படித் திமுகவின் எழுச்சி – சாதாரண மக்களிடையே அவ்வமைப்புக்கு ஏற்பட்டிருந்த மரியாதை என மிக அதிகமாக இருந்தது. சென்னை மாநகரத்தின் அனைத்துக் குடிசைப் பகுதிகளிலும் திமுக கொடியில்லாத இடத்தைப் பார்க்க முடியாது. தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் வாகனத்தில் சென்றால் தேநீர் விடுதிகள், அழகு நிலையங்கள், சலவையகங்கள் எல்லாம் திமுகவின் ஆதிக்கத்தில் இருந்தன. சாலையோரத்து மரங்களில் எல்லாம் தமிழ் மக்களின் இதயமாய்த் திமுக கொடி எங்கும் பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கிவிட்டது.

ஈ.வெகிசம்பத் அடிப்படைக் கொள்கை சம்பந்தமான பிரச்சினையைக் கிளப்பித் திமுகவிலிருந்து 1961 ஏப்ரலில் விலகினார். அப்போது வெளிவந்துகொண்டிருந்த ‘மெயில்’ ஏடு ஒரு கேலிச்சித்திரம் வெளியிட்டது. அதில், திமுக என்கிற கொழுத்த மாடு இரண்டாகப் பிளக்கப்படுகிறது. முன் பகுதியைச் சம்பத் பிடித்துச் செல்கிறார். பின்பகுதியில் அம்மாடு போடும் சாணத்தை ஒரு கூடையில் ஏந்தி வருகிறார் – அண்ணா! ‘மெயில்’ அண்ணாவை அந்த அளவுக்குக் கேலிசெய்தது. ஆனால், சம்பத் எழுப்பிய பிரச்சினைகளுள் உண்மைகள் இல்லாமல் இல்லை. ஆனால் அண்ணாவின் செல்லாக்குக்கு முன் அவை எடுபடவில்லை.

சம்பத் விலகலுக்குப் பின்னும் திமுகவில் அண்ணாவுக்கு எதிராகச் சிலர் சலசலப்புக் காட்டி வந்தனர். அவர்கள் தமிழ்வாணனின் ‘கல்கண்டு’ வார இதழின் மூலமாக அந்த எண்ணங்களை – அவர்களது உள்ளக் கிடக்கைகளை வெளியிட்டனர். அந்தக் ‘கல்கண்டு’ இதழ்களில் வெளியான தலைப்புகளைப் பாருங்கள். அடைப்பில் ‘கல்கண்டு’ இதழின் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. திமுகவில் பிளவு (23.7.1964), அண்ணாவுக்கு அடுத்தவர் நாஞ்சில் மனோகரன் (15.10.1964), அண்ணா சொல்லியும் கேட்கவில்லை (3.9.1964), அண்ணா பெரியாராகிறார் (24.6.1965), எம்.ஜி.ஆரின் புகழ் அண்ணாவுக்கு இல்லை; எம்ஜிஆரை யாரும் எதுவும் செய்துவிட முடியாது (3.7.1965), அண்ணா யார்? எனும் தொடர் கட்டுரை (22.7.1965 இலிருந்து 15.10.1965 தேதியிட்ட ‘கல்கண்டு’ இதழ்கள்) என அண்ணாவுக்கு எதிராக கருத்துகள் வெளிவந்தன.

இப்படிப் பல நிகழ்வுகள் நடந்துகொண்டேயிருந்தன. இவையெல்லாம் அறிஞர் அண்ணாவின் செல்வாக்கைக் குறைக்கவே இல்லை. மாறாக அவை வளரவே துணை நின்றன. காங்கிரசுக்கு மாற்று திமுகதான் எனும் மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்.

அறிஞர் அண்ணா புத்தகங்ளை மிக வேகமாகப் படிக்கக் கூடியவர். அவரது மரண படுக்கையில்கூட ‘மாஸ்டர் கிரிஸ்டியன்’ எனும் ஆங்கில நாவலைப் படித்துக்கொண்டிருந்தவர். அப்படிப்பட்ட படிப்பார்வம் உள்ளவர். இப்புத்தகத்தினுடைய தமிழ் மொழி பெயர்ப்பை – ‘புரட்சித்துறவி’ எனும் தலைப்பிட்டு குமுதம் ஏடு – அண்ணா மரணமடைந்த சில நாள்களுக்குப் பிறகு வெளியிட்டது.

அந்த ஆர்வம் பொழுதுபோக்கு அல்ல. எந்த நிலையிலும் சிந்தனையை வளப்படுத்திக்கொள்ளுவது; மேலும் சிந்திப்பது, எழுதுவது, பேசுவது – இது அவரது இயல்பு; இவை எதற்காக? தமிழக மக்களுக்காக! `எனக்கென்று நீங்கள் கிடைத்தீர்கள்; உங்களுக்கென்று நான் கிடைத்தேன். யார் என்ன பேசினாலும் இந்தப் பிணைப்பை எவர் என்ன செய்ய முடியும்?’ எனக் கூறிக் கழகத்தினரையும் தமிழர்களுள் அவரை விரும்புகின்றவர்களையும் பாசக் கய